கவிதைகள்
நீரிழிவுச் சவாலதனை நாம்நினைத்தால் நீக்கிடலாம்!…. ( கவிதை ) ….. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.
இனிப்புச் சுவையினை ஏற்றிடும் கடவுளாய்
இருக்கிறார் எங்கள் விநாயகப் பெருமான்
இனிப்புடை எள்ளு இனிப்புடை அவலும்
சுவமிகு முக்கனி விரும்புவார் விநாயகர்
எம்பெருமான் பிள்ளையார் கையிருக்கும் மோதகம்
இனிப்புச் சுவையினுக்கு ஏற்றபொரு ளாகிருக்கு
மோதகத்துள் ஒழிந்திருக்கும் இனிப்பதனை எண்ணுகையில்
நாவூறி நமக்கெல்லாம் நல்மகிழ்வே எழுகிறது
குழந்தைகள் விரும்புவார் குமரரும் விரும்புவார்
வளர்ந்தோரும் விரும்புவார் வயோதிபரும் விரும்புவார்
இனங்கடந்து மொழிகடந்து எல்லையெலாம் கடந்து
இனிப்புச் சுவையென்பது இமயமாய் நிற்கிறது
எல்லா உணவிலும் இனிப்பு இருக்கிறது
எல்லார் உணர்விலும் இனிப்பு இருக்கிறது
எல்லோர் வாழ்வுக்கும் இனிப்பது தேவைதான்
எல்லையது மீறினால் இனிப்பது தீமைதான்
லட்டை உண்போம் சீனிப்புட்டை உண்போம்
இனிப்புடை பட்சணம் தனிச்சுவை என்போம்
தேனையும் விடோம் திரட்டிப்பாகினையும் விடோம்
பாயாசம் கண்டால் பருகியே மகிழுவோம்
கிழங்குக ளவிப்போம் இனிப்பினைக் கலப்போம்
இனிப்புக் கூழினைச் சுவைத்துமே ரசிப்போம்
ஐஸ்கிறீம் வகைகள் நாடியே நிற்போம்
அல்வா வகைகளைத் தேடியே வாங்குவோம்
திருமணம் என்றால் தித்திப்பு நிறையும்
வகை வகையாக பட்சணம் குவியும்
விரும்பிய வரைக்கும் எடுத்துமே நிற்போம்
வேதனை வருவதைக் கவனத்தில் எடுக்கோம்
இனிப்பு என்பது எல்லோர்க்கும் தேவை
இனிப்பை நாடியே எல்லோரும் செல்வர்
அளவுடன் எடுத்தால் அனைவர்க்கும் நலனே
அளவினை மீறினால் ஆபத்து பலனே
சுவையினைக் கொடுக்கும் இனிப்பெனும் சுவையே
சுமையென வாழ்வினில் ஆகியே இருக்கு
சர்க்கரை வியாதியாய் சமூகத்தைப் பிடித்து
உலகினை இப்போ உலுக்கியே எடுக்குது
சர்க்கரை முதலாளி விற்கிறார் சர்க்கரை
விற்றிடும் பொருளினால் ஈட்டுறார் பெரும்பொருள்
நிம்மதி யின்றியே தவிக்கிறார் வாழ்வெலாம்
சர்க்கரை நோயது உடமையாய் ஆகுது
நீரிழிவு இப்போ நீக்கமற நிறைந்திருக்கு
நீள்சுகத்தை இழப்பதற்குக் காரணமாய் ஆகிருக்கு
பார்முழுக்க நீரிழிவை வேரறுக்க வேண்டுமென
ஆராய்ச்சி அறிஞரெலாம் அயராமல் உழைக்கின்றார்
மருந்துபல வந்தாலும் மனவடக்கம் முக்கியமே
விருந்துபல வந்தாலும் விலத்தியுண்ணல் முக்கியமே
பெருந்தீனி உண்ணுவதும் பெருத்தவுடல் பேணுவதும்
நீரிழிவின் பேரழிவைக் கூட்டிடவே கைகொடுக்கும்
நீரிழிவை நோயெனவே கொள்ளாதீர் எனவுரைக்கும்
பேருரைகள் பலவற்றை வைத்தியரே வழங்குகிறார்
குறைபாடே எனவுரைத்து கூறுகிறார் பலதீர்வை
அவருரையை அனைவருமே அகமிருத்தல் அவசியமே
தொல்லை தருமொன்றாக நீரிழிவு இருக்கிறதாம்
கொல்லுகின்ற ஒன்றாக இல்லையென வுரைக்கின்றார்
நல்லுணவைத் தேர்ந்தெடுத்து நாளுமுண்ணச் சொல்லுகிறார்
நாளுமே நடைப்பயிற்சி நற்பலனை நல்கிடுமாம்
நீரிழிவு வந்துவிடால் நெருங்கிவரும் பலசிக்கல்
இருதயத்தை தாக்கிவிட எக்கணமும் இடிவரலாம்
இரத்தோட்டம் தடைப்படலாம் இயங்குநிலை தடைப்படலாம்
எங்கிருந்தோ பலதொல்லை சொல்லாமல் வந்திடலாம்
வாழ்வியலை ஒழுங்காக்கி வாழவெண்ணல் முக்கியமே
மனம்போன போக்கினிலே வாழவெண்ணல் தவிர்த்திடுவோம்
உடற்பயிற்சி செய்திடுவோம் உளப்பயிற்சி செய்திடுவோம்
உயிர்காக்கும் யோகாவை உளநிறைக்க நினைந்திடுவோம்
நீரிழிவுச் சவாலதனை நாம்நினைத்தால் நீக்கிடலாம்
பேரழிப்பைத் தவிர்த்திடலாம் பெருமையுடன் வாழ்ந்திடலாம்
ஒழுக்கமுடை வாழ்வுதனை உளமிருத்தி வாழ்ந்துவிடின்
உருக்கொள்ளும் நீரிழிவை உருத்தெரியா தாக்கிடலாம்