கவிதைகள்
பண்பறியா பதராவீரோ?…. ( கவிதை ) ….. சங்கர சுப்பிரமணியன்.
மழைநீர் மண்ணில் சேர்வதை
எவரும் தவறென்பாரோ ஆறுகள் கடலில் கலப்பதை அநீதி என்பாரும் இங்குண்டோ உமையொரு பாகனென்று சிவனுடன் உமை இணைவதை எவரும் ஏற்றிடல் இல்லயோ ஒருவர் இழுத்து வெளியிட்ட காற்றும் இன்னொருவர் மூச்சில் இணையாதோ ஒரு மலரின் மகரந்தத் தூள் மற்றொரு சூலை அடைந்தால் இயற்கையில் சூலுறுவது நிகழாதோ வறியோர் விளைவித்த பொருளுமே செல்வந்தர் வீட்டின் உட்புகாதோ தவளை மீன் யாவும் வாழ்கின்ற நீரும் தாகத்தை தீர்க்கவும் உதவாதோ சேற்றில் மலர்ந்த செந்தாமரையும் சேரும் இடம் என்று வேறுள்ளதோ காற்றிலே உன்மூச்சும் ஒருநாள் கலந்து நீ மறைவாய் என்றறிந்தும் காட்டிலும் உனக்கொரு பிடிமண் சொந்தமில்லை என்பதுணர்ந்தும் நாட்டிலே ஒரு யுவனும் ஒரு யுவதியும் மனமொத்து சொந்தம் கொண்டால் வீட்டில் பூட்டிவைத்து விலங்கிடுவரோ பாட்டில் சொன்ன பிறப்பொக்குமென நாட்டமிகு பண்பின் பதமறியா பதராவீரோ? -சங்கர சுப்பிரமணியன்.