மக்கள் மனத்தில் நிறைந்த மக்கள் திலகம் MGR …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.
ஈழத்தில் பிறந்தார். இன்னல் பல கண்டார். எதற்குமே இளைக்காமல் ஏற்றம் பல பெற்றார்.இரக்கமே அவருள் எங்கும் வியாபித்து நின்றதால் என்றுமே மக்கள் மனத்தில் நீங்கா இடம்கொண்டார். இதயக் கனியானார்.
வாழவைத்த தெய்வமானார்.கலங்கரை விளக்கமானார்.எங்க வீட்டுப் பிள்ளை ஆகி என்றுமே மக்கள் திலகமாக எம் ஜி ஆர் விளங்குகிறார்.
அவர்கடந்து வந்த பாதை கல்லும், முள்ளும், காட்டாறுகளும் நிரம்பியதாகும்.அவர் தென்றலைத் தீண்டியதி ல்லை.தேன் தொட்டு நின்றதும் இல்லை.பஞ்சணையில் படுத்ததும் இல்லை.பசியாற உண்டதும் இல்லை.
அரைவயிறு,கால் வயிறுதான், அவருக்கும் அவரது குடும்பத்துக்குமே கிடைத்தது.
நல்ல நிலையில் வாழ்ந்த குடும்பம் நலிவடைந்து போனதால் நாட்டை விட்டு நாடுவரும் நிலையங்கு தோன்றியது.தந்தையை இளம் வயதில் பறி கொடுத்துவிட்டு தாயுடனும் சகோதரருடனும் ஈழத்தைவிட்டு இந்தியா வந்தனர் எம் ஜி ஆர் குடும்பத்தார்.
பசியைப் போக்குவதே பெரும்பாடாக இருந்தமையால் படிப்பு என்பதை நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்றாகி இருந்தது.பாலகனான எம் ஜி ஆர் மூன்றாம் வகுப்புடன் பள்ளியை விட்டு நாடகத் துறைக்குள் புகுந்துவிடும் நிலை உருவானது.வருமானத்துக்கு நடிப்பே வழிகாட்டியது.
எழுத்தாளர் அனுராத ரமணனின் தாத்தா குடிலன் ஆர். பாலசுப்பிரமணியன் எம் ஜி ஆரின் ஆசிரியராக இருந்தார். இவர் பிற்காலத்தில் குணசித்திர நடிகரானார்.
நாடகத்தில் இருந்து படிப்படியாக திரைத்துறைக்குள் எம் ஜி ஆர் வந்து சேர்ந்தார்.1945 ல் ஜுபிடர் நிறுவனத்தார் எம்ஜிஆரை தமது படங்களான ராஜகுமாரி, அபிமன்யு, படங்கள் வாயிலாக கதாநாயகன் ஆக்கினார்கள்.
1947 – 1948 காலப் பகுதியில் எம்ஜிஆருக்குக் கிடைத்த மாதச் சம்பளம் எவ்வளவு தெரியுமா ரூ350 ஆகும்.
இக்காலகட்டமானது எம்ஜிஆரின் முதல்காலகட்டம் எனக் கொள்ளலாம். சாதாரண எம்ஜிஆராக அவர் இருந் தாலும் அவருக்குள்ளே– தான் முனேற வேண்டும் என்னும் என்னும் வேகமே காணப்பட்டது எனலாம். அவர் யாரையும் நோகடிக்கமாட்டார் .முரண்டு பிடிக்க மாட்டார். மரியாதை கொடுப்பார்.சற்றுக் கூச்சச் சுபாபம் உள்ளவ ராகவும் காணப்பட்டார்.காந்தியச் சிந்தனை அவர்மனத்தில் அக்காலத்தில் பதிந்து காணப்பட்டது.அவரிடம் கடவுள் நம்பிக்கையிருந்தது.உருத்திராட்சம் அணிந்திருந்தார். அவர் பிற்காலத்தில் திமுகவில் இணைந்திருந்தாலும் சில கொள்கைகளில் விடாப் பிடியாக இருந்தாலும் … கடவுள் நம்பிக்கையை பழித்ததோ, குறைகூறியதோ இல்லை என்றே சொல்லலாம்.
” பக்தியுள்ளவர்கள் சாமி கும்பிட வேண்டும்.சாமி கும்பிட வேண்டாம் என்று நான் சொல்லத் தயாரில்லை. ஆனால் கடவுளின் பெயரால் ஏமாற்ற நினைக்காதீர்கள்.மோசடிகள் செய்ய முயலாதீர்கள்.என்பதே என் வேண்டு கோள். ஒன்றே குலம் ஒருவனே தேவன் இதுதான் என் கொள்கை ” என்று 15/ 12/ 1962 ல் மருதமலை முருகன் கோவிலில் எம்ஜிஆர் அவர்கள் பேசி இருக்கிறார்கள்.
எம்ஜிஆர் அவர்களின் ஸ்டூடியோவில் 14 வருடங்கள் பணிபுரிந்தவர் திருமதி ஜோதி பிரபா. எம்ஜிஆரின் கடவுள் நினைப்புப் பற்றி அவரே சொல்லி இருக்கிறார்.எம்ஜிஆர் வீட்டில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் பொழுது
கேக்கின் மேல் வைக்கப்பட்ட மெழுகு திரியை அணைத்த பொழுது எம்ஜிஆர் அவர்கள் …… ” ஏற்றிய ஒளியைப் பிறந்த நாளன்று அணைப்பது தவறு…. கேக் வெட்டுவது எல்லாம் மேலை நாட்டினர் பழக்கம்… நமக்குத் தேவை யில்லை. நமது பண்பாடு கோவிலுக்குச் சென்று இறைவனை வேண்டுவோம்.இயலாதவர்களுக்கு ஏதாவது கொடுத்து அவர்கள் வாழ்த்தையும், பெரியவர்கள் வாழ்த்தையும் பெறவேண்டும்.. என்று கண்டித்தாக குறிப்பிடுகிறார்.
எம்ஜிஆர் அவர்கள் தமது அம்மாவின் நினைவு நாளில் மெளன விரதம் இருப்பாராம். அவருடை செயினில் இருக்கும் அம்மாவின் படம் பதித்த டாலருக்கு தினமும் சந்தனம் வைத்து அதனை தனது பனியனுள் வைத்துக்
கொள்ளுவாராம்.கடவுள் மீது ஆழ்ந்த நம்பிக்கை இருந்தாலும் அதனை வெளியே காட்டிக்கொள்ள மாட்டாராம் என்று அவரிடம் பணிபுரிந்த ஜோதி பிரபா சுட்டிக்காட்டுகிறார்.
எம்ஜிஆர் அவர்களின் மனதில் ஆத்மீகச் சிந்தனை இருந்து கொண்டே வந்திருக் கிறது.ஆனால் வெளியே அதனை விளம்பரப் படுத்திட அவர் விரும்பவில்லை என்றே எண்ணமுடிகிறது.இந்த ஆத்மீக பலமே அவரைப் பல இன்னல்களிலும் இருந்து காப்பாற்றியது என்பதையும் மறுப்பதற்கில்லை எனலாம்.
நடிகமணி டி.வி. நாராயணசாமி என்பரே எம்ஜிஆர் அவர்கள் திமுக சார்பானவராக மாறக்காரணம் என்று சொல்லப்படுவதும் உண்டு.அண்ணா அவர்களோடு நெருங்கவும் திமுக காரனாக மாறவும் ஆன ஒரு சூழ்நிலைக்கு எம்ஜிஆர் அவர்களுக்கு ஏற்பட்டது.இதனால் அரசியலிலும், சினிவாவிலும் செல்வாக்கு மிக்கவராக உருவாகத் தொடங்கினார்.
எம்ஜிஆர் அவர்களுக்கு அண்ணா அவர்களிடம் மிகுந்த விருப்பும், மரியாதையும் இருந்தது. திமுகாவில் அவர் இணைந்தாலும் திமுகவின் கொள்கைகளில் பூரண ஐக்கியம் இருந்திருக்கிறதா என்பது சந்தேகமே! அவர் மனம் ஆஸ்த்திகத்தையே நாடி நின்றது எனலாம்.
மதுரையில் எம்ஜிஆர் அவர்களுக்கு வளங்கப்பட்ட வெள்ளி வாளை மூகாம்பிகை அம்மனுக்கே வளங்கி னார்.காஞ்சிப் பெரியவரே எம் ஜிஆரை ” இவர் நல்லமனுஷன் “என்று சொல்லியிருக்கிறார் என்றால் ஆஸ்த்தி கத்தின் செல்வாக்கு எம்ஜிஆர் அவர்களிடம் நிறைந்தே இருந்திருக்கத்தானே வேண்டும்.
முருகபக்தரான திருமுருக வாரியார் சுவாமிகளுக்கு திமுக தொண்டர்களால் தேவையற்ற தொல்லைகள் ஏற்பட்ட வேளை அவரையும் சமாதானம் செய்து …. அண்ணாவையும் சமாதானம் ஆக்கி.. வாரியார் சுவாமிகளைக் கொண்டே” பொன்மனச் செம்மல் ” என்னும் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார் எம்ஜிஆர் என்றால் …. அங்கும் அடியாக இருந்தது ஆஸ்திக வேரே எனலாம்.அவரின் அந்த ஆஸ்த்திக நம்பிக்கைதான் அவரை அதியுயர் நிலைக் குக் கொண்டுசென்றிருக்கலாம் என்பது எனது எண்ணக்கிடக்கையாகும்.
தேவருக்கும் எம்ஜிஆர் அவர்களுக்கும் மிகவும் நெருக்கம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமாகும்.தான் அரசியலில் பிரவேசித்துக் கட்சி தொடங்குவது , தேர்தலில் நிற்பது பற்றியெல்லாம் எம்ஜிஆர் சொன்ன போது …. எம்ஜிஆர் நல்லபடி வெற்றி பெறவேண்டு மென்று தேவர் மருதமலை முருகனுக்குக் காணிக்கையும் செலுத்தி
அரிச்சனையும் செய்து , விபூதிப்பிரசாதத்துடன் எம் ஜி ஆரிடம் வந்து கொடுக்கிறார். எம் ஜி ஆரும் தேவர் கொடு த்த பிரசாதத்தை வேண்டாம் என்று சொல்லாமல் … அதனை வாங்கிக்கொள்கின்றார்.இவையெல்லாம் மக்கள் திலகத்தின் ஆஸ்த்திகத்துக்கு நல்ல எடுத்துக்காட்டுகள் அல்லவா ?
பிராமணரை எதிர்ப்பது என்பது திராவிடக் கட்சிகளின் மிகப்பெரிய பிரசாரமாகும். ஆனால் எம்ஜிஆர் கருத்து சற்று வித்தியாசமானதாகவே காணப்பட்டது.” முன்னேறிய ஜாதிகளிலும் ஏழைகள் இருக்கிறார்கள்.அவர்களுடைய கஷ்டங்களும் தீரவேண்டும் “என்று எம்ஜிஆர் கூறினார்.ஆனால் அவரின் கட்சிக்கு இது ஒத்துவராத கொள்கை தான். கடும் எதிர்ப்பு வந்ததும் அதைப்பற்றிப் பேசாமலேயே இருந்துவிட்டார்.
எம்ஜிஆர் ரசிகமன்றத்தையே முதன் முதலாக தோற்றுவிக்கக் காரணமாயிருந்ததே யார் என நினைக்கிறீர்கள்? கல்யாணம் என்னும் ஏழைப் பிராமண இளைஞனே !
எம்ஜிஆர் மனத்தில் இவையெல்லாம் பிற்காலத்தில் பலமாற்றங்களுக்கும் சிந்தனைக்கும் வித்திட்டிருக்கலாம் அல்லவா?
ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் எம்ஜிஆர் அவர்கள் படப் பிடிப்போடு நின்று அதில் தீவிரம் காட்டத் தொடங் கினார்.திராவிட நாடு பிரிவினையை அண்ணா அவர்கள் கைவிட்ட போது எம்ஜிஆர் அவர்கள் அதனைக் கண்டு கொள்ளவேயில்லை. ஹிந்தி எதிர்ப்புக் காலத்தும் அவரின் ஈடுபாடு அவ்வளவு இருந்ததாகவும் தெரியவில்லை.
திமுக கொள்கைகளைவிட …. அவர்களது பேச்சாற்றல், நல்ல தமிழ் எழுத்து, அதுமட்டுமல்லாமல் அந்தக்கட்சியில் தனக்குக் கிடைத்த வரவேற்பு, செல்வாக்கு, இவைதான் எம்ஜிஆர் அவர்களைக் கவர்ந்திருந்தது என்பதே உண்மையாகும்.
ஆனால் எதையும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் தனது செயல்களில் உற்சாகமாக உழைப்பதை மட்டும் விட்டுவிடாமலும் இருந்தார். அவரிடம் சில கொள்கைகள் இருந்தன. அவற்றை அவர் விட்டுக்கொடுக்கவே மாட்டார்.அதே வேளை தனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக வற்புறுத்தவும் மாட்டார்.முன் கோபம் உள்ளவர். ஆனால் பின்னர் சரியான காரணத்தை எடுத்துக் கூறினால் சமாதானம் ஆகியும்விடுவார்.சந்தேகமும் அவரிடம் காணப்பட்டதாகப் பலகுறிப்புகள் வாயிலாக அறியமுடிகிறது.பலம்களும் பல்வீனங்களும்தான் மனித வாழ்க்கை. அதில் இருந்து யருமே விட்டுவிலகவே முடியாதல்லவா ?
எம்ஜிஆர் படங்களுக்குப் பல வெற்றிப்பாடல்களைக் கொடுத்து எம்ஜிஆர் அவர்களின் அன்புக்கும் நட்புக்கும் பாத்திரமாய் இருந்தவர் கவிஞ்ஞர் வாலி அவர்கள். அவர் ஸ்ரீரங்கத்துப் பிராமணர். நெற்றியில் விபூதி இல்லாமல் அவர்வருவதே இல்லை.ஒரு படப்பிடிப்பின் போது .. எம்ஜிஆர் அவர்கள் .. வாலியிடம் .. தான் சார்ந்தகட்சியினர்
விபூதியணியும் வாலியை எப்படிப் பாட்டெழுத சமமதித்தாய்? எங்கள் கட்சியில் வேறு ஆட்களா இல்லை என்று கேள்விமேல் கேள்வி கேட்கிறார்கள். ஆகையால் இனி வரும்போது விபூதியை இட்டுக்கொள்ளாமல் வந்தால் நல்லது என்று எம்ஜிஆர் வாலியிடம் சொல்ல நேர்ந்தது.
அதற்கு வாலி சொன்னார்- அப்படியா அண்ணா! நல்லது நீங்கள் வேறு பொருத்தமானவரை பார்த்து எழுதச் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு புறப்பட ஆயத்தமானார்.ஆனால் பொன்மனச் செம்மல் அவரைச் சமாதானப் படுத்தி உங்கள் விருப்பப்படியே விபூதியுடனே எழுதுங்கள் என்று சொன்னதாக .. வாலிஅவர்களே கூறியிருக்கிறா ர்கள்.
தனது கருத்தைச் சொன்னார்.ஆனால் மற்றவர் வருந்த மக்கள் திலகம் முயலவில்லை.இதனால் வாலியும் அவரும் நீண்டகாலம் கலையுலக் நண்பர்களாகவே இருந்ததை யாவரும் அறிவர். எம்ஜிஆர் இயல்பாகவே எந்தக் கெட்டபழக்கமும் இல்லாதவர்.ஒழுக்கமாக வாழ்ந்தவர். ஏழ்மையை நன்கு அனுபவித்தவர்.வீடு இல்லாமல், படிக்க முடியாமல், பணம் இல்லாமல், ஆதரவு இல்லாமல், வாழ்ந்து வந்தவர்.இல்லாமை இல்லாமல் போக வேண்டும். . எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்.குடிசைகள் குடியிருக்கும் நல்லமனை ஆகவேண்டும்.ஏழைஎன்று சொல் லும் நிலை இருக்கவே கூடாது.கல்வி அனைவருக்கும் கிடைக்கவேண்டும் ,உணவு அனைவருக்கும் கிடைக்க வேண்டும், மடமை ஒழிந்து மக்கள் விழிப்புப் பெறவேண்டும். என்றெல்லாம் எம்ஜிஆர் மனத்தில் பெரிய கனவு இருந்தது.
அந்தக் கனவுகளை கண்முன்னே கொண்டுவந்து மக்களுக்கு வெளிச்சமாகக் காட்டி அவர்கள் வாழ்க்கையில் நம்பிக்கை ஊட்டவேண்டும் என்றுவிரும்பினார்.அதற்கு அவர் கையில் எடுத்த உத்திதான் தமிழ்ச் சினிமா.
எப்படி எப்படி எல்லாம் கனவுகண்டாரோ அப்படியே அதே பாத்திரமாகவே சினிமாவில் எம்ஜிஆர் அவர்கள் தோன் றினார்.வெற்றியும் கண்டார்.அந்த வெற்றிதான் அவரைத் தமிழ் நாட்டின் முதன்மந்திரி பதவியைத் தேடிக் கொடு த்தது. உயர், மத்தியதர, மக்களை இலக்காகக் கொள்ளாமல்… தொழிலாளர்கள், விவசாயமக்கள், கீழ், மத்திய
தரத்தினரை தனது இலக்காகாக் கொண்டு… ஏழைபங்காளனாக, வீரனாக, நீதியை நிலை நாட்டுபவ னாக சமதர்மவாதியாக, என்று .. நல்ல குணமுடைய , யாவரும் விரும்பும் பாத்திரங்களாகத் தேர்ந்தெடுத்து… அதற்கு ஏற்ப கதை , வசனம் ,பாடல்கள், காட்சிகள் அமைத்து எம்ஜிஆர் மக்கள் மனத்தில் குடியேறி நின்றார்.
எம்ஜிஆர் அவர்களின் படங்களில் சமூகத்தளைகளை மீறி தனிமனித மேல் நிலைப் பாட்டை எய்தமுடியும் என்ற கருத்து மிகச் செப்பமாகப் பதியவைக்கப் பெற்றது.அவர் சித்தரித்த பாத்திரங்களின் குணாம்சங்களைக் கொண்ட ஒருவரகவே அவர் போற்றப்பட்டார்.
இதனால் தமிழ்நாட்டின் நடுமட்டத்திற்குக் கீழ்வந்த சமூகப்படி நிலையினர் இடையே அவர் ஒரு புருஷராகவே போற்றப்பட்டார்.தம் நிலையிலுள்ள ஒருவர் மேல் நிலை அடைந்ததாகவே அவர் உயர்ச்சியையும் புகழையும் .. அச் சமூக மட்டங்களைச் சேர்ந்தோர் நம்பினார்கள்.
இதனால் தன்னம்பிக்கையும், சுயவளர்ச்சி பற்றிய பிரக்ஞையும் உள்ள ஓர் இளைஞ்ஞர் குழாம் தமிழ்நாட்டில் வளரத்தொடங்கியது எனலாம். எம்ஜிஆர் தனது கவர்ச்சியின் தளமாக … தமிழ் பற்றிய நிலைப்பாட்டினைக் கொள் ளவில்லை. இன்றும்கூட கலைஞ்ஞர் கருணாநிதியோடு தொடர்புறுத்தப்படும் தமிழ்த்தன்மை எம்ஜிஆர் அவர்க ளொடு பொருத்திப் பார்க்கப்படுவதில்லை.எம்ஜிஆர் அவர்களுடைய அறைகூவல் நல்ல நேர்மையான மனிதனாக வரவேண்டும் என்பது பற்றியதாகாவே காணப்பட்டது.
இன்று எம்ஜிஆர் அவர்கள் இல்லாத நிலையிற்கூட .. நினைத்துப் பார்க்கும்பொழுது… அவரின் தொடர்பாற்றல் திறனால் அவர் தன்னைப் பற்றிய மதிப்பீட்டினை உயர்த்துவதற்கு ஏற்றவகையில் நடந்துகொண்ட ஒருவர் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது எனலாம்.
எம்ஜிஆர் அவர்களை உண்மையில் திராவிட இயக்கச் சினிமாத்துறைச் செயற்பாட்டுச் சாதனைகளிலிருந்து நோக்காது … அதனைத் தளமாகாக் கொண்டு வளர்ந்து ..தனக்கென ஓரிடத்தினை வகுத்துக் கொண்டார் என்றே கூறல் வேண்டும்.மேலும் அண்ணா, கலைஞ்ஞர் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து வேறுபட்ட ஒரு சமூகத்தாக்க
த்தையே இவர் ஏற்படுத்தினார் என்றே கொள்ளல் வேண்டும்.
அண்ணாவின் பாசறையில் வளர்ந்தாலும் எம்ஜிஆர் அவர்கள் அண்ணாவிடம் இருந்த நல்லகுணங்களையே எடுத்துக்கொண்டார்.தனக்கென உள்ளவற்றைப் பறிகொடுக்கவிரும்பவில்லை. சரியெனப் பட்டதை சமயத்தில் வெளிப்படுத்தித் தன்னுடைய தனியியல்பையும் அவர் வெளிப்படுத்தத் தவறியதும் இல்லை.எம்ஜிஆர் அவர்கள் எம்ஜிஆர் ஆகவே இருக்க விரும்புகிறார் என்பதை பேரறிஞர் அண்ணாவும் அறிந்து வைந்திருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.
நீதியை, நியாயத்தை, விட்டுவிட எம்ஜிஆர் விரும்பவில்லை.நீதியும் நியாயமும் எடுபடா நிலையில்த்தான் அவருக்கும் ஏனையோருக்கும் கருத்து மோதல் வந்து பிரியும் நிலை ஏற்பட்டது.அந்த நேர்மைதான் அவரை மக்கள் மனத்தில் என்றும் மக்கள் திலகம் ஆக்கியது.
தமிழ்ச் சினிமாவில், அரசியலில், தனிப்பட்ட நடைமுறையில் எல்லாம் எம்ஜிஆர் அவர்களை ஒரு காலபுஷன் என்றுதான் சொல்ல வேண்டும்.நல்ல நண்பனாக இருந்துள்ளார் நல்ல நடிகனாக இருந்துள்ளார். சிறந்த கொடைவள்ளலாக விளங்கியுள்ளார்.கடின உழைப்பாளியாகவும் இருந்துள்ளார்.சிறந்த தொண்டனாகவும் இருந்துள்ளார்.அதேவேளை நல்ல அரசியல் ஆட்சியாளனாகவும் விளங்கியுள்ளார்.
எம்ஜிஆர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பு ஏற்றவேளையில் பல அருமையான பணிகளை எல்லாம் ஆற்றியிருக்கி ன்றார்.இலவசங்கள் பலவற்றை ஈந்து எல்லோர் மனங்களிலும் மன்னாதி மன்னனானார்.
மதுவிலக்கை 1984ல் அமுலுக்குக் கொண்டுவந்தார். தமிழர் அல்லாதவர் எம்ஜிஆர் என்றும் … அவர் ஒரு மலையாளி என்றும் பிரசாரம் செய்யப்பட்டாலும் அது உண்மையல்ல என்பது பின் கண்டறியப்பட்டது.எம்ஜிஆர் அவர்களது காலத்திலேதான் தஞ்சையில் தமிழ்ப்பல்கலைக்கழகம் உருவாக்கம் நிகழ்ந்தது.எம்ஜிஆர் அவர்கள் தனது சினிமாவில் எதையெல்லாம் காணவிளைந்தாரே அவற்றை நிறைவேற்றவே எண்ணம் கொண்டு உழைத்தார்.
அவர் பட்டப்படிப்புப் படித்தவர் அல்ல.ஆனால் எல்லோரும் படிக்க வேண்டும் என்று கனவும் கண்டார். அதற்கான வழிவகைகளை தன் ஆட்சியிலும் ஏற்படுதிக்கொடுத்தார். அவரின் உதவியினால் படித்து முன்னேறி யவர்கள் பலபேர். அவர்கள் எல்லாம் அவரை இன்றும் தெய்வமாகவே போற்றுகின்றனர்.
அவரின் உயர்வுக்கும் பெருமைக்கும் காரணம் அவரது வள்ளல் தன்மை என்பதை எவருமே ஏற்றுக்கொள் ளுவார்கள்.கலைஞர் அவர்கள் தனது குடுப்பத்தைப் பார்ப்பார். எம்ஜிஆர் அவர்கள் மற்றவர்களுக்குக் கொடுப் பதையே நினைப்பார்.தனக்கென எதையுமே சேர்த்துவைக்கும் நிலை எம்ஜிஆர் அவர்களிடம் இருக்கவில்லை. அவரது கைகள் கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கைகள். கலியுகக் கர்ணன் என்றால் அது எம்ஜிஆர் அவர்களுக்கு மிகப்பொருந்தும் எனலாம்.
படமுதலாளிகள், பட இயக்குனர்கள், சகநடிகர்கள், படத்தொழிலாளர்கள், உதவியென நாடிவருபவர்கள் யாவ ருக்கும் வளங்கிய வள்ளலாக எம்ஜிஆர் அவர்கள்விளங்கினார்.அப்படி ஒருவரை இன்று காண்பது அரிது என்பதை அனைவருமே ஏற்றுக் கொள்வர்கள்.
ஈழத்தமிழரைக் காப்பாற்ற தன்னால் இயன்றரை அதாவது உயிரிருக்கும்வரை எண்ணியவர் எம்ஜிஆர் அவர்கள். பிரபாகரனை தனது மகனாக எண்ணி கோடி கோடியாக தனது சொந்தப் பணத்தைக் கொடுத்த கொடை வள்ளல் எம்ஜிஆர் அவர்கள்.தமிழ் இனம் தலை நிமிர்ந்து வாழ மனத்தாலே ஆசைப்பட்டவர் மகோன்னத மாம னிதர் மக்கள்திலகம் எம்ஜிஆர் அவர்கள்.அவரின் பிரிவால் தமிழ்நாட்டு மக்கள் தத்தளித்தை விடப் பலமடங்கு புலம்பிப் புரண்டவர்கள் ஈழத்துத் தமிழர்கள் ஆவர்.அந்த அளவுக்கு மக்கள் திலகம் ஈழத்துத் தமிழர்களின் இதயதெய்வமாக விளங்கினார்.
” இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் ” இது எம்ஜிஆர் அவர்களைத்தவிர வேறு எவருக்குமே பொருத்தமாக இருக்காது என்று கருதுகின்றேன்.
நான் ஆணையுட்டால் அது நடந்துவிட்டால் – இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார் —- என்று படத்தில் பாடி நடித்தோடு நில்லாமல் அதனை நிதர்சனமாக நடத்திக் காட்டியவர்தான் எம்ஜிஆர் என்னும் இமயம்.அதுமட்டு மல்ல
.. நினைத்தை நடத்தியே முடிப்பவன் நான்! நான் ! நான் ! …. என்று துணிவுடன் மூன்று முறை .. நான் என்பதை உச்சரிக்கும் துணிவு எம்ஜிஆர் அவர்களைவிட யாரருக்கு வரமுடியும் ?
குண்டடிபட்டாலும், கால்முறிவு ஏற்பட்டாலும் .. கடசிவரை நடிப்பையும் விடவில்லை. நல்லகுணத்தையும் விடவில்லை. நாட்டையும் மறக்கவில்லை. ” நான் செத்துப் பிழைச்சவன்டா ” என்று பட்ட துன்பங்களையெல்லாம் ஒரு பக்கமாக வைத்துவிட்டு ‘ உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே ” என்று எம்மை யெல்லாம் உற்சாகப் படுத்தி ” நாளை நமதே இந்த நாளும் நமதே ” என்று ஆறுதல் கூறிவிட்டு எல்லோர் மனங்களில்அமர்ந்திருக்கிறார் மக்கள் திலகம் எம்ஜிஆர்.அவரை நாம் ‘ நாடோடி மன்னனாகவும் கண்டோம்‘ சக்கரவர்த்தித் திருமகனாகவும் பார்த்தோம்”” ஆயிரத்தில் ஒருவனாகவும்” அவரே தான் இருக்கிறார்‘ அந்த ” இதயக் கனியை” மறக்கத்தான் முடியுமா ? அவர்தான் ‘ மன்னாதி மன்னன் ” ஆகி மக்கள் மனதை இன்றும் ஆண்டு கொண்டு இருக்கிறார் !
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா