மெல்பனில் மல்லிகை ஜீவா நினைவரங்கில் முருகபூபதியின் மூன்று நூல்களின் வெளியீடு!
மெல்பனில் மல்லிகை ஜீவா நினைவரங்கில்
முருகபூபதியின் மூன்று நூல்களின் வெளியீடு
அக்கினிக்குஞ்சு இணைய இதழ் ஆசிரியர்
யாழ். பாஸ்கர்
மல்லிகை ஜீவா நினைவு விருது பெறுகிறார்!
மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு காலத்தில், இலங்கையின் மூத்த எழுத்தாளரும் மல்லிகை ஆசிரியருமான டொமினிக்ஜீவா அவர்களினால் இலக்கிய உலகிற்கு 1970 களில் அறிமுகப்படுத்தப்பட்ட எழுத்தாளரும் சமூகப்பணியாளருமான முருகபூபதியின் 70 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியாகும் கதைத் தொகுப்பின் கதை ( சிறுகதை ) நடந்தாய் வாழி களனி கங்கை ( கட்டுரை ) பாட்டி சொன்ன கதைகள் ( சிறுவர் இலக்கியம் ) நூல்களின் வெளியீட்டு அரங்கு இம்மாதம் 19 ஆம் திதி ( 19-12-2021 ) ஞாயிற்றுக்கிழமை மாலை 4-00 மணிக்கு அவுஸ்திரேலியா மெல்பனில் Berwick senior citizens hall (112 High Street, Berwick VIC 3806) மண்டபத்தில் நடைபெறும்.
மகாகவி பாரதியின் உருவப்படத்திற்கு மங்கல விளக்கேற்றி நிகழ்ச்சிகள் தொடக்கிவைக்கப்படும்.
மெல்பன் வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமதி சாந்தி சிவக்குமார் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வு, திருமதி மேகானந்தா சிவராசாவின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகும்.
திருமதி சரண்யா மனோசங்கர் தமிழ் வாழ்த்து பாடுவார்.
மூன்று பகுதிகளாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் பெருந்தொற்றினால் மறைந்த ஈழத்தின் மூத்த எழுத்தாளரும், மல்லிகை இதழின் ஆசிரியருமான டொமினிக்ஜீவாவின் உருவப்படத்திற்கு விளக்கேற்றி, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு, அவரைப்பற்றிய நினைவுரை நிகழ்த்தப்படும்.
எழுத்தாளர் டொக்டர் நடேசன் நினைவுரையாற்றுவார்.
இதனையடுத்து நூல்களின் வெளியீடு இடம்பெறும்.
சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன் முருகபூபதியின் நூல்களை வெளியிட்டு வைத்து உரையாற்றுவார்.
கொழும்பு இலக்கியன் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்ட பாட்டி சொன்ன கதைகள் ( சிறுவர் இலக்கியம் ) நூல் குறித்து செல்வன் ஹரீஜன் பசுபதிதாசனும் யாழ். ஜீவநதி வெளியீடாக வந்துள்ள கதைத் தொகுப்பின்
கதை நூல் குறித்து திருமதி கலாதேவி பாலசண்முகன், திரு. அசோக்குமார் ஜனார்த்தனன், திரு. க. ராஜா ஆகியோரும், கொழும்பு குமரன் பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ள நடந்தாய் வாழி களனி கங்கை நூல் குறித்து திரு. கிறிஸ்டி நல்லரெத்தினமும் உரையாற்றுவர்.
நடந்தாய் வாழி களனி கங்கை ( கட்டுரை )
இலங்கையின் வற்றாத ஜீவநதியான களனி கங்கையின் தீரத்தில் நிகழ்ந்த வரலாற்றுச்செய்திகள், மற்றும் ஐதீகக்கதைகளின் பின்னணியுடன், அங்கு நிகழ்ந்த அரசியல், பொருளாதார, சமூக மாற்றங்கள் பற்றிய விவரணச்சித்திரிப்பாக களனி நதியின் கரையோரம் எங்கும் நடந்த சுவாரசியமான கதைகளைக்கூறும் நூல்.
நடந்தாய் வாழி களனி கங்கை இலங்கையில் அரங்கம் பத்திரிகையில் தொடராக வெளிவந்தமை குறிப்பிடத்தகுந்தது.
கதைத் தொகுப்பின் கதை ( சிறுகதை )
புகலிட வாழ்வுக்கோலங்களை சித்திரிக்கும் 15 சிறுகதைகளைக் கொண்டிருக்கும் முருகபூபதியின் ஏழாவது சிறுகதைத் தொகுதியான கதைத் தொகுப்பின் கதை நூலில் ஒவ்வொரு கதை பற்றியும் 15 பேர் தமது வாசிப்பு அனுபவங்களையும் பதிவுசெய்துள்ளனர்.
பாட்டி சொன்ன கதைகள்
சின்னஞ்சிறிய வயதில் முருகபூபதியின் பாட்டி அவரை உறங்கவைக்கும்பொழுது சொன்ன ( Bed time stories) கதைகளை உருவகக் கதைகளாக மாற்றி, இன்றைய நவீன காலத்திற்கு ஏற்ப எழுதப்பட்ட சிறுவர்களுக்கு மாத்திரமின்றி பெரியவர்களுக்குமான படைப்புகள். இந்த நூல் தமிழ் நாட்டில் வெளிவந்தமையால், அங்கு நூலகசேவைகள் திணைக்களம், சிறுவர் இலக்கிய வரிசையில் இதனைச்சேர்த்தது. பாட்டி சொன்ன கதைகள். தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட சில கதைகள், சிறுவர்களுக்கு ஆர்வமூட்டும் வகையில் சிறுவர் கதைகள் என்ற பெயரில் வண்ணப்படங்களுடன் இரண்டாம் பதிப்பாக வெளிவந்துள்ளது.
இதனை இலங்கை கல்வி அமைச்சு சிறுவர் இலக்கியவரிசையில் இணைத்துள்ளது.
மெல்பன் சமூக ஆர்வலர்கள் கணக்காய்வாளர் திரு. ஏ. வி. முருகையா, திரு. “ சுந்தர் “ சுந்தரமூர்த்தி, திரு. முருகேசு நரேந்திரன், திரு. இப்ரகீம் ரஃபீக் ஆகியோர் நூல்களின் சிறப்பு பிரதிகளை பெற்றுக்கொள்வர்.
பாட்டி சொன்ன கதைகள் சிறுவர் இலக்கிய நூலின் பிரதிகள் பத்து குழந்தைகளுக்கு வழங்கப்படும்.
நடந்தாய் வாழி களனி கங்கை நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவுள்ள இலக்கிய ஆர்வலர் திரு. நூர் மஹரூப் , பாட்டி சொன்ன கதைகள் நூலை சிங்கள மொழியில் பெயர்க்கவுள்ள எஸ்.பி. எஸ். வானொலி ஊடகவியலாளர் திருமதி டினேஷா விஜேசூரிய ஆகியோருக்கும் குறிப்பிட்ட நூல்களின் பிரதிகள் இந்நிகழ்வில் வழங்கப்படும்.
மல்லிகை ஜீவா நினைவு விருது
இந்த அரங்கில் எழுத்தாளரும் நாடகக் கலைஞரும் நீண்ட காலமாக அவுஸ்திரேலியாவிலிருந்து அக்கினிக்குஞ்சு இதழை முதலில் அச்சு வடிவிலும் , பின்னர் இணைய இதழாகவும் வடிவமைத்து வெளியிட்டுவரும் யாழ். பாஸ்கருக்கு மல்லிகை ஜீவா நினைவு விருது வழங்கப்பட்டு பாராட்டி கௌரவிக்கப்படுவார்.
அவுஸ்திரேலியாவில் கலை, இலக்கிய, சமூகச் செய்திகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் அக்கினிக்குஞ்சு இணைய இதழ், இங்கிருந்தும் ஏனைய நாடுகளிலிருந்தும் தொடர்ச்சியாக எழுதிவரும் படைப்பாளிகளுக்கு போதிய களம் வழங்கி வருகிறது.
அத்துடன் புதிய தலைமுறை படைப்பாளிகளின் ஆக்கங்களையும் வெளியிட்டு ஊக்கமளித்து வருகிறது.
இதற்கெல்லாம் பின்னணியிலிருந்து அயராமல் உழைத்துவரும் அக்கினிக்குஞ்சு ஆசிரியர் திரு. யாழ். பாஸ்கரின் கடின உழைப்பினை பாராட்டி, ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு தனது வாழ்நாள் முழுவதும் உழைத்த கர்மயோகி ( அமரர் ) மல்லிகை ஜீவா அவர்களின் நினைவாக பாராட்டு விருது வழங்கப்படவிருக்கிறது.
—–0—–
—-0—-