கட்டுரைகள்

பாரதி தரிசனம்!… அங்கம் 11…. முருகபூபதி.

பாரதியின் கவிதையில் பொருள் மயக்கம்

சுகி.சிவம், எந்த எண்ணத்தில் கருத்துக்களை

திரிக்கின்றார்…?

முருகபூபதி.

இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையே நீண்டகாலப்பகை. அந்தப்பகை அவ்வப்போது தணிந்தாலும், நீறுபூத்த நெருப்பாக இரண்டு தரப்பிற்குள்ளும் கனன்றுகொண்டுதானிருக்கிறது.

இலங்கையில் சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சி அக்காலத்தில் இந்திய விஸ்தரிப்பு வாதம் என்பதை பேசுபொருளாக்கி எழுதியும் வாதிட்டும் வந்தது.

இலங்கை மலையகத்தை பசுமையாக்கிய இந்திய வம்சாவளி மக்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்காக ஶ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டு நடைமுறைக்கு வந்தது. எழுத்தாளர் மு. சிவலிங்கம் அம்மக்கள் கப்பலேற்றப்பட்ட அவலத்தை ஒப்பாரிக்கோச்சி என்ற படைப்பில் உருக்கமாக பதிவுசெய்துள்ளார்.

அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இந்திய- சீனப் போர் குறித்து பலதரப்பட்ட விளக்கங்கள் சொல்லப்படுகின்றன.

இந்தப்போர் நடந்த காலத்தில் ஜவஹர்லால் நேரு இந்தியப் பிரதமராகவும் சூ என் லாய் சீனப்பிரதமராகவும் மா ஓ சேதுங் சீன அதிபராகவும் பதவிகளை வகித்தனர்.

இந்திய – சீன யுத்தம் தொடங்குவதற்கு முன்னர் 1960 இல் சூ என். லாய் இந்தியாவுக்கு வருகை தந்தார்.

அவருக்கு சென்னையிலும் மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டது. அந்த நிகழ்வும் சென்னையில் ஜவஹர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில்தான் நடந்தது.

அதன்பிறகு எல்லைத்தகராறு காரணமாக இரண்டு நாடுகளுக்குமிடையே போர் மூண்டது. அதற்கு முக்கிய காரணகர்த்தா தலாய்லாமா. திபேத்தில் நிகழ்ந்த கிளர்ச்சியையடுத்து, இந்தியா, தலாய்லாமாவுக்கு அடைக்கலம் வழங்கியது.

ஈழவிடுதலைப் போராட்டத்தில் 2009 இற்குப்பின்னர் அமெரிக்காவில் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு, அறிக்கை – ஆர்ப்பாட்ட அழுத்தம் தரும்

இயக்கமாக மாறியமை போன்று, பல ஆண்டுகளுக்கு முன்பே தலாய்லாமாவும் நாடுகடந்த திபேத் அரசை உருவாக்கினார்.

பாரதி தரிசனத்தில் எதற்காக இந்த இரண்டு நாட்டு அரசியல் விவகாரங்கள் வருகின்றன..? என வாசகர்கள் யோசிக்கலாம்.

பாரதியின் “ வந்தே மாதரம் என்போம் – எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம் “ என்ற தேசிய கீதங்கள் வரிசையில் முதலாவதாக வரும் பாடல்தான் இந்த அங்கத்தின் ஊற்றுக்கண்.

இந்த ஊற்றுக்கண்ணை திறந்தவர் தமிழகத்தின் பிரபல நட்சத்திரப் பேச்சாளர் சுகி. சிவம். இவரும் சீன வெறுப்பையே தனது உரையில் கக்கியிருந்தார். அந்தக்காணொளி பாரதி குறித்த தேடுதலில் ஈடுபடும் எவருக்கும் ஆழ்ந்த யோசனையைத் தரும்.

சுகிசிவத்தின் பேச்சை எளிதாக கடந்து சென்றுவிடமுடியாது. பாரதியின் வரிகள், பாரதிக்குப்பின்னர் பலரால் திரிக்கப்பட்டு வேறு வேறு அர்த்தங்களை கற்பித்திருக்கின்றன.

தமிழினி மெல்லச்சாகும் என்ற வரிகள் அதற்கு பதச்சோறு.

அவ்வாறே சுகிசிவமும் பாரதியின் கருத்தை திரித்திருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முடிந்தது. அதுபற்றி பின்னர் வருகின்றேன். அதற்கு முன்னர் சில விடயங்களை இங்கே நினைவூட்டல் வேண்டும்.

1961 ஆம் ஆண்டு வெளிவந்த பந்துலுவின் கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்திலும் வந்தே மாதரம் பாடல் இடம்பெறுகிறது. இந்தப்பாடலும், பாரதியின் வெள்ளிப்பனி மலை மீதுலாவுவோம் பாடலைப்போன்று முழுமையாக திரையில் ஒலிக்கவில்லை.

இரண்டும் விவகாரத்திற்குரிய பாடல் என்றே அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பு இயக்குநர் பந்துலுவும் இசையமைப்பாளர் ஜி. ராமநாதனும் நினைத்திருக்கவேண்டும்.

ஒன்றில் சிங்களத்தீவு என்று வருகிறது. மற்றதில் சீனத்தராய்விடுவரோ என்று வருகிறது.

இந்த “ சி “ யும் “ சீ “ யும் சர்வதேச அரங்கில் இலங்கை பற்றிய விவாதங்கள் வரும்போது முக்கியத்துவம் பெற்றுவிடுகின்றன.

கவியரசு கண்ணதாசனும் சீனாவை கிண்டல் செய்து கவிதையும் பாடலும் இயற்றியவர்தான். அத்துடன் இந்திய – சீனப்போரைச் சித்திரிக்கும் இரத்தத்திலகம் என்ற திரைப்படத்தையும் தயாரித்து, அதில் வரும் ஒரு பாடல் காட்சியிலும் நடித்தார்.

அத்துடன் சீனப்போரின்போது, எல்லை காத்த இந்திய பாதுகாப்பு வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக தென்னிந்திய தமிழ்த் திரைப்பட கலைஞர்களையும் அழைத்துச்சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தியவர்.

இவ்வாறு இந்திய கலைஞர்களும், கவிஞர்களும் ஊடகங்களும் அரசியலும் நேரு காலம் தொடக்கம் சீனாவை எதிரிநாடாகவே அவதானித்து வருகின்றமை குறித்து சீனா அலட்டிக்கொள்வதில்லை. எதிர்பாட்டு பாடுவதில்லை !

அந்த நாட்டின் அதிகார பீடத்துக்கு வரும் தலைவர்கள், அண்டை நாடுகளுடன், உறவைப்பேணுவதற்கு தொடர்ந்தும் இராஜதந்திர நகர்வுகளையே மேற்கொண்டு வருவார்கள்.

சீனாவின் அயல் நாடுகளில் சீன உற்பத்திப்பொருட்களுக்கு ( Made in China ) வரவேற்புண்டு. அத்துடன் சைனா டவுன் – சைனா பஜார் அயல்நாடுகளில் பிரசித்தம். சீன உணவகங்களும் அவ்வாறே பிரபல்யம் பெற்றவை.

இலங்கையில் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா, சீனாவுடனும் சோவியத் தேசத்துடனும் நல்லுறவைப்பேணியவாறு அணிசேரா நாடுகள் அமைப்பின் தலைவியாகவும் விளங்கி, அந்த நாடுகளின் உச்சி மாநாட்டையும் கொழும்பில் நடத்தினார்.

அந்த மாநாடு, சீனா நிர்மாணித்து வழங்கிய பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திலேயே நடந்தது. அதற்கான அடிக்கல் நாட்டு விழாவிலும் அன்றைய சீனப்பிரதமர் சூ என். லாய் கலந்துகொண்டார்.

கொழும்பு காலிமுகத்திடலில் சோவியத் சிற்பி, லெவ் கேர்பிள் என்பவர் நிர்மாணித்து வழங்கிய பண்டாரநாயக்காவின் சிலை, அங்கிருந்தவாறு கடலுக்குள் சீனா தற்போது அமைத்துவரும் போர்ட் சிட்டி நவீன நகரத்தை பார்க்கிறது.

நீடித்த ஈழப்போருக்குப்பின்னர் இந்தியா, இலங்கையில் வடக்கிற்கான ரயில் பாதைகளையும் அமைத்து, ரயில் நிலையங்களையும் நிர்மாணித்தவுடன், சீனாவும் தன் பங்கிற்கு எதனையாவது செய்துகொடுக்க வேண்டும் அல்லவா..?! ஆம் செய்யத்தொடங்கியது. அதன் பெயர் Port City.

மகிந்த ராஜபக்க்ஷ 2015 ஜனவரியில் நடந்த தேர்தலில் தோல்வியடைவதற்கு முன்னதாக சில மாதங்களுக்கு முன்பு சீனாவின் ஆதரவுடன் 2014 செப்டெம்பரில் ஃபோர்ட் சிட்டியின் நிர்மாண வேலைகள் சம்பிரதாயபூர்வமாக தொடங்கப்பட்டது.

சீன அதிபர் ஷன் பிங் கலந்துகொண்டார். சீனா கொம்யூனிக்கேஷன் கம்பனி லிமிட்டட் நிறுவனத்தின் அங்கத்துவ நிறுவனமான C H E C கொழும்பு போர்ட் சிட்டி கொழும்பு லிமிட்டட் நிறுவனம் அதன் நிர்மாணப்பணிகளை

முன்னெடுப்பதற்கும் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கவும் பொறுப்பேற்றதாக முன்பு செய்திகள் வெளியானது.

இந்தப்பின்னணிகளுடன்தான் இந்த பாரதி தரிசனத்திற்குள் வருகின்றேன்.

இனி, பாரதியாரின் கவிதையை பாருங்கள்:

வந்தே மாதரம் என்போம்

எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்.

ஜாதி மதங்களைப் பாரோம் – உயர்

ஜன்மம் இத் தேசத்தில் எய்தின ராயின்

வேதிய ராயினும் ஒன்றே – அன்றி

வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே)

 

ஈனப் பறையர்க ளேனும் அவர்

எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?

சீனத்த ராய்விடு வாரோ? – பிற

தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ? (வந்தே)

 

ஆயிரம் உண்டிங்கு ஜாதி – எனில்

அன்னியர் வந்து புகல் என்ன நீதி? – ஓர்

தாயின் வயிற்றில் பிறந்தோர் – தம்முள்

சண்டைசெய்தாலும் சகோதரர் அன்றோ? (வந்தே)

 

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே – நம்மில்

ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே

நன்றிது தேர்ந்திடல் வேண்டும் – இந்த

ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்? (வந்தே)

 

எப்பதம் வாய்த்திடு மேனும் – நம்மில்

யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்

முப்பது கோடியும் வாழ்வோம் – வீழில்

முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் (வந்தே)

 

புல்லடி மைத்தொழில் பேணிப் – பண்டு

போயின நாட்களுக் கினிமனம் நாணித்

தொல்லை இகழ்ச்சிகள் தீர – இந்தத்

தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி (வந்தே)

இந்தக்கவிதையில் வரும் வந்தே மாதரம் என்ற முதல் வரியை பாரதியார் வங்கமொழியில் இந்தவரியிலிருந்தே தொடங்கும் பாடலை எழுதிய பங்கிம் சந்திர சட்டர்ஜி ( 1838 – 1894 ) யிடமிருந்து பெற்றுள்ளார். குறிப்பிட்ட பாடல் உலகப்பிரசித்திபெற்றது.

பாரதி தனது கவிதையில் சீனத்த ராய்விடு வாரோ? – பிற தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ? என எழுதியதன் மூலம் நூறு ஆண்டுகளுக்கு முன்பே சீனா குறித்து தீர்க்கதரிசனமாக எச்சரித்துவிட்டார் என்பதுதான் நட்சத்திரப் பேச்சாளர் சுகி. சிவம் அவர்களின் வாதம்.

அவரது இக்கருத்தை கேட்டது முதல் மனதில் குழப்பம் வந்தது. பாரதி இயல் குறித்து எழுதியும் பேசியும் வரும் சிலரை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டிருந்தேன்.

இலங்கை இலக்கிய நண்பரும் பாரதி குறித்து பாரதியின் மெய்ஞ்ஞானம் என்ற நூலையும் கல்விச்சிந்தனைகள் -பாரதியார் என்ற நூலின் தொகுப்பாசிரியருமான கலாநிதி ந. இரவீந்திரன் பின்வரும் விளக்கத்தை தந்திருந்தார்:

பாரதிக்கு அயோத்திதாசருடன் நட்பு இருந்தது. அயோத்திதாசர் ஒடுக்கப்பட்ட சாதியினர் இந்தியத் தேசியத்தினுள் அடங்கமாட்டார்கள் எனக் கூறியும் எழுதியும் வந்தார் (பின்னாலே அம்பேத்கர் தலித் அரசியலாக விரிவுபடுத்திய கருத்தியலின் முன்னோட்டம் அவரிடம் இருந்தது). பாரதியோ ஒடுக்கப்பட்ட சாதிகளது உரிமைகளை வென்றெடுக்க வலியுறுத்தியபடி – அதற்கான போராட்டங்களையும் உட்படுத்தி – அவர்களை ஒரே தேசியத்தவராக்க இயலும் என இந்தக் கவிதையில் வலியுறுத்தினார் (அம்பேத்கரை மதித்தபடி காந்தி ‘ஹரிஜனங்களை’ சுதந்திரம் போராட்டத்தில் அணிதிரட்டி இருந்தார்).

‘ஈனப் பறையர்’ என பாரதி குறிப்பிடுவது அவர்களை பாரதியே அவமதிப்பதற்கான ஒன்றல்ல. சமூக யதார்த்தமாக அது இருப்பதான நிதர்சனத்தை உணர்த்த. அந்த நிலையை மாற்றவும் அவர்களே பெரு மதிப்புக்கு உரிய ஏரோட்டி உணவளிப்போர் என்பதனையும் பாரதி வலியுறுத்தி வந்தார்.

(‘பெட்டைப் புலம்பல்’ என பாரதி சொன்னதால் பெண்கள் கீழானவர் எனும் கருத்தும் பாரதிக்கு உரியதல்ல).

‘ஈனப் பறையர்’ என்பதன் எதுகை மோனைப் பதம் ‘சீனத்தவர்’. சீனாவை அப்போதே எதிரி நிலையாக கணித்த ‘தீர்க்கதரிசனம்’ அல்ல அது ! வேறொரு தேசமாக இருக்கும் அந்நாட்டுக்கு உரிய தேசியராக அன்றி (வேறான தனித் தேசியராக இல்லாமல்) அனைவரும் ஒரே தேசியர் என்பதனை வலியுறுத்தும் அம்சம் அது.

ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக போராடியபடி இருந்த சீனாவுடன் இந்திய விடுதலைப் போராளிகள் ஒன்றுபட்ட உணர்வையே கொண்டிருந்தனர். விடுதலைத் தேசிய உணர்வு இருந்தவரை ‘இந்தியா-சீனா பாய், பாய்’ முழக்கம் இருந்தது. எல்லைப் போர் தவறான அரசியல் முடிவு சார்ந்தது. அதன் பின்னரே சீன வெறுப்பு இந்தியாவுக்குள் வளர்க்கப்பட்டது. சீனாவும் இந்திய காங்கிரஸ் கட்சியின் வர்க்க நிலைப்பாடு பற்றித் தவறான கணிப்பை வெளிப்படுத்தியது.

பாரதி கால சுதந்திரச் சிந்தனையாளர்களிடம் அத்தகைய தவறான புரிதல் ஏதும் இல்லை. பகைவருக்கும் அருள்வாய் என்கிற பரந்த பார்வை பாரதி உடையது. தேசியத்தை வரையறுப்பதற்கு அப்பால் சீன வெறுப்பு பாரதிக்கு உரியதல்ல என்பது எனது கருத்து!

தமிழகப்படைப்பாளியும் மூத்த பத்திரிகையாளரும் இந்திய சாகித்திய அகடமி உறுப்பினருமான மாலன் அவர்களும் விளக்கம் தந்திருந்தார்.

மாலன் வழங்கிய விளக்கத்தில் பாரதிக்கு சீனத்தவர் குறித்திருந்த தேடுதல் வியப்பளிக்கிறது.

மாலன் சொல்கிறார்:

அது சீனத்தைத்தான் குறிக்கிறது. அவர்கள் வேறு இனம்.

(மங்க்லாய்ட்கள்) வேறு மொழிக் குடும்பம். அவர்களைக் குறிப்பிடுவது மக்கள் எளிதாகப் புரிந்து கொள்ள. அது அவர்களுக்கு எதிராக அல்ல. வேறு தேசத்தவர் என்ற அடுத்த வரியோடு இணைத்துப் பார்த்தால் இன்னும் தெளிவாகப் புரியும்.

பாரதி தனது உரைநடைகளில் சீனம் பற்றி நிறைய எழுதியிருக்கிறார்.

அவற்றில் எங்கும் சீனத்தை எதிரியாக குறிப்பிட்டு எழுதவில்லை. மாறாக சியூ சின் என்ற பெண்மணியை முன்னுதாரணமாகக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார் (http://www.tamilvu.org/slet/lA110/lA110pd1.jsp?bookid=183&pno=128))

அந்தப் பெண்ணின் பேச்சை மொழிபெயர்த்திருக்கிறார்

(http://www.tamilvu.org/slet/lA110/lA110pd1.jsp?bookid=183&pno=131 )

அந்தப் பாடலில் உள்ள ஈனம் என்ற சொல் இழிவு என்ற அர்த்தத்தில் அல்ல,

நலிவு என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. சுகவீனம், மதியீனம் பலவீனம் என்பதில் உள்ளதைப் போல (ஈனப் பறையர் = நலிவுற்ற பறையர்)

Mongoloid – விளக்கம்

மங்கோலிய இனம் என்பது கிழக்கு ஆசியா, நடு ஆசியா, தென்கிழக்கு ஆசியா, வடக்கு ஆசியா, பாலினேசியா மற்றும் அமெரிக்கக் கண்டங்கள் ஆகியவற்றை பூர்வீகமாக கொண்ட பல்வேறு மக்களின் ஒரு குழுவாகும். பாரம்பரியமாக வழங்கப்படும் மூன்று இனங்களில் இதுவும் ஒன்றாகும்.

( ஆதாரம் : தமிழ் விக்கிபீடியா )

தமிழ்நாட்டிலிருந்து ஆய்வறிஞர் முனைவர் அரிமளம் சு.பத்மநாபன் அவர்கள் எனக்கு அனுப்பியிருந்த விளக்கம்:

சமஸ்கிருதத்தில் ‘க்ஷீணம்’ என்ற சொல்லுக்கு அழியும் நிலை அல்லது அருகிப்போகும் நிலை, மிகவும் வறிய நிலை, கீழ்நிலை, என்று பொருள், பாரதி க்ஷீணம் என்பதையே அடிப்படையாகக் கொண்டு க்ஷீணத்தர் என்பதை சீனத்தர் என்று எழுதியிருக்க வாய்ப்புண்டு. பல இடங்களில் அவர் வடமொழி வரிவடிவங்களைத் தவிர்த்து, சாதி, இருடி(ரிஷி) என்றெல்லாம் தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்தியிருப்பதைக் காண முடியும்.

——

இது இவ்விதமிருக்க கிழக்கிலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களிடமிருக்கும் பேச்சுவழக்கையும் இங்கு குறிப்பிடுதல் பொருத்தமானது.

அவர்கள், பொலிவானதை – அழகானதை, வனப்பானதை சீனத்தாய் எனப்பொருள்கொண்டு பேசுபவர்கள். இதுபற்றி சிட்னியில் வதியும்

கிழக்கிலங்கை மூத்த எழுத்தாளர் மருதூர்க்கொத்தனின் புதல்வரான ஆரீஃப் அவர்களும் விளக்கம்தந்தார்.

அத்துடன் மேற்கு அவுஸ்திரேலியாவில் வதியும் அரசியல் பொருளாதார பேராசிரியர் அமீர்அலி அவர்களும் அத்தகையதோர் விளக்கம் தந்திருப்பதுடன், தமிழ்நாட்டில் காயல்பட்டணம் போன்ற பிரதேசங்களிலிருந்து இந்த சீனத்து ( பொலிவு – வனப்பு – அழகு ) வந்திருக்கலாம் என்றார்.

மகாகவி பாரதியே…. என்னய்யா நீர்…? எனது தலையை பிய்த்துக்கொள்ளவைத்துவிட்டீரே. நீர் பொல்லாத மனுஷன் அய்யா.

மந்திரம்போல் சொற்களை பொதிந்து எழுதிவைத்துவிட்டுப்போய்விட்டீர். ஆளுக்கு ஆள் புதுப் புது விளக்கம் தருகிறார்கள்.

“ கற்பதுவே ! கேட்பதுவே ! கருதுவதே ! நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ..? “ என்றா எம்மைப்பார்த்து கேட்கிறீர். !

( தொடரும் )

letchumananm@gmail.com

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.