கதைகள்

சிங்கப்பூரில் சிலகாலம்!…. 44….. (உண்மைக் கதை) …. ஏலையா க.முருகதாசன்.

யோகமலருக்கு கோட்டலில் வைச்சுத் தாலி கட்டி, அவளுக்கு என்னோடை முதலிரவு முடிஞ்சு அடுத்தடுத்த இரவுகளும் கழிஞ்சு இருவரும் ஒரே வீட்டில் புருசன் பெண்டாட்டியாக வாழப் போற நிலையில் சிரங்கூனுக்கு வந்திருக்கிறம்.

யோகமலரின் மாமா மாமியை தற்செயலாக அங்கை வைச்சுத் சந்திக்க,அவளின் மாமியும் மாமாவும் கண்களால் கதைக்க மாமியார் மகாராணி புடவைக்; கடைக்குள் நுழைய, மாமனார் எங்கள் இருவரையும் கூட்டிக் கொண்டு ரீ குடிப்பம் வாங்க என்று சொல்லி கிருஸ்ண விலாசுக்குப் போய் ஒரு மேசை கிடைச்சு உட்கார்ந்திருந்தம்.

மகாராணி புடவைக் கடையிலிருந்து வந்த மாமியாரின் கைகளில் இரண்டு பைகள் இருந்தன.நாங்கள் இருந்த மேசையடிக்கு வந்தவர் என்னிடம் ஒரு பையையும் யோகமலரிடம் மற்றப் iபையையும் குடுத்துவிட்டு „இது இரண்டும் எங்க வெடிங்க பிரசண்ட் „என்று சொன்னார்.

„தாங்ஸ் மாமா மாமி’ என்று யோகமலர் சொல்ல நானும் „தாங்யூ’ என்று சொன்னன்.

அவர்கள் இருவரும் ரீயும் வடையும் வாங்கிக் குடுத்தார்கள்.சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே யோகமலரின் மாமி பரிமாறுபவரிடம் ஐஞ்சு ஐஞ்சு மசாலா வடையும், ஐஞ்சு ஐஞ்சு பஜ்ஜியும் செப்பரேட் செப்பரேட்டா பார்சல் பண்ணி,ஐஞ்சு வடையையும் ஐஞ்சு பஜ்ஜியையும் ஒரு பாக்கிலையும் மற்ற ஐஞ்சு வடையையும் ஐஞ்சு பஜ்ஜியைம் இன்னொரு பாக்கிலையும் போட்டுத் தாங்க „ என்று சொன்னவர் உங்களுக்கும் எனக்குந்தான் என்றவர், என்ன பிரசண்ட் என்று பார்க்கலையா பாருங்க’ என்றார்.

யோகமலர் பையைத் திறந்து பார்த்தார் உள்ளே மஞ்சள் கலரில் சீலையிருப்பதைக் கண்டவர் „சாறிங்க’ என்றார் என்னைப் பார்த்து.நான் எனது பையைத் திறந்து பார்த்தன் ஓரேஞ் கலரில் சேர்ட் இருந்தது.

ஒரேஞ் கலரில் சேர்ட் என்று யோகமலருக்குச் சொன்னன்.யோகமலரும் அவளின் மாமா மாமியும் நிறையக் கதைச்சார்கள்.

என்னாலை அப்படிக் கதைக்க முடியவில்லை.நான் கல்யாணம் செய்யாமலிருந்து யோகமலரைக் கல்யாணம் செய்திருந்தால் சூழ்நிலையை இரசித்திருக்க முடியும்.யோகமலருடனான ஒவ்வவொரு விநாடிப் பொழுதையும் சுவைத்திருக்க முடியும்.மனச்சாட்சியின் உறுத்தல் ஒரு பக்கமும் யோகமலரின் அணைப்பின் சுகம் இன்னொரு புறமுமமாக தவிச்சுக் கொண்டிருந்தன்.நான் கல்யாணமானவன் என்பதை யோகமலரின் மாமனும் மாமியும் அறிஞ்சுவிடக்கூடாதென்பதில் கவனமாக இருந்தன்.

அவர்கள் தந்த சேர்ட் அன்பளிப்பைக்கூட ஒப்புக்கு விரும்புவது போல காட்டிக் கொண்டன்.வேகமாக தேத்தண்ணியையும் வடையையும் சாப்பிட்ட நான்

யோகமலரின் துடையைத் மெதுவாகத் தட்டி „ நாளைக்கு என்எம்பி பக்ரறியில் காலமை நேரத்தோடை போகவேணும், அங்கை பேர்சனல் மனேஜரைச் சந்திச்சு கடிதத்தைக் குடுக்க வேணும் கெதியிலை போனால்தான் நல்லாய் நித்திரை கொண்டெழும்பி பிரஸ்ஸாகப் போகலாம் „ என்று சொல்ல,’என்ன யாழ்ப்பாண மாப்பிளை அவசரப்படுகிறார், எங்களுக்கும் புரியும் என்ன அவசரமென்று, யோகி யாழ்ப்பாணத்திலை உன்னோடவற்ரை ஊர் எது „என்று கேட்க, யோகமலரே அவரோட ஊரு தெல்லிப்பழை’ என்று சொன்னாள்.

„ஆமா எங்க திருநெல்வேலியிலும் இதே பேரிலை ஊரிருக்கே, யோகி சரியானவரைத்தான் மறி பண்ணியிருக்கிறாள்,அவருக்கும் எங்களுக்கும் ஏதோ தொடர்பிருக்கு’ என்று யோகமலரின் மாமன் சொல்ல, என்னடா இது கதை நீண்டு கொண்டே போகிறதே என யோசிச்சுக் கொண்டிருந்தன்.

கள்ளமுள்ள மனம் எப்பொழுதும் நிலைகொள்ளாமல் குழம்பிக் கொண்டிருக்கும் என்பதற்கு சாட்சியாக நானிருந்தன்.

யோமலரின் மாமியார் ஓடர்பண்ணிய வடைப்பார்சலையும் பஜ்ஜிப் பார்சலையும் பையில் போட்டு உபசரிப்பாளர் கொண்டு வந்து குடுக்க அவற்றை வாங்கிய யோகமலரின் மாமியார் யோகமலரிடம் இரண்டு பைகளைக் குடுத்து,’மாசலாத் தோசை வாங்கப் போறீங்க இல்லையா அதோட சாப்பிடுங்க கொம்பினெசன் ரேஸ்ற்றாக இருக்மென்றாள்.

யோகமலரிடம் பைகளைக் குடுக்கும் போதே நான் கதிரையை விட்டெழுந்து அவசரப்படுவதை கண்ட யோகமலர் என்னைக் கூறுகுறிப்பாக பாரத்தபொழுதும் அப்பொழுது எதையும் கேட்கவில்லை.

நாங்களிருவரும் கிருஸ்ண விலாஸ் சாப்பாட்டுக் கடையை விட்டு வெளியே வர, யோகமலரின் மாமனும் மாமியும் எங்களோடு வந்து கடை வாசலடியில் வைச்சு விடைபெற்றுச் சென்றுவிடுகின்றனர்.

வீட்டுக்கு நேரத்தோடு போய்ச் சேர்ந்துவிட வேண்டுமே என்ற பரபரப்பில் கோமள விலாசுக்கு கெதியாக நடந்து சென்று ஓடர் பண்ணின மசாலத் தோசைப் பார்சலை வாங்கிக் கொண்டு சாய்ச்சீ போகும் பஸ்ஸில் ஏறி ஊட்கார்ந்த சில விநாடிகளில் ,ஏங்க பரபரத்துக் கொண்டிருந்தீங்க, உங்க முகமே சரியில்லை…’என்றவள் எனது தலையைத் தனது தோளில் சாய்ச்சு எனது கழுத்துப் பக்கத்தை வருடிக் கொண்டே „ நீங்க தவறு விடுவதாக நினைச்சுக் கவலைப் படாதீங்க, அக்காவின்ரை இடம் அப்படியே இருக்குங்க,இருபத்தேழு வயசான எனக்கு வாழ்வு கொடுத்திருங்கீங்க, ஆண்சுகத்தைத் தந்திருக்கீங்க, இது விதிங்க’ என யாருக்குமே கேட்காதவாறு சொல்லி ஆறுதல்படுத்தினாள்.

ஆறரை மணிக்கு சாய்ச்சியில் உள்ள வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தம்.போனவுடனே யோகமலர் தும்புத்தடியை எடுத்துக் கூட்டத் தொடங்கினாள்.

„ இப்ப எதுக்கு கூட்டிறியள் காலமைக்கு கூட்டலாந்தானே’ என்று சொன்ன எனக்கு’ இன்னேலேயிருந்து இந்த வீட்ல வாழப் போறம்ங்க,வீட்டைச் சுத்தப்படுத்தினாத்தான் நிம்மதியாக இருக்கும்,நல்ல தூக்கம் வரும்ங்க’ என்றவள் மொப் பண்ற துணியை எடுத்துவந்து தண்ணிலை நனைச்சு வேகமாக மொப் பண்ணினாள்.

„என்னட்டை தாங்க நான் துடைக்கிறன்’ என்று கேட்க, „வேண்டாம்ங்க நானே மொப் பண்றன் எனக்கு இது விருப்பம்ங்க,நீங்க போய் குளிங்க, நான் இதைப் பண்ணிட்டு அப்புறமா குளிக்கிறேங்க, போங்க’ என்று யோகமலர் சொல்ல எதுவுமே சொல்லாமல் குளிக்கப் போனன்.

குளிக்கும் போது எனது மனம் எல்லாத்தையும் அசை போட்டது.இப்ப ஊரிலை ஒன்பது மணியிருக்கும் மனைவியும் பிள்ளைகளும் இப்ப நித்திரை கொள்ளப் போய்விடுவார்கள் என்றும் இல்லை சிலநேரம் மனைவியின் அப்பா அம்மா வீட்டிலை நிற்பார்களோ என்று எண்ணின நான், யோகமலரைப் பற்றி எண்ணத் தொடங்கினன்.

ஜிஇயில முதல் நாள் பார்த்த யோகமலர் படிப்படியாக எனக்காகவே வாழப் போறவளாகி அவளுக்கு தாலிகட்டும் போது எனக்காக எதையும் செய்வேன் என்றவளாகி இன்று நல்லதொரு குடும்பத் தலைவியாக நிற்பதைக் கண்டேன்.

நான் குளித்துவிட்டு வெளியே வரும் போது அவள் சோபாவில் உட்கார்ந்திருந்தாள்.

„நான் சீக்கரமாக குளிச்சிட்டு வரேனுங்க’ என்று அவள் குளியலறைக்குப் போக, நான் படுக்கையறைக்குப் போய் சாரத்தைகட்டி பனியன் ஒன்றைப் போட்டுக் கொண்டு சோபாவில் படுத்திருந்தன்.

அவள் சொன்ன மாதிரியே கெதியாக குளிச்சிட்டு வந்தவள் தலைமயிரோடு சேர்த்து துவாயைக் கட்டியிருந்தாள்.

மார்புக்கு மேலாக ஒரு அகலத் துவாயைக் கட்டி இருந்தாள்.அறைக்குள் போய் கதவைச் சாத்தியவள் ஓரிரு நிமிடங்களில் நைற்றியுடன் வெளியே வந்து நிலத்தில் உட்கார்ந்து சோபாவில் சாய்ந்து கொண்டே „முடியை துவட்டி விடுங்களேன் „ என்றவுடன் எழுந்து தலைமயிரை ஈரத்தை நன்றாகத் துடடைச்சுவிட்டன்.

„இருங்க „ என்று உள்ளே போனவள் கயர்றையருடன் வந்து „ இந்தாங்க இதாலை பிடியுங்க’ என்றாள்.

வயரை பிளக்கில் கொழுவுp அவளின் தலைமயிரை பகுதி பகுதியாக பிரிச்சு கயர்றையரால் சூடு பிடிச்சன்.

எனது இரண்டு கால்களுக்குமிடையில் தனது உடம்பை வைச்சு ஊட்கார்ந்திருந்தவள்,எழுந்து சோபாவில் உட்கார, நுணி மயிர்களில் இருந்த ஈரத்தை துவாயால் துடைப்பதும் கயர்றையரால் சூடு பிடிப்பதமாக முழுத்தலைமயிரையும் காற்றில் பறக்குமளவிற்கு சூடு பிடிச்சுவிட்டன்.

எனது தலைமயிரில் கைவைச்சவள்’ என்னங்க இது முடி ஒரே ஈரமாயிருக்கு துடைக்கலையா என்றவள் துவாயால் துடைச்சு கயர்றையர் பிடிச்சுவிட்டாள்.

அவள் நைற்றி போட்டிருந்ததை பார்த்த நான் ……போடலையா, என்று கேட்க வெட்கத்துடன் „எதுக்குங்க அது இப்ப…பிறகு…’ என்றவள் வாங்க சாப்பிடுவம் என்று சொல்லிக் கொண்டே மைக்றோவெலவில் மசாலா தோசை வடை பஜ்ஜி என எல்லாவற்றையும் ஒரு கோப்பையில் வைச்சு சூடாக்கினாள்.

எல்லாவிதமான நவீன கருவிகளும் ஐரோப்பிய நாடுகளைவிட சிங்கப்பூருக்கு முதலில் அறிமுகமாகிவிடும்.அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது.அங்கு எல்ல நாட்டுத் தொழிற்சாலைகளும் இயங்குவதற்கு சுதந்திரமான வர்த்தகவலயம் இருந்தது.நான் அறிந்து கொண்ட வகையில் தொழிற்சாலைகள் வரிகட்டத் தேவையில்லை.

சூடாக்கிய மசாலத் தோசைகளுடன் ஆளுக்கொரு வடையையும் பஜ்ஜியையும் சாப்பிட்டவுடன் தேத்தண்ணியும் போட்டுக் குடிச்சம்.

மீண்டும் சோபாவில் போய் உட்கார்ந்தம்.கால்களை மடக்கி எனது மடியில் படுத்தவளின் தலையை வருடிக் குடுத்தன்.ஏதோ நினைச்சவள் போல் எழுந்தவள் அறைக்குள் போய் எதையோ கைக்குள் வைச்சுக் கொண்டு வந்து வாய்க்குள் போட்டு தண்ணியைக் குடிச்சாள்.

அது கருத்தடை குளிசை.அவள் போடுவதை நான் தடுக்கவில்லை.மீண்டும் எனது மடியில் படுத்தவளின் கண்கள் கலங்குவதைக் கண்ட நான் „ எதற்காக இண்டைக்கு ரபிலற் போட்டனீங்கள் „ என்று கேட்க, முகத்தைத் திருப்பி என்னைப் பார்த்து „ இன்னைக்கு உங்களுக்கு அந்தப் பசி பசிக்காதா’ என்று சிரித்தாள்.

அவள் சிரிக்கும் போது தலைமயிர்கள் அவள் பற்களைத் தடவி நிற்க அவற்றை எடுத்து விட்டன்.

என்னைப் பார்ப்பதும் திரும்பி தலையைச் சரிச்சு வைப்பதுமாக இருந்தவள் „என்னங்க புரியுது….. சரி வாங்க தூங்குவம் „என மடியிலிருந்த தலையை எடுத்தாள்.

நான் தலைகணியை நிமிர்த்தி வைச்சுக் கொண்டு கையை மடிச்சு நெற்றியில் வைச்சபடி படுத்திருந்து „இன்னொரு மனைவியுடன் வாழப் போகிறேனே, காலம் என்னை எங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது…’ என்று நான் யோசிச்சுக் கொண்டிருக்க,கட்டிலில் ஏறி உட்கார்ந்த யோகமலர் எனக்கு மிக அருகில் தலைகணியை நிமிர்த்தி வைச்சு சாய்ஞ்சு இருந்து கொண்டு தலையை என்பக்கமாக திருப்பி கால்களை மடக்கி வைச்சபடியே என்னைப் பார்த்தவள், நான் நெற்றியில் கையை மடக்கி வைச்சபடியே யோசிச்சபடி இருப்பதைக் கண்டவள் „ என்னங்க நீங்க இப்படி இருப்பது எனக்கு ரொம்ப கஸ்டமா இருக்குங்க’ என்ற எனது நெற்றியிலிருந்து கையை எடுத்துவிட்டு, „பிளீஸ் யோசிங்காதீங்க, நீங்க சிறீலங்காவில இருந்தாக்கூட உங்க விதிப்படி இன்னொரு பெண்ணோட தொடர்பு ஏற்பட்டிருக்கலாம்ங்க,உங்களைச் சிங்கப்பூருக்கு வரவழைச்சு என்னை உங்களச்

சந்திக்க வைச்சு உங்களுக்கு என்னை பெண்டாட்யாக்கியிருக்கிறார் என்னுடைய மாரியம்மன்’ என்று ஆறுதல்படுத்தினாள்.

ஏன்னுடைய நெஞ்சில் தலையை வைச்சு படுத்தவள்’ காலைல நேரத்தோடு எழும்போனுங்க’ என்று தலைகணியை சரிச்சு வைச்சவள் ,தலையை நிமிர்த்துங்க „ என்று எனது தலைகணியையும் சரிச்சு வைச்சாள்.

அடுத்த நாள் காலமை ஐஞ்சு மணிக்கு எழுந்து கெதி கெதியாக குளிச்சு, தேத்தண்ணி குடிச்சு வெளிக்கிட்டு புதிய வேலைக்காக என்எம்பி பக்ரறிக்கு போனோம்.

நேராக என்எம்பி பேர்சனல் மனேஜரை அவரின் அறையில் சந்திச்சு எங்களை அறிமுககப்படுத்தி ஜிஇ பேர்சனல் மனேஜர் கொடுத்திருந்த கடிதத்தை கொடுக்க அவர் எங்களுக்கு கைலாகு தந்து உட்காரச் சொன்னார்.

அவரறையிலிருந்த சீனப் பெண்ணிடம் அந்தக் கடிதங்கள் இரண்டையும் கொண்டுவரச் சொல்லி, அவளும் கொண்டு வந்து குடுக்க எங்களிருவருக்கும் தனித்தனியாக அக்கடிதங்களைக் கொடுத்து’இந்தக் கடிதங்கள் நீங்கள் இருவரையும் இங்கு வேலையில் சேர்த்துள்ளோம் „ என்ற கடிதம் என்றவர் என்னைப் பார்த்து, ஆனால் உங்களுடைய வேலை அனுமதிப் பத்திரத்தின்படி 1982 டிசம்பர் பத்தாம் திகதிவரைதான் இங்கு வேலை செய்யலாம் என்று குறிப்பிட்டிருக்கின்றோம் என்று விளங்கப்படுத்தியவர் வேலை ஒப்பந்தப் படிவங்களிலும் கையொப்பம் வாங்கினார்.

தோடர்ந்து அவர், உங்களுடைய மனைவி மலேசியன் சிற்றிசன்.மலேசியன் சட்டத்திற்கும் சிங்கப்பூர் சட்டத்திற்கும் நிறைய வேறுபாடு உண்டு.நீங்கள் இருவரும் மலேசியாவிலா அல்லது சிறீலங்காவிலா இருக்கப் போகிறீர்கள் என்பதை நீங்கள் இருவருந்தான் முடிவெடுக்க வேண்டும்.

உங்களுடைய கணவர் இந்த வருடம் டிசம்பர் பத்தாம் திகதி வரையுமே இங்கு வேலை செய்ய முடியும்.அவருடைய வேலை அனுமதிப் பத்திரத்தை நீடிப்பதா இல்லையா என்பதை இப்பொழுது சொல்ல முடியாது,ஓகே…நீங்களே முடிவெடுங்கள் „ என்றவர் யாருக்கோ ரெலிபோன் செய்ய, ஓரிரு நிமடங்களில் கொஞ்சம் உயரமான சீனர் ஒருவர் பேர்சனல் மனேஜரின் அறைக்குள் வர, எங்கள் இருவருக்கும் „இவர் பொப் லீ இவர்தான் வேர்க் மனேஜர் உங்கள் இருவருக்கும் பொறுப்பானவர் „ என அறிமுகப்படுத்த,பொப் லீயும் எங்களுக்கு கைலாகு தந்துவிட்டு நாங்கள் வேலை செய்ய வேண்டிய இடத்துக்கு கூட்டிக் கொண்டு போனார்.

எனக்கு உற்பத்தி செய்யப்படும் உதிரிப் பாகங்களை சொரசொரப்பு இல்லாமல் செய்வதற்காக அந்தந்த உதிரிப் பாகங்களுக்கு ஏற்றவாறான ஒருவ கற்களையும் ஒருவகைத் திரவகத்தையும் ஊற்றி செய்யப்படும் பரல்லிங் பகுதியிலும்,யோகமலருக்கு உற்பத்தியாகும் பாகங்களை தரம்பார்க்கும் குவாலிற்றி கொண்ரோல் பகுதியிலும் வேலை தந்தார்கள்.எனக்குப் பொறுப்பாக சமற் என்ற மலேசியனும், குவாலிற்றி கொண்ரோல் பொறுப்பாளராக யப்பானியர் ஒருவரும்

இருந்தார்.எனக்கு கடும்நீலநிறத்தில் காற்சட்டை சேர்ட்டும்,யோகமலருக்கு வெளிர்நீலநிறத்தில் காற்சட்டை பிளவுசும் குடுத்தார்கள்.

நான் ஆண்கள் உடை மாற்றும் அறைக்குள் போய் வேலைத்தள உடுப்பைப் போட்டுக் கொண்டேன்.யோகமலரும் பெண்கள் உடை மாற்றும் அறைக்குள் போய் உடைமாற்றிக் கொண்டு வேலைத்தள உள்நடைபாதையில் எனக்கு கையைக் காட்டிவிட்டு தனது வேலைப் பகுதிக்கு போக என்னை சமற் கூட்டிக் கொண்டு போய், அங்கை வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு மலேக்காரனிடம் இவருக்கு வேலையைப் பழக்குங்கள், நாளையிலையிருந்து இவர்தான் இந்த மிசின்களில் காலமை சிப்ற்றுக்கு வேலை செய்யப் போறவர்’என்று சொல்லிவிட்டு அவர் போய் விடுகிறார்.

ஓன்பது மணிக்கு காலமை இடைவேளைவிட நான் வேலை செய்த பரல்லிங் பகுதி அறையைவிட்டு வெளியே வந்து யோகமலருக்காக காத்துக் கொண்டிருக்க, யோகமலர் சாய்ச்சிக்கு வந்து நாங்கள் குடியிருக்கப் போகும் வீட்டில் சாமான்களை வைச்சுவிட்டு வெளியேவந்த போது எதிர்கொண்ட இலங்கை வம்சாவழியைக் சேர்ந்த பெணணுடன் வந்து கொண்டிருந்தாள்.

மூவருமாக கண்ரீனை நோக்கிப் போய்க் கொண்டிருந்தொம்.கண்ரீனை நெருங்கும் போது எங்கள் பின்னாலிருந்து „பொஸ்’ என்று கூப்பிடும் குரல் கேட்டு திரும்பிப் பார்த்தேன்.

ஜிஇயில் வேலை செய்த உரும்பிராயைச் சேர்ந்த உமாகாந்தன் வந்து கொண்டிருந்தான்.

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.