கட்டுரைகள்

இரட்டைக் குடியுரிமையை துறந்தவரின் ஈராண்டு ஆட்சிக்காலம்!… அவதானி.

காலிமுகத்திடல் சொல்லும் கதைகள் !

அவதானி.

இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல் நடந்து ஈராண்டும் கடந்து ஏழு மாதங்களாகிவிட்டதென்றால், பொதுஜன பெரமுனையின் அதிபர் வேட்பாளர் அதிமேதகு கோத்தபாய ராஜபக்ஷ வெற்றிபெற்று இம்மாதத்துடன் இரண்டு வருடங்களாகிவிட்டன.

எனினும் குறிப்பிட்ட ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களினதும் குடும்பங்களுக்கும் படு காயமடைந்தவர்களுக்கும் இதுவரையில் நீதி கிடைக்கவில்லை.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் குறிப்பிட்ட ஈஸ்டர் தாக்குதல் நடந்தபோது, மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும் ரணில் விக்கிரமசிங்கா பிரதமராகவும் பதவியிலிருந்தனர்.

மைத்திரி ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியையும், ரணில் ஐக்கிய தேசியக்கட்சியையும் பிரதிநிதித்துவம் செய்தவர்கள்.

ஈஸ்டர் சம்பவத்தினால், அதனை தடுத்திருக்கவேண்டிய அந்த சுட்டமண் – பச்சை மண் நல்லிணக்க அரசு, மீண்டும் பதவிக்கு வரமுடியவில்லை.

யாரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பது என்பதில் ரணிலுக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் மத்தியிலிருந்த இழுபறிநிலையில் மைத்திரி தனது ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவை, ராஜபக்ஷ சகோதரர்களுக்கு காண்பித்தார்.

இறுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதி நடந்த ஜனாதிபதி தேர்தலில், தனது அமெரிக்க இரட்டைக்குடியுரிமையை துறந்துவிட்டு வந்த, கோத்தபாய ராஜபக்ஷ சுமார் 69 இலட்சம் வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

அவர் தன்னை எதிர்த்து ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து ரணிலின் புறக்கணிப்போடு போட்டியிட்ட சஜித் பிரேமதாசவை விட 13 இலட்சத்து 60 ஆயிரம் வாக்குகள் அதிகமாகப் பெற்று வெற்றியடைந்தார். அதே 2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடந்த நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் ரணிலின் ஐக்கிய தேசியக்கட்சி ஒரு ஆசனமும் பெறாமல் படுதோல்வியடைந்தது. ரணிலும் காலம் கடந்து அவரது கட்சிக்கு கிடைத்த வாக்குகளின்

அடிப்படையில் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு பின்கதவால் வந்தார்.

சஜித் ஐக்கிய மக்கள் சக்தி என்ற அமைப்பை கட்டி வளர்த்து, எதிர்க்கட்சித் தலைவரானார்.

ரணில், சஜித், மைத்திரியின் அந்த நல்லாட்சி காலத்தில் 2019 ஏப்ரில் மாதம் நடந்த ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதியும் கிடைக்கவில்லை, அதனைச்சொல்லி, தாங்கள் பதவியிலிருந்திருந்தால், மக்களைக் காப்பாற்றியிருப்போம், ஏற்கனவே 2009 இல் இலங்கையில் பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துக்கட்டிய பெருமை எங்களுக்கே இருக்கிறது எனச்சொல்லி, முதலில் அதிபர் பதவியிலும் பின்னர் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் அரசுக்கட்டிலிலும் ஏறியிருக்கும் பொதுஜன முன்னணி, விலைவாசி உயர்வையடுத்து மக்களின் அதிருப்தியை சம்பாதித்துள்ளது.

கடந்த வாரம் 16 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தி அணியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டம் கொழும்பு காலிமுகத்திடலில் அரசுக்கு சவால் விடும் வகையில் அமைந்தது.

அந்த காலிமுகத்திடலுக்கு வாய் இருக்குமானால், பேசும் சக்தியோடு அதன் வரலாற்றையும் கூறியிருக்கும். ஆனால், அந்த பெருந்திடல், கடலின் அலையோசையையும் கேட்டவாறு தவழ்ந்து செல்லும் காற்றோசையுடனும் தன்னை ஆசுவசப்படுத்திக்கொண்டு, அங்கு ஆர்ப்பாட்டத்திற்காக ஒன்றிணையும் மக்கள் வெள்ளத்தின் ஆர்ப்பரிப்புகளையும் தலைமைதாங்கும் தலைவர்களினதும் ஆவேசப்பேச்சுக்களையும் கேட்டு ரசித்துக்கொண்டிருக்கிறது.

இற்றைக்கு 69 ஆண்டுகளுக்கு முன்னர் 1952 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் திகதி அதே காலிமுகத்திடலுக்கு குதிரைச்சவாரி செய்ய வந்தவிடத்தில் தவறிவிழுந்து இறந்தார் சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமர் டீ. எஸ். சேனாநாயக்கா.

அதனால், இடைக்காலப் பிரதமரானார் அவரது புதல்வன் டட்லி சேனாநாயக்கா. இவரது அரசு அப்போது நடைமுறையிலிருந்த பங்கீட்டு அரிசிக்கான மானியத்தை இரத்துச்செய்து, ஒரு படி அரிசியின் விலையை 25 சதத்திலிருந்து 70 சதத்திற்கு உயர்த்தியதனால், சமசமாஜக்கட்சியின் தலைவர் கலாநிதி என். எம். பெரேராவின் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நடந்து நிறைவடைந்ததும் அதே காலிமுகத்திடலில்தான். அதனைத்தான் இன்றளவும் இலங்கை வரலாற்று ஏடுகள் ஹர்த்தால் போராட்டம் என்று சொல்லிவருகின்றன.

அதன்பிறகு அந்தத் திடல் ஆர்ப்பாட்டங்களுக்கெனவே ஒதுக்கப்பட்டதாயிற்று. அத்துடன் மேதினம், சுதந்திர தினம் உட்பட அனைத்து அரசு விழாக்களும் அங்கு நடைபெற்றுவருகிறது.

2017 ஆம் ஆண்டில் எதிரணியிலிருந்த ராஜபக்ஷ சகோதரர்களினதும் அவர்களுடன் இணைந்திருந்த எதிரணி கட்சிகளினதும் ஆர்ப்பாட்டம் பெரியளவில் முன்னெடுக்கப்பட்டதும் அதே காலிமுகத்திடலில்தான்.

அதன்பிறகு இரண்டு வருடத்தில் 2019 இல் நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்ஷ சகோதரர்களில் ஒருவர் பதவிக்கு வந்தார்.

மீண்டும் அதிபர் தேர்தலுக்கு போட்டியிட முடியாத அண்ணன் மகிந்தவுக்கு பதிலாக தம்பி கோத்தபாய அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு களமிறக்கப்பட்டார். அண்ணன் பிரதமர். தம்பி ஜனாதிபதி, மற்றும் ஒரு தம்பி நிதியமைச்சர்.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, வரவு – செலவுத்திட்டத்தை சமர்ப்பித்துள்ள வேளையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித், தனது தலைமையில் அதே காலிமுகத்திடலில் தனது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தார்.

அங்கு இவ்வாறு எதிர்ப்பு அலையை உருவாக்கினால், அடுத்த தடவை தங்கள் கைகளுக்கு அதிகாரம் வந்துவிடும் என்ற குருட்டு நம்பிக்கையை அந்த காலிமுகத்திடல் ஏற்படுத்திவிட்டதோ என்றும் யோசிக்கத் தூண்டுகிறது.

1952 இல் இடதுசாரிகள் நடத்திய ஹர்த்தால் போராட்டம் அன்று ஒரு அரசாங்கத்தையே கவிழ்த்தது. அதற்கு ஈடுகொடுக்கமுடியாமல், அப்போதைய பிரதமர் டட்லி சேனாநாயக்கா, தனக்கு வயிற்றுவலி எனச்சொல்லிக்கொண்டு பதவி துறந்தார். அதனால், உறவு முறையில் அவரது மாமாவான சேர். ஜோன். கொத்தலாவல பிரதமரானார்.

அதன்பிறகு எத்தனையே அரசுகள் மாறி மாறி வந்துவிட்டன.

விலைவாசி உயர்வை எதிர்த்து அனைத்து கட்சிகளும் மக்களைத்திரட்டி ஆர்ப்பாட்டம், பேரணி நடத்திவிட்டன.

காலிமுகத்திடலும் அதற்காகவே உருவானதுபோன்று அத்தகைய ஆர்ப்பாட்டங்களை அனைத்து கட்சிகளும் அதற்காகவே நித்தியமாக்கிவிட்டது.

ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் அரிசியின் விலை சதக்கணக்கில் உயர்ந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்திய போராட்டம் வெற்றி கண்டது.

ஆனால், இன்று அரிசி மட்டுமல்ல, அத்தியாவசிய உணவுப்பொருட்கள், மற்றும் எரிபொருள் உட்பட அனைத்தும் விலையுயர்ந்துள்ள காலப்பகுதியில் சஜித் தலைமையில் நடத்தப்பட்டிருக்கும் ஆர்ப்பாட்டம் இலங்கையின் தற்போதைய அரசை கவிழ்த்துவிடுமா..? அல்லது மாற்றிவிடுமா..? அல்லது காலிமுகத்திடல் கண்ட ஆர்ப்பாட்டங்களில் இதுவும் பத்தோடு பதினோன்றாக அமைந்துவிடுமா..?

காலிமுகத்திடலும் அதனருகே ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கும் கடல் அலைகளும் மாறவில்லை. ஆனால், விலைவாசிகள்தான் மாறிக்கொண்டிருக்கின்றன. அங்கு வந்து கோஷம் எழுப்பும் தலைமைகளும் மாறிக்கொண்டிருக்கின்றன.

 

—0–

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.