கட்டுரைகள்

சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்!…. ( 30 ) ….. சட்டத்தரணி, பாடும்மீன், சு.ஸ்ரீகந்தராசா.

“இது என் கதையல்ல,

என்னைத் தாங்கிய என் மண்ணின் கதை”

 

மட்டக்களப்பில் ஒரே திணைக்களத்தில், கச்சேரி வளாகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தவர்களில் பெரும்பாலானோர்

1974 ஆண்டிலிருந்து வெவ்வேறு திணைக்களங்களுக்கு இடமாற்றம் பெறவேண்டிய தேவைப்பாடு எழுந்தபோது, எங்களுடன் பணியாற்றிய பெண்களுக்கு மட்டக்களப்பு அலுவலகத்தை விட்டுக்கொடுத்து விட்டு,

நானும், ஆரையம்பதியைச் சேர்ந்த நண்பர் தருமகுணசேகரமும் அம்பாறைக்கும், நண்பர் குகதாசன் அவர்கள் கொழும்புக்கும் அவ்வாறே ஏனையவர்களும் வெவ்வேறு இடங்களுக்கும் இடமாற்றம் பெற்றோம். அது இணைந்த சேவைகள் பணிப்பாளரின் அறிவுறுத்தல்களுக்கு அமைவான இடமாற்றங்கள் என்பதால், எந்தவித தயக்கமும் இல்லாமல் நாங்கள் நேரடியாக இணைந்த சேவைகள் பணிப்பாளரின் அலுவலகம் சென்று, வெற்றிடங்கள் உள்ள இடங்களில் எங்களுக்கு வசதியானதைக் கேட்டுப் பெறக்கூடியதாக இருந்தது. கொழும்பிற்குச் சென்ற குகதாசன் அவர்கள் நாரஹென்பிட்டியில் உள்ள தொழிற் திணைக்களத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார். 1975 இல் ஒருதடவை கொழும்பிற்குச் சென்றபோது, அங்கு சென்று அவரைச் சந்தித்திருக்கிறேன்.

இப்போது, 1977 இல், நானாக எனது தேவைக்காகக் கொழும்பிற்கு இடமாற்றம் எடுக்க முயலும்போது, அதனை எப்படிச் சாத்தியமாக்குவது என்று அப்போது எனக்கு எந்த வழியும் தெரிந்திருக்கவில்லை. ஏதோ ஓர் அசட்டுத் துணிவோடு இடமாற்றம் கோரி ஒரு கடிதத்தினைத் தயாரித்து எடுத்துக்கொண்டு, இரவுப் புகைவண்டியில் கொழும்பிற்கு விரைந்தேன்.

அந்தக்காலத்தில், மட்டக்களப்பிற்கும் – கொழும்பிற்கும் தினமும் மூன்று புகையிரதப் போக்குவரத்துச் சேவைகள் நடைபெற்றன. காலை 5.00 மணிக்கு உதயதேவியும், மதியம் 1.30 இற்கு ஹிஜ்ரா புகையிரதமும், இரவு 8.00 மணிக்கு இரவு வண்டியுமாக மட்டக்களப்பிலிருந்து தினமும் கொழும்பிற்கு மூன்று புகைவண்டிகள் சென்றன. அதேபோலக் கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கும் மூன்று சேவைகள் இருந்தன. இரவுப் புகைவண்டி, அதிகாலை 5.00 மணியளவில் கொழும்பைச் சென்றடையும்.

அன்றைய இரவுப் பயணத்தில், எனது சிந்தனை முழுவதும் எப்படிக் கொழும்பிற்கு மாற்றம் எடுப்பது என்பதைப் பற்றியதாகவே இருந்தது. எனது விண்ணப்பத்தில் எனது உயர்படிப்பு நோக்கத்தைத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தாலும், வெறும் விண்ணப்பம் மட்டும் போதுமா என்ற எண்ணம் என்னைக் குடைந்துகொண்டிருந்தது. அப்போதுதான் ஒருவரின் நினைவு எனக்கு வந்தது. அவர்தான் களுதாவளையைச் சேர்ந்த வீ.கந்தசாமி அண்ணன் அவர்கள்.

களுதாவளை நாலாம் குறிச்சியில், களுவாஞ்சிகுடி எல்லையிலிருந்து மிக அண்மையில் வசித்துவந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் இரத்தினவேல் என்று அந்தக்காலத்தில் பெரும்பாலானவர்களால் அறியப்பட்டவராயிருந்த வீரபத்திரன்

கந்தசாமி அவர்கள். அவரைப் பற்றிப் பலர் அறிந்திருக்க அப்படியென்ன காரணம் என்றால், இலங்கை நிர்வாக சேவையில் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவுசெய்யப்படுவது முயற்கொம்பாக இருந்த அந்தக்காலத்தில், பட்டிருப்புத் தொகுதியில் இருந்து இலங்கை நிர்வாக சேவை போட்டிப்பரீட்சையில் சித்தியெய்திய முதலாவது நபர், (எனக்குத் தெரிந்த அளவில்) அவர் என்பதுதான். அவர் மட்/பட்டிருப்பு மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர். எனது

தாய்மாமனாரான சரவணமுத்து அவர்களோடு ஒன்றாகப் படித்தவர். நான் ஆட்பதிவுத் திணைக்களத்தில், 18 வயது இளைஞனாக, அரும்பு மீசையுடன் சேவையில் சேர்ந்திருந்த காலத்தில் அவர் மட்டக்களப்பு கச்சேரியில் உணவுக் கட்டுப்பாட்டுத் திணைக்களத்தின், உதவி ஆணையாளராக இருந்தார். ஒரு சமயத்தில் அவருக்கும் எனக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலைமைக்கு, அவருக்குக் கிடைக்கப்பெற்ற தவறான ஒரு தகவல்தான் காரணம் என்பதை அவராகவே அறிந்துகொண்ட பின்னர், என்னைப்பற்றி அவர் சரியாகப் புரிந்துகொண்ட தன் விளைவாக, இருவருக்கும் இடையில்

மரியாதையான நட்புணர்வு மலர்ந்து நீண்டகாலம் தொடர்ந்திருந்தது.

கொழும்பிற்குச் சென்றுகொண்டிருந்தபோது வீ.கந்தசாமி அண்ணனின் நினைவு வந்ததால் மறுநாள் காலை முதல்வேலையாக அவரைச் சென்று சந்தித்தேன். அப்போது அவர், மக்கள் குழுத் திணைக்களத்தின் கொழும்பு தலைமையகத்தில், உதவி ஆணையாளராக இருந்தார். நான் எனது நோக்கத்தை அவரிடம் சொன்னபோது, உடனே தொலைபேசியில் ஒருவருடன் பேசினார். பின்னர், பொது நிர்வாக அமைச்சின் இணைந்த சேவைகள் பிரிவில் ஓர் உதவிப் பணிப்பாளராக இருந்த திருமதி வயலட் ஃபெர்னாண்டோ என்பவரைச் சென்று சந்திக்கும்படி கூறினார். அவர்கள் இருவரும் ஒரே காலத்தில் நிர்வாக சேவைக்குத் தெரிவுசெய்யப்பட்டு ஒன்றாகப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் என்பதைப் பின்னர் தெரிந்துகொண்டேன்.,

திருமதி வயலட் ஃபெர்னாண்டோதான் எங்களுக்கான இடமாற்றம், பதவி உயர்வு முதலியவைகளுக்குப் பொறுப்பான பகுதிக்கு உதவிப் பணிப்பாளராக இருந்தார். அவரைச் சந்தித்து என்னை அறிமுகம் செய்தவுடனேயே, அவர் எந்த திணைக்களத்திற்குப் போக விருப்பம் என்று என்னைக் கேட்டார். அந்தக் கேள்வியை நான் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. அதனால், அப்போது என் மனதில் தோன்றியபடி, “பொதுநிர்வாகம், தொழில் திணைக்களம்….” என்று நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, “ஓ…தொழில் திணைக்களம்…ஓகேயா?” என்று கேட்டுவிட்டு, விடய எழுதுனரைக்கூப்பிட்டு எனக்கு இடமாற்ற ஆணையைத் தயார்செய்யும்படி கூறினார். அரைமணித்தியாலத்தில் இடமாற்ற ஆணையைப் பெற்றுக்கொண்டு, நேரே கந்தசாமி அண்ணனிடம் சென்று நன்றி சொல்லிவிட்டு அன்றிரவே ஊருக்குத் திரும்பிவிட்டேன்.

(கடந்தவாரம் இந்தக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கையில், கந்தசாமி அண்ணன் அவர்களைப் பற்றிய தகவலொன்றை அறிய முற்பட்டபோது, அவர், சிலமாதங்களுக்கு முன்னர், 2021 ஓகஸ்ட் மாதம் இலண்டனில் காலமானார் என்ற துயரமான செய்தியைக் களுதாவளை, இளையதம்பி சிவானந்தம் அவர்கள் மூலம் அறிய நேர்ந்தது.)

1977 பெப்ருவரி முதலாம் திகதியிலிருந்து, கொழும்பு 5 இல் உள்ள தொழிற் திணைக்களத் தலைமை அலுவலகத்தில் கடமையாற்றத் தொடங்கினேன்.

கணிசமான அளவில் தமிழர்கள் அங்கு பணியாற்றிக்கொண்டிருந்தார்கள். தொழிற் திணைக்களத் தமிழ்ச்சங்கம் என்றபெயரில் ஓர் அமைப்பை நடத்திக்கொண்டிருந்தார்கள். சங்கத்திற்கென சிறிய நூலகம் ஒன்றையும் வைத்திருந்தார்கள். சாண்டில்யன், அகிலன் முதலியவர்களின் நூல்கள் முதல் நாளது வரையிலான குமுதம், கல்கி, ஆனந்தவிகடன், கலைக்கதிர் முதலிய சஞ்சிகைகளும் அங்கு கிடைக்கப்பெற்றன. இராணிமுத்து வெளியீடுகளாகவும், வீரகேசரி பிரசுரங்களாகவும் வெளிவந்துகொண்டிருந்த எல்லா நாவல்களும் அங்கே இருந்தன.

1977 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரத்தினைத் தொடர்ந்து தமிழ் உத்தியோகத்தர்கள் எல்லோரும் தமது தாயகங்களான வடக்கிற்கும் கிழக்கிற்கும் அனுப்பப்பட்டுச் சிலமாதங்களின் பின்னர் மீண்டும் தத்தமது அலுவலகங்களுக்குத்

திரும்பி வந்த சம்பவங்கள் இலங்கையின் வரலாற்றில் என்றும் அழிக்க முடியாத வரலாறாக உள்ளது. அவ்வாறு தொழிற் திணைக்களத்திற்கு தமிழர்கள் திரும்பி வந்தபோது அங்கேயிருந்த நூலகத்தின் அலுமாரிகளில் வைக்க்கப்பட்டிருந்த நூல்கள் கிழிக்கப்பட்டும் சிதைக்கப்பட்டும் கிடந்ததாக என்போன்றோருக்கு முன்னர் திரும்பி வந்திருந்தவர்கள் கூறினார்கள். பின்னர் தொழில் ஆணையாளரின் உத்தரவினால் தமிழ்ச் சங்க நூலகத்திற்கென நான்காவது மாடியில் அறை ஒன்று ஒதுக்கப்பட்டு அதில் நூலகம் புதுப் பொலிவுடன் தொடர்ந்து இயங்கியது.

தொழிற் திணைக்களத்தில் மட்டுமன்றி, அதற்கு அண்மையில் அமைந்திருந்த நில அளவைத் திணைக்களத்திலும் ஒரு தமிழ்ச்சங்கம் இருந்தது. அங்கும் ஏராளமான தமிழர்கள் பணியாற்றிக்கொண்டிருந்தார்கள்.

எனது ஊரவரும், என்னைவிட நான்கு வயது மூத்தவரானதால் என்னைப்பற்றிச் சிறுவயதிலிருந்தே தெரிந்தவருமான, நண்பர் வி.குகதாசன் அவர்கள் என்னைப்பற்றியும் எனது ஈடுபாடுகள் பற்றியும் அறிமுகப்படுத்தியதன் காரணமாக தொழிற்திணைக்களத்தில் கடமையாற்றிக்கொண்டிருந்த தமிழர்களில் பெரும்பாலானோர் எனக்கு நண்பர்களாகினார்கள்.

அண்ணாவியார் இளைய பத்மனாதன், சோதிலிங்கம், அருணகிரி, அன்ரன், ஒப்பனைக்கலைஞர் செல்லத்துரை, செல்வநாயகம், அண்மையில் காலமான சட்ட விரிவுரையாளர் சிவபாதம், இரவீந்திரனாதன், இரத்தினவடிவேல், ஸ்ரீமதி தியாகராஜா, புஸ்பா, சிவனேசராசா, அந்தோனிப்பிள்ளை, விவேகானந்தன், மருதடியான்,பவளநாதன், சர்வேஸ்வரன், வேலாயுதர், செல்வி திலகவதி கணபதிப்பிள்ளை, மற்றும் பெயர்கள் மறந்துபோய் முகங்கள் மட்டும் நினைவில் உள்ள இன்னும் பலரின் நட்பு எனக்குக் கிடைத்தது. சில மாதங்களிலேயே, அண்ணாவியார் இளைய பத்மநாதன் அவர்களின் நெறியாள்கையில், வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் மேடையேற்றப்பட்ட நாடகம் ஒன்றில் முக்கிய பாத்திரத்தில் நான் நடிக்கும் அளவுக்கு அங்கு நான் மிக விரைவாகப் பலருக்கும் அறிமுகமானேன்.

கொழும்பிற்கு மாற்றம்பெற்று வந்த நோக்கத்தைத் தாமதியாமல் செயற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டேன். கொழும்புப் பல்கலைக் கழகத்தில் சட்டத்துறையில் மட்டுமன்றி வேறு துறைகளிலும் பட்டம்பெற முனையும் வெளிவாரி மாணவர்களைப் பதிவுசெய்வதற்கென்று தனியாக ஒரு முகவர் நிறுவனம் பல்கலைக் கழகத்தின் பகுதியாகவோ அல்லது பல்கலைக்கழகத்தோடு இணைந்தோ செயற்பட்டுக்கொண்டிருந்தது. அங்கு சென்று, என்னைக் கொழும்புப் பலகலைக்கழகத்தில் வெளிவாரி சட்ட மாணவனாகப் பதிவுசெய்துகொண்டேன்.

அனைத்திலங்கை இந்து வாலிபர் சங்கத்தின் தலைவராக இருக்கும் நண்பர், த.மனோகரன் அவர்கள், நான் கொழும்பிற்கு மாற்றம் பெற்றுச் சென்றவுடன் அங்கு என்னைத் தேடிவந்து சந்தித்தார். நான் அம்பாறையில் இருந்த காலத்தில் அரசாங்க எழுதுவினைஞர் சங்கத்தின் அம்பாறை மாவட்டத்தின் பிரதிநிதியாக மத்திய செயற்குழுவுக்குத் தெரிவுசெய்யப்பட்டிருந்தேன். சங்கத்தின் முக்கிய உறுப்பினராக இருந்த த. மனோகரனின் நட்பு அப்போது ஏற்பட்டிருந்தது. அதன்விளைவாகவே அவர் எனது வருகையை அறிந்ததும் சந்திக்க வந்தார். அவ்வாறு வந்தவர், நான் கொழும்பில் தங்குவதற்கு, கொழும்பு 7 இல், டொரிங்டன் சாலையில் உள்ள, அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான “டொரிண்டன் தொடர்மாடி வீடு” ஒன்றில் அறையொன்றை ஒழுங்குசெய்து தந்தார். மலேரியாத் தடுப்புத் திணைக்களத்தில் கடமையாற்றிய திரு. தேவராஜா அவர்கள், அவரின் மனைவி ரமணி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அங்கு வசித்து வந்தார்.

அங்கே ஏறத்தாழ ஐந்து மாதங்கள் தங்கியிருந்தேன். அதன்பின்னர் மருதானை டாலி வீதியில் உள்ள ஒரு வீட்டில் சாப்பாட்டுடன், இடம் கிடைத்ததால் அங்கு தங்கத் தொடங்கினேன். அங்கு குறுமன்வெளியைச் சேர்ந்தவரும் வெல்லாவெளியில் ஒன்றாகக் கடமையாற்றியவருமான, நண்பர் தவப்பிரகாசம் ஏற்கனவே தங்கியிருந்தார். சில நாட்களில் எனது நெருங்கிய உறவினரும், நண்பனுமான இயன்மருத்துவர், சண்முகம் நடேசனும் அங்கு வந்து சேர்ந்தார். அங்கிருந்த காலத்தின் நினைவுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.

அந்த வீட்டில் மூன்று வேளை உணவுடன் தங்குமிடத்திற்கான மாத வாடகை நூற்றி அறுபது ரூபாய் ( ரூ: 160/=) அத்துடன், காலை மாலை மட்டுமன்றி வேண்டிய நேரமெல்லாம் எங்களுக்கும் எங்களைக் காண வரும் நண்பர்களுக்கும் தேனீர் கிடைக்கும். இப்பொழுது உள்ள வாழ்க்கைச் செலவுடன் ஒப்பிட்டுப் பார்ப்பவர்கள் இதையெல்லாம் நம்ப மறுப்பார்கள்.

வெள்ளிக்கிழமைகளில் மாலை வேளையில் பெரும்பாலும் கப்பிதாவத்தைக் கோவிலுக்குப் போவோம். அங்கே வழிபட்ட பின்னர், நெற்றியிலே திருநீறு, சந்தனப் பொட்டுடன், முஸ்லிம் கடையில் சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு, மருதானைச் சந்தியில் பாதையோரமாகப் பாதசாரிகளின் பாதுகாப்பிற்காகப் பொறிக்கப்பட்டிருந்த குழாய்க் கம்பி வேலியில் ஏறியிருந்து கதைத்துக் கொண்டிருப்போம். அப்போதும் எங்கள் நெற்றிகளில் பக்தகோடிகளின் அடையாளங்கள் பளிச்சென இருக்கும். பின்னர் சிலவேளை, டாலி வீதியில் இருந்த காமினி தியேட்டரில் இரண்டாம் காட்சி. சிங்களப்படம் பார்ப்போம். அப்போதும் எங்கள் நெற்றியிலே சைவத் தமிழனின் அடையாளங்கள் அப்படியே இருக்கும். அதைப்பற்றியெல்லாம் யாரும் வித்தியாசமாகப் பார்க்காத காலம் அது. படம் முடிந்ததும், அங்கிருந்து நடையாய் நடந்து எங்கள் இருப்பிடம் செல்வோம். எங்கும் எப்பொழுதும் நமது ஊரைப்போலச் சுதந்திரமாகச் சுற்றித்திரியக்கூடிய காலமாக அது இருந்தது.

ஆனால், சில மாதங்களுக்குப் பின்னர் அந்த நிலைமை முற்றாக மாற்றமடைந்தது. “1977 ஆவணி அமளி” எனப்படும் இனக்கலவரத்தின் பின்னர், தெரிந்தவழியில், பட்டப்பகலில்கூட நடந்து செல்லப் பயப்படும் காலம் ஆரம்பமானது. தமிழ்ப் பெண்கள்கூட, பொட்டு வைத்துக்கொள்ளாமல் நடமாடவேண்டிய நிலைமை ஏற்பட்டது.

1977 ஆம் ஆண்டுத் தேர்தலுக்கு, இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள, இறக்குவானைத் தொகுதியில், தம்பகமுவ என்ற ஊருக்கு தேர்தல் கடமைக்காக நான் சென்றிருந்தேன். அந்த ஊர் ஒரு குன்றின் உச்சியிலோ அல்லது மலைச் சரிவிலோ அமைந்திருப்பதாக என் நினைவில் நிற்கிறது. அங்கிருந்த அரசினர் மகாவித்தியாலயத்திற்கு, ஏறத்தாழ ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு தேர்தல் கடமைக்கு வந்திருந்த உத்தியோகத்தர்கள் அனைவரும் ஏறு பாதையில் நடந்து செல்ல வேண்டியிருந்தது. அது ஒரு சிறிய பாடசாலை. தேர்தலுக்கு முதல் நாள் இரவு அங்கே தங்கியிந்தோம். அலுவலர்கள் எல்லோரும் சிங்களவர்கள். 24 வயது இளைஞனான நான் மட்டுமே தமிழன். ஆனால் அந்த வித்தியாசமெல்லாம் எந்தவித அச்சத்தையோ, சங்கடத்தையோ உணரவைக்காதிருந்த காலம் அது. மாலையாகின்போது அந்த ஊர்மக்கள் சிலர் ஆண்களும் பெண்களுமாக, ஊர்த்தலைவர் என்று சொல்லக்கூடிய ஒருவர் தலைமையில் அங்கே வந்தார்கள். பிரம்பினால் பின்னப்பட்ட பெட்டிகள், பானைகள் என்பவற்றைக் கொண்டுவந்திருந்தார்கள். தேர்தல் அலுவலர்களான எங்களுக்கு வணக்கம் சொல்லிவிட்டுக் கொண்டுவந்திருந்த பொருட்களை மண்டபத்தினுள் வைத்தார்கள். அந்த ஊருக்கு அலுவலர்கள் யார் வந்தாலும் அவர்களுக்கு விருந்தளிப்பது அவர்களின் வழக்கமாம். பெட்டிகளில் சோறும், கறிகளும் இருந்தன. பானைகளில் தண்ணீர் இருந்தது. இரண்டு பானைகளில் “கள்” இருந்தது. நாங்கள் சாப்பிட்டு முடியும்வரை அவர்களில் இருவர் அங்கே இருந்து எங்களுக்கு உனவு பரிமாறி உதவினார்கள். எங்கள் தலைமை அதிகாரியாக இருந்தவர் பானையொன்றிலிருந்த கள்ளை ஒரு கோப்பையில் ஊற்றி எனக்குத் தந்தார். அது கித்துள் கள்ளாம்,

உடம்பிற்கு நல்லதாம் என்று என்னைக் குடிக்கும்படி சொன்னார். எல்லோரும் குடித்தார்கள். எனக்குப் பழக்கமில்லை என்று பலமுறை மறுத்தேன். பின்னர் அவரது வேண்டுகோளை மறுப்பது சரியல்ல என்பதாலும், அதைவிட, அங்கிருந்த மற்றவர்கள் எல்லோரிலிருந்தும் நான் தனிமைப்பட்டுவிடுவதுபோன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டதாலும், சிரித்துக்கொண்டே, கோப்பையி இருந்த கள்ளில் கொஞ்சம் குடித்தேன். சுவை நன்றாகத்தான் இருந்தது. முதல் பழக்கம். நான் குடித்த விதத்தைப் பார்த்து எல்லோரும் சிரித்தார்கள் – ஏழனமாக அல்ல. கள்ளங்கபடமில்லாத, நட்புணர்வோடு! சில நிமிடங்களில்எனக்குத் தலை சுற்றுவது போன்றதோர் உணர்வு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அது இல்லாமல் போயிற்று.

மறுநாட்காலை தேர்தல்கடமை முடிந்தபின்னர், எனது நெஞ்சின் உள்ளுணர்வு ஏதோ வித்தியாசமான சமிக்ஞையினைக் காட்டிக்கொண்டிருந்தது. தலைமை அதிகாரியின் வாகனத்தில் இரத்தினபுரிக்குச் சென்று, தாமதியாமல் அங்கிருந்து பஸ் பிடித்து கொழும்பு வந்து இருப்பிடம் சேர்ந்தபோது நள்ளிரவு கடந்துவிட்டிருந்தது. அறைக்குள் நான் நுழையும்போது சம்மாந்துறைத் தொகுதித் தேர்தல் முடிவு வானொலியில் அறிவிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. எம்.ஏ.அப்துல் மஜீத் அவர்கள் அமோக வெற்றியீட்டியிருந்தார்.

மறு நாளில் இருந்து, கொழும்பு வழமையான நிலைமையிலிருந்து மாறத்தொடங்கியது. மிகப் பலத்த மழை வருவதற்கு முன்னர், ஆங்காங்கே வானிலிருந்து விழுகின்ற சிறு துளிகளைப்போல, இரண்டு வாரங்களின் பின்னர் நாடுமுழுவதும் இடம்பெறவுள்ள ஆவணி அமளிக்குக் கட்டியம்கூறும் சம்பவங்கள் இடம்பெறத்தொடங்கின.

 

(நினைவுகள் தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.