முதல்நாள் சைக்கிள் சவாரி!…. (ஒரு அனுபவப் பகிர்வு) ….. ஏலையா க.முருகதாசன்.
முதல் நாள் சைக்கிள் சவாரி என்பது எனது வாழ்வில் மறக்க முடியாத நாள்.!
இன்றைய காலத்தில் முயற்சியும் ஆர்வமும், துணிவும் அவ்வாகனத்துறை சார்ந்த அறிவும் தன்னம்பிக்கையும் பணமும் இருந்தால் எந்த வாகனத்தையும் ஓடக் கற்றுக் கொள்ளலாம்.
ஒரு காலத்தில் சைக்கிள் ஓடக் கற்றுக் கொள்வதே பெரிய சாதனையான விடயம்.எங்களிடம் இரண்டு சைக்கிள்கள் இருந்தன.
எனது அப்பு(தந்தை) காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தவர்.வேலைக்குப் போவதற்கு ஒரு பழைய சைக்கிளும், வேறு இடங்களுக்குப் போவதற்கென கரியருடன்கூடிய புதுச் சைக்கிளும் வைச்சிருந்தார்.
எனது ஊரில் பலருக்கு சைக்கிள் ஓடச் சொல்லிக் கொடுப்பது வழக்கம்.நான் சிறுவனாக இருந்த போது வைக்கிளில் வீராப்பாய் போகிறவர்களைப் பார்த்து ஏங்கி, நான் சைக்கிளை எப்பதான் ஓடப்போகிறன் என நினைத்தது உண்டு.
முதலில் சைக்களின் கைப்பிடியைப் பிடித்து சைக்கிள் சரிஞ்சு விழாமல் நிலை தளும்பாமல் உருட்டக் கற்றுக் கொண்டன்.
சைக்கிளின் கைப்பிடியைப் பிடிச்சு சைக்கிளை உருட்டுவது சிலருக்கு சின்ன விசயமாகத் தெரியலாம்.ஆனால் அதில் இயற்பியல் கோட்பாடு உண்டு என்பது நுணுக்கமான அறிவு.
சைக்கிளை புவியீர்ப்பு இழுத்துப் பிடிக்கிற அதே நேரத்தில் பவன அமுக்கம் அதை அமுக்கிப் பிடிக்கும்.சைக்கிளின் சமநிலை தழும்பாமல் இருக்கத்தான் கைப்பிடியை பிடிக்க வேணும்.எனது இரண்டு கைகளும் புவியால் ஈர்க்கப்பட கைகள் உந்த சைக்கிள் உருளத் தொடங்கும்.
சைக்கிள் பார் என்ற தண்டுக்கு கீழே தலை இருக்கத்தக்கதான உயரத்தில் சிறுவனாக இருக்கும் போது சைக்கிள் எனக்குப் பென்னம் பெரிய பொருளாகத்தான் தெரிந்தது.
அந்த வயதில் மற்றவர்கள் பார்த்து வியக்க வேண்டும் என்பதற்காக சைக்கிளை உருட்டுவதே சாதனைதான்.
அந்த வயதில் இயற்பியல் என்ற பிசிக் ஊடாக புவியீர்ப்பு விசை பற்றியோ ஈக்குவலிப்பிறியம் என்ற சமநிலை பற்றியோ எதுவும் எனக்குத் தெரியாது.
பெரிய வகுப்பில் விஞ்ஞானப் பாடங்கள் படிக்கும் மாணவனாக விஞ்ஞானப் பாடங்களில் ஒன்றான பிசிக்ஸ் என்ற இயற்பியலை படித்த போதுதான் புவியீர்ப்பு பற்றியும் ஈக்குவலிப்பிறியம் என்ற சமநிலை பற்றியும் அறிஞ்சு கொண்டன்.
சைக்கிளை உருட்டும் போது சைக்கிள் பாட்டறிய விழுந்ததும் உண்டு என் பக்கம் விழுந்து காயங்கள் ஏற்பட்டதும் உண்டு, அது கனக்க.அதற்காக அம்மாவிடமும்
அப்புவிடமும் பேச்சு வாங்கியிருக்கிறன்.காயத்தை பார்த்த கோபத்தில் சடக்கென்று வரும் கோபந்தான் அது.’ உது உனக்கு இப்ப தேவையா’ என்பார்கள்.இரண்டு நாளைக்கு சைக்கிள் பக்கம் போகாமல் சத்தம் காட்டாமல் இருந்துவிட்டு பிறகு சைக்கிளைத் தொடுவன்.இது வழக்கமாக நடக்கும் ஒன்றுதான்.
உருட்டுவதில் தேர்ச்சி பெற்ற பின் வலது காலை பெடலில் வைத்து மற்றக்காலை நிலத்தில் ஊன்றி தெண்டித் தெண்டி சைக்கிளை உருட்டிக் கொள்ள, சைக்கிள் கொஞ்சத் தூரம் ஓடும்.
பிறகு சில நாட்கள் கொஞ்சத் தூரம் தெண்டித் தெண்டி உருட்டி ஓடிக் கொண்டிருந்த நான் எங்களுடைய வளவு ஒழுங்கைக்கு இலந்தைத்தடிகள் வைச்சு அடைச்ச வேலியோடு சரிஞ்சு விழுந்து முள்ளுக் குத்திய சம்பவங்கள் ஏராளம்.
பிறகு இடது காலை பெடலில் வைச்சு விளக்கி ஏறி மெதுவாக வலது காலை இருக்கையையும் கைப்பிடியையும் இணைக்கும் நீளமான தண்டுப் பகுதியான பாருக்கு கீழாலைவிட்டு அந்தப் பக்கமுள்ள பெடலை முன்னுக்கு தள்ளுவதும் இந்தப் பக்கமுள்ள பெடலை பின்னுக்கு தள்ளுவதுமாக சைக்கிள் ஓடிப் பழகும் அரிவரிப் பாடத்தை மேற்கொண்டிருந்தன்.
இந்தப் பயிற்சி சைக்கிளைக் கொண்டு வீட்டாலை வெளிக்கிட்டு பாக்கியம்மா ரீச்சர் முற்றத்தை பக்கவாட்டாக ஊடுருவிக் கடந்து அப்படியே ஞானவைரவர் கோவிலடிப் புளியடியை நோக்கிப் போய் புளிய மரத்தைக் கொஞ்சநேரம் சுத்திப் போட்டு, ஏதோ நான் சைக்கிள் ஓடுவதில் முழுத் தேர்ச்சி பெற்றுவிட்டது போல அங்கை இங்கை போகிறவர்களை கம்பீரமாக கெத்தாகப் பார்த்துக் கொள்வன்.
அடுத்த கட்டமாக பெடலை முன்னுக்கு பின்னுக்குத் தள்ளாமல் விளக்கத் தொடங்கினம்.பாக்கியம்மா ரீச்சர் வளவுக்குள்ளை ஒரு வாய்க்காலிருந்தது.அதிலை சைக்கிள் ஏறி இறங்க சரிஞ்சு விழுந்து தண்ணியும் சேறும் பூசிக் கொண்டதும் உண்டு.
இதிலை நான் கொஞ்சம் தேறி வந்து கொண்டிருக்கையில் இயற்பியல் கோட்பாடான ஸ்பெசிவிக் கிறாவிற்றி என்று புவியீர்ப்பும், ஈகுவலிப்பிறியம் என்று சமநிலையும் எனக்கு கைவரப்பெற மூக்கணாங் கயிறு கட்டிய வண்டில் மாடுமாதிரி சைக்கிள் எனது கட்டுப்பாட்டுக்குள் வந்து சொல்வழி கேட்கத் தொடங்கியது.
இதனால் இலந்தைத்தடி வைச்சுக் கட்டிய வேலியிலும் வாய்க்காலிலும் விழுவது தவிர்க்கப்பட்டு இரண்டு கதியால்களுக்கிடையிலேயே சைக்கிளைக் கொண்டு போவதற்குரிய வீரதீரத் தேர்ச்சியைப் பெற்றுவிட்டன்.
புவியீர்ப்பும் ஈக்குவலிப்பிறியமும் கைவரப் பெற்றதும், மெதுவாக வலதுகாலைத் தூக்கி தண்டுக்கு மேலாலை(பாருக்கு மேலாலை) போட,சைக்கிள் விழாமலிருக்க இன்னும் கொஞ்சம் காலை கீழை கொண்டு போய் பெடலைத் தொட்டுத் தள்ள இடது கால் இந்தப் பக்கத்து பெடலை அமத்த,உற்சாகத்தடன் இரண்டு கால்களும் மாறி மாறித் தள்ள சைக்கிள் ஓடத் தொடங்க நான் அடைந்து பரவசத்துக்கு எல்லையே இல்லை.
அப்பு சீமெந்துத் தொழிற்சாலையால் வருவதற்கு முந்தித்தான் இந்தப் பயிற்சிகள்.புதுச் சைக்கிளில் நான் பயிற்சி பெற்றதால் சைக்கிள் அங்கை இங்கை விழுந்து மண்ணால் அழுக்காகியதை கவனமாகத் துடைத்துவிடுவன்.
ஆனால் களவாக சைக்கிள் பழகுவதை அப்பு கண்டுபிடிச்சுவிட்டார். ஆனால் ஒன்றும் சொல்லவில்லை.அம்மாவும் அவன் எனக்கு ஆதரவாக, „அவன் தானாகப் பழகுகிறான் பழகட்டுமே „என்று சொல்லிவிட்டார்.
ஆனால் இருக்கையில் உட்கார்ந்து ஓடத் தொடங்காத நிலையில்,பாரைத் தொட்டும் தொடமால்(தண்டை) இருந்து கொண்டு சைக்கிள் ஓடுவதைப் பார்த்த எனது அயலில் உள்ள திருமணமான பெண்களில் சிலர் „கவனம் மொந்தன் வாழைக்காயும் விதையும் கசங்கப் போகுது அது முக்கியம்’ என்று சிரிசு;சுக் கொண்டே நகைச்சுவையாக கேலி செய்தார்கள்.
அவர்கள் எதைச் சொல்கிறார்கள் என்று விளங்கினாலும், நான் விளங்காத மாதிரி நடிச்சு அதைப் பரவாய் பண்ணாமல் விட்டன்.நான் என்ன மூக்கைப் பிடிச்சால் வாய் ஆவெண்ணத் தெரியாதவனா?;விளங்கும்.
என்னொத்த அயல் பொட்டையள் அதைக் கேட்டு நமட்டுச் சரிப்புடன்; அது கவனம் என்பார்கள். பாரிலை இருந்து கவடு தேயத் தேயத் ஓடுவதில் தேர்ச்சி பெற்ற நான், இருக்கையில் இருந்து ஓடத் தொடங்கிய போது நான் ஒரு வீரனாக எனக்குத் தெரிஞ்சது.
சைக்கிளின் இருக்கையில் இருந்து ஓடத் தொடங்கிய அன்றிரவு அம்மா சொன்னா „ பஞ்சு ஐயாவிட்டை போய் திருநீறு போட்டுக் கொண்டு வா’ என்று.
பண்டத்தரிப்பு வீதியில் அம்பனைச் சந்தி கழிஞ்சு மேற்காகப் போனால் வருத்தலைப்பிள்ளையார் கோவில் வரும்.அந்தக் கோவிலோடு ஒட்டியவாறு பண்டத்தரிப்பு வீதியில் தொட்டு ஆரம்பித்து ஒரு ஒழுங்கை போய் வடக்குத் தெற்கான ஒழுங்கையிலை தொட்டு நிற்கும்.
அவடத்தடியிலைதான் பஞ்சு ஐயா இருந்தவர்.அவரிட்டை எங்கள் அயலவரான சிதம்பரப்பிள்ளை ஐயாதான் கூட்டிக் கொண்டு போனவர்.
பஞ்சு ஐயா திருநீறு பூசி மந்திரம் சொல்லிக் கொண்டிருக்கையில் „நான் சைக்கிள் ஓடப் பழகிட்டன் „ என்று சொல்ல அதற்கும் சேர்த்து திருநீறு போடுறன் என்றார்…
(ஓடும்…..)