கட்டுரைகள்

பங்காளிகள் சண்டையும் பரிதவிக்கும் பொருளாதாரமும்!…. அவதானி.

இலங்கையின் முன்னாள் அதிபர் ஜே. ஆர். ஜெயவர்தனா, அறிமுகப்படுத்திய விகிதாசார தேர்தல் முறையும் – 13 ஆவது திருத்தச் சட்டமும் தொடர்ந்தும் அரசியல் கட்சிகளிடையே பெரும் குழப்பத்தையே வளர்த்துவிட்டிருக்கிறதே தவிர, தேசம் இன்னமும் பின்தங்கிய நிலையில்தான் காட்சி தருகிறது.

இக்குறைபோதாது என்று “ ஒரே நாடு – ஒரே சட்டம் “ என்ற பூதமும் வெளிக்கிளம்பியுள்ளது.

சமகால அரசின் பங்காளிக்கட்சிகள் அனைத்தும் உள்ளுக்குள் பொருமிக்கொண்டு, அறிக்கை மேல் அறிக்கை விடுத்தவாறு ஊடகச் சந்திப்புகளையும் நடத்தி வருகின்றன.

முன்னாள் அதிபர் மைத்திரிக்கு ஒரு கட்சி, வாசுதேவ நாணயக்காரவுக்கு ஒரு கட்சி, பேராசிரியர் திஸ்ஸ விதாரனவுக்கு ஒரு கட்சி, தினேஷ் குணவர்தனாவுக்கு ஒரு கட்சி, பந்துல குணவர்தனாவுக்கு ஒரு கட்சி, உதய கம்மன்பிலவுக்கு ஒரு கட்சி, விமல் வீரவன்சவுக்கு ஒரு கட்சி, இவை தவிர டக்ளஸ் தேவானந்தா, வியாழேந்திரன், “ பிள்ளையான் “ சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆகியோருக்கு தலா ஒவ்வொரு கட்சி, இவை அனைத்துக்கும் தலைமைதாங்கும் பசில் ராஜபக்ஷ உருவாக்கிய பொதுஜன பெரமுன கட்சி.

இவை அனைத்தும் பங்காளிகளாகியிருக்கும் இந்த அரசு, சமகால கொரோனோ பெருந்தொற்றுக்கு மத்தியில் , தலையணை உறையை மாற்றுவதுபோன்று அடிக்கடி அமைச்சர்களையும் மாற்றிக்கொண்டு விலைவாசி உயர்வையும் பெருந் தொற்றையும் கட்டுப்படுத்த முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது.

“ அடிமுட்டாள்களைக்கொண்ட நாடாளு மன்றமே தற்போது இயங்குகிறது “ என்று அரசில் அங்கம் வகிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச்சேர்ந்த இராஜாங்க அமைச்சர் தயாஶ்ரீ ஜயசேகர தமது கட்சிக்கூட்டத்தில் தெரிவிக்கிறார்.

“ தயாஶ்ரீ ஜயசேகரவின் கருத்துக்கள் தொடர்பாக நாம் அலட்டிக்கொள்ளவேண்டியதில்லை “ என்று எதிர்வினையாற்றுகிறார்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்.

“ ஒரு அரசாங்கத்தை தோற்றுவிப்பதிலும் பார்க்க, தோற்றுவித்த அரசாங்கத்தை காப்பாற்றுவதுதான் மிகவும் கடினமானது “ என்று திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ்.

“ மக்களுக்கான சரியான பயணத்தை அரசு மேற்கொள்ளாவிடின், பங்காளிக்கட்சிகள் மாற்று வழியை நாட வேண்டி வரும் “ என்று எச்சரிக்கிறார் பேராசிரியர் திஸ்ஸ விதாரன.

இந்த அமளிகளுக்கு மத்தியில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, “ வரவிருக்கும் வரவு – செலவுத்திட்ட அறிக்கையின் பின்னர் அமைச்சரவையில் மாற்றங்கள் வரும் “ என்று அமைச்சர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்யும் அறிவிப்பை விடுத்துள்ளார்.

ஏற்கனவே அமைச்சர்கள் மாற்றப்பட்டனர். மீண்டும் ஒரு மாற்றமா..?

அமைச்சு அலுவலகங்கள் இனிமேல் பிரியாவிடை நிகழ்வுகளுக்கும் நேரம் ஒதுக்கநேரிடும்.

ஏற்கனவே சுகாதார நலத்துறை அமைச்சராகவிருந்த பவித்ரா வன்னியராச்சி, “ இந்த கொரோனோ பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மந்திரித்த தண்ணீர் உள்ள மண்குடத்தை நதியிலே விடவேண்டும் “ என்று அனைத்துலகப்புகழ் பெற்றுவிட்ட செய்தியும் சொல்லி, செய்தும் காண்பித்தார்.

பெருந்தொற்று நீங்கவில்லை. அவர்தான் அந்த அமைச்சைவிட்டு நீக்கப்பட்டார் !

அவரை கோத்தாவின் அரசு பதவி மாற்றம் செய்தபோது ஒரு கதையை சொல்லிவிட்டுத்தான் விடைபெற்றார்.

ஜனாதிபதி மீண்டும் ஒரு அமைச்சரவை மாற்றத்தை அறிவிக்கவிருக்கிறார் என்ற செய்தி வந்திருக்கும் இவ்வேளையில், பவித்ராவின் அந்தக்கதையை மீண்டும் கேட்போமா..?

“ முன்னொரு காலத்தில் ஒரு அரசனும் அவரது ஆலோசகரும் காட்டுவழியாக பயணம் செய்துகொண்டிருந்தனர். அப்போது அரசன் எய்த மூன்று அம்புகள் குறி தவறிவிட்டன. அதன்போது, என்றுமில்லாத வகையில் குறி தவறிவிட்டனவே…?! ஏன்..? ! “ என்று உடன்வரும் ஆலோசகரைக்கேட்டதும், அவர் “ எல்லாம் நன்மைக்கே “ என பதிலளித்துள்ளார்.

பயணமும் தொடர்ந்தது.

அரசன், திடீரென தன்னுடைய வாளை உருவியுள்ளார். அப்போது, தவறுதலாக அரசனின் விரலில் அதன் கூர்மை பட்டுவிடுகிறது. அதனால், விரலில் ஒருதுண்டு கீழே விழுந்துவிட்டது. இதுபற்றியும் ஆலோசகரிடம் அரசன் வினவியுள்ளார். அப்போதும் எல்லாம் நன்மைக்கே என, ஆலோசகர் பதிலளித்துள்ளார்.

கடுமையாக கோபம் கொண்ட அரசன், அந்த ஆலோசகரை, அங்கிருந்த பாரிய குழிக்குள் தள்ளிவிட்டு, தனது பயணப்பாதையை மாற்றிக்கொண்டு பயணித்துள்ளார்.

அவ்வாறு அரசன் சென்றுகொண்டிருந்தபோது, பலி பூஜைக்காக கூடியிருந்த காட்டுவாசிகளிடம் அரசன் சிக்கி விட்டார். அவர்கள் அப்போது பலி கொடுக்க ஒருவரை தேடிக்கொண்டிருந்தனர்.

அரசன் அவர்களிடம் வசமாகக் மாட்டிக்கொண்டார். அரசனை முழுமையாக நீராட்டி எடுத்துவந்தவர்கள், அங்கங்களை பரிசோதனை செய்தனர். பலி பூஜைக்கு முழுமையான உடலமைப்பைக் கொண்டவர்களை மட்டுமே பயன்படுத்துவர். ஊனம் உள்ளவரை பலியெடுக்க மாட்டார்கள்.

அரசனின் விரல்களில் ஒரு துண்டு இல்லை என்பதை கண்டுகொண்டனர். அதனால் பலி பூஜைக்கு அரசனை பயன்படுத்தாது விட்டுவிட்டனர். ஆச்சரியமடைந்த அரசன், அங்கிருந்தவர்களிடம் விசாரித்துள்ளார்.

ஊனம் உள்ளவர்களை பலியெடுக்கமாட்டோம் என விளக்கமளித்துள்ளனர். அப்போதுதான், எல்லாம் நன்மைக்கே என ஆலோகர் கூறியது அரசனுக்கு ஞாபகத்துக்கு வந்தது. அதன்பின்னர், தான் அவரைத்தள்ளி விழுத்திய குழியைத் தேடிச்சென்று, அதிலிருந்து ஆலோசகரை மீட்டெடுத்தார் அரசன்.

குழியிலிருந்து வெளியேவந்த ஆலோசகர், “ என்னை குழிக்குள் நீங்கள் தள்ளியதும் நன்மைக்கே “ என்றார்.

அரசனுக்கு மீண்டும் அதிர்ச்சி. ஏன் என வினவியுள்ளார். நானும் உங்களுடன் வந்திருந்தால், அந்த பலி பூஜையில் உங்களை விட்டுவிட்டு அடுத்த படியாக என்னையல்லவா பலியெடுத்திருப்பார்கள்…? நான் உயிர் தப்பிவிட்டேன். அதனால் இதுவும் நன்மைக்கே “ என அந்த ஆலோசகர் அரசனுக்கு விளக்கப்படுத்தியுள்ளார்.

கோத்தாவின் அரசில் அடிக்கடி அமைச்சர்கள் மாறுவார்களோ இல்லையே, இதுபோன்ற கதைகள்தான் எதிர்காலத்தில் அமைச்சர்களினால் தயாராகும் என்பது மாத்திரம் நிச்சயம்.

இந்த அரசியல் கூத்துக்களுக்கு மத்தியில் மக்கள் பெருந்தொற்றுக்கும் – விலைவாசி ஏற்றத்துக்கும் இடையில் சிக்குண்டு, ஒரு புறம் வேடன் மறுபுறம் நாகம். இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான்கள் போன்று பரிதவித்து வருகின்றனர்.

—0—

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.