Featureஇலக்கியச்சோலை

இன்று ஆரம்பமாகும் தமிழ் எழுத்தாளர் விழா!

அவுஸ்திரேலியாவிலிருந்து மெய்நிகர் அரங்கு

வாசிப்பு அனுபவப்பகிர்வுடன் தொடங்குகிறது

முருகபூபதி.

கங்காரு தேசம் எனவும், கடல் சூழ்ந்த கண்டம் எனவும் அழைக்கப்படும், வர்ணிக்கப்படும் அவுஸ்திரேலியாவில் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழத் தொடங்கிய பின்னர், தமது இன அடையாளத்திற்கு முக்கியத்துவம் வழங்குவதற்காக பல தமிழ் சமூக அமைப்புகளை உருவாக்கினார்கள்.

அவற்றுள் தமிழ்ப்பாடசாலைகள் மற்றும் கலை, இலக்கிய அமைப்புகளும் அடக்கம்.

எமது முன்னோர்கள் ஐவகைத்திணைகளை எமக்கு அறிமுகப்படுத்தினர்.

குறிஞ்சி – மலையும் மலைசார்ந்த நிலமும் / முல்லை – காடும் காடுசார்ந்த நிலமும் / மருதம் – வயலும் வயல் சார்ந்த நிலமும் / நெய்தல் – கடலும் கடல் சார்ந்த நிலமும் / பாலை – மணலும் மணல் சார்ந்த பகுதிகளும்

தமிழர்களின் அந்நிய நாடுகளை நோக்கிய புலப்பெயர்வையடுத்து அவர்களின் வாழ்வை பிரதிபலிக்கும் இலக்கியங்கள் அறிமுகமானதும் அந்தப்பிரதேசங்களின் நிலங்களும் பருவகாலங்களும் ஆறாவது திணையை அறிமுகப்படுத்தியிருக்கிறது. பனியும் பனிசார்ந்த நிலங்களுமே அந்த ஆறாம் திணையாகியிருக்கிறது.

அவுஸ்திரேலியா கண்டம் நால்வகை பருவகாலங்களை கொண்டது. இளவேணிற்காலம், கோடை காலம், இலையுதிர் காலம், குளிர்காலம். இங்கு பனியும் கொடுமை, கோடையும் கொடுமை என்பர் அனுபவித்தோர்.

எனினும் , பனிக்குள் நெருப்பாக வாழும் மக்களைப்பற்றியும் அதே சமயம் தங்கள் தாயகத்தின் நினைவுகளையும் அதாவது இலங்கையைச்சேர்ந்தவர்கள் இலங்கை பற்றிய நினைவுகளுடனும், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் இந்தியா பற்றிய நினைவுகளுடனும் மலேசியா, சிங்கப்பூர், பிஜித்தீவு உட்பட ஏனைய தேசங்களைச்சேர்ந்தவர்கள் அந்தத்தேசங்களின் நினைவுகளுடனும்தான் வாழ்கிறார்கள்.

ஆகாயத்தில் வட்டமிட்டுப்பறக்கும் பறவையும்கூட தனக்கான உணவைத்தேடி தரைக்குத்தான் வருகிறது.

அத்தகைய உறவுதான் ஒவ்வொருவரதும் தாயகம் – புகலிட தேசம் தொடர்பான விட்டு விலகமுடியாத நேசம்!

இலங்கையிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் ஏராளமான தமிழர்கள் தாயகத்தை விட்டு அந்நியநாடுகளுக்கு பல்வேறு காரணங்களின் நிமித்தம் சென்றுகொண்டேயிருக்கிறார்கள்.

கடந்த சிலவருடங்களாக படகுகளில் பசுபிப்பெருங்கடலை கடந்து உயிரைப்பணயம் வைத்து வந்து குடியேறிய மக்களையும் படகு மனிதர்கள் என்று அதாவது Boat People என்று அவுஸ்திரேலியா அரசாங்கம் அடையாளப்படுத்திவிட்டது. அவர்களும் எதிர்காலக் கனவுகளைத்தான் சுமந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களது வாழ்வுக்கோலங்களும் படைப்பு இலக்கியத்தில் இணைந்துவிட்டது.

பிரித்தானியரின் காலனிகளாகிய சில நாடுகளுக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சென்ற இந்தியத்தமிழர்களின் இன்றைய சந்ததியினரின் நாவில் தமிழ் தவழவில்லையென்றாலும் பெயர்களில் தமிழ் இன்னமும் வாழ்கின்றது.

அவுஸ்திரேலியாவும் பிரித்தானியரினால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கடல்சூழ்ந்த கண்டம்.

இந்தக்குடியேற்ற நாட்டுக்கு பல தேசங்களிலிருந்தும் கனவுகளோடு வந்த மக்கள், தமது வேரை தத்தம் தாயகத்தில் விட்டுவிட்டுவந்து வாழ்வை மாத்திரம் இக்கண்டத்தில் படரவிட்டுள்ளனர்.

பிரித்தானிய வெள்ளை இனம் இக்கண்டத்தை கடல்கடந்துவந்து கைப்பற்றியபொழுது, கனவுகளை வண்ணாத்திப்பூச்சிகளாக நம்பிக்கொண்டிருக்கும் அபோர்ஜனிஸ் என்ற ஆதிவாசி இனத்தவர்களின் பூர்வீக தேசமாகவே இக்கண்டம் இருந்தது.

பூமிப்பந்தின் நாலாதிக்கிலிருந்தும் பல்வேறினமக்களை, இக்கண்டத்தின் ஆட்சியாளர்கள் குடிபுகுவதற்கு அனுமதித்தமையால் பல்லின கலாசார நாடாகிவிட்டது.

தாயகத்தில் பார்த்திராத வெண்ணிற இரவையும் White Nights (கோடைகாலம்) வெண்பனிப்பொழுதையும் (குளிர்காலம்) இந்தக்கண்டத்தில், வருடந்தோறும் தரிசிக்கும் தமிழ்மக்களும் கனவுகளுடன்தான் வந்தனர்.

இவர்களில் உள்ளார்ந்த கலை,இலக்கிய ஆற்றல்மிக்கவர்கள் கற்பனைகலந்த கனவுகளுடன் வாழ்ந்துகொண்டிருப்பதனால், கற்பனைக்கும் கனவுக்கும் வடிவம் கொடுக்கவேண்டியவர்களாகிவிட்டனர்.

அந்த வடிவங்கள், புனைகதை, கவிதை, நாவல், நாடகம், புனைவு சாராத பத்தி எழுத்து, விமர்சனம், மொழிபெயர்ப்பு, நாட்டுக்கூத்து,

ஊடகம், ஓவியம், நடனம், இசை, இணையம் என்று வளர்ந்துகொண்டிருக்கின்றன.

எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் சங்கம் முன்னெடுத்துள்ள வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழாவின் இன்றைய முதல் நாள் நிகழ்ச்சியான வாசிப்பு அனுபவப்பகிர்வில் இடம்பெறும் நூல்கள் , இங்கு வதியும் எழுத்தாளர்களின் படைப்புகள்.

வாசிப்பு மனிதர்களை முழுமைப்படுத்தும் என்பர். சமகாலத்தில் வாசிக்கும் பழக்கம் குறைந்துவருகிறது என்ற கருத்தும் மேலோங்கியிருக்கிறது.

ஆனால், வாசிப்பதற்கான ஊடகங்கள் பெருகியிருப்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது.

நூல்களை விலைகொடுத்து வாங்கிப்படிப்பதில் ஆர்வம் காண்பிக்காதவர்கள் கூட இணையத்திலும் முகநூல்களிலும் தரவிறக்கம் செய்து வாசிக்கிறார்கள்.

கைத்தொலைபேசிக்குள்ளே உலகம் அடங்கியிருப்பதனால், அதன் தொடுதிரையை நகர்த்தி நகர்த்தி வாசித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அத்துடன் தாம் வாசித்தவற்றை பகிர்ந்துகொள்வதிலும், அவற்றுக்கு தாம் எழுதிய எதிர்வினைகளையும் பதிவேற்றுவதிலும் ஆர்வம் காண்பிக்கின்றனர்.

எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக்கலைச்சங்கம், கடந்த காலங்களில் நடத்திய எழுத்தாளர் விழாக்களிலும் கலை, இலக்கிய சந்திப்புகளிலும் நூல் விமர்சன அரங்குகளுக்கும் முக்கியத்துவம் வழங்கியிருக்கிறது.

அத்துடன் பிரத்தியேகமாக வாசிப்பு அனுபவப்பகிர்வுகளையும் சங்கத்தின உறுப்பினர்களது இல்லங்களில் நடத்தியிருக்கிறது.

கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக கொரோனா பெருந்தொற்று பரவி ஆட்டிப்படைக்கும் நெருக்கடிக்கு மத்தியிலும் சங்கம் தங்கு தடையின்றி மெய்நிகரில் நிகழ்ச்சிகளை தொடருகின்றது.

முன்னர் நடந்த எழுத்தாளர் விழாக்கள் மண்டபங்களில் நடந்தன. அதனால், விழா நடைபெறும் மாநில நகரங்களில் வாழும் கலை, இலக்கிய ஆர்வலர்கள் மாத்திரம் கலந்துகொள்வதற்கு வாய்ப்பிருந்தது.

இந்த மெய் நிகர் வாழ்க்கைக்கு நாம் பழக்கப்பட்டபின்னர், உலகெங்குமிருப்பவர்களை முகம் பார்த்து பேசக்கூடிய வரப்பிரசாதம் தோன்றியுள்ளது.

இன்று 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கை நேரம் மதியம் 1-30 மணிக்கும், அவுஸ்திரேலியா நேரம் இரவு 7-00 மணிக்கும் ஐரோப்பியா நேரம் காலை 8-00 மணிக்கும் சங்கத்தின் தலைவர் மருத்துவர் (

திருமதி ) வஜ்னா ரஃபீக்கின் தலைமையில் ஆரம்பமாகும் விழா வாசிப்பு அனுபவப்பகிர்வுடன் தொடங்குகிறது.

இன்றைய நிகழ்ச்சியின் இறுதியில் இலங்கை கிளிநொச்சியிலிருந்து எழுத்தாளரும் ஊடகவியலாளருமான திரு. கருணாகரன், புகலிட இலக்கியத்தின் எதிர்காலம் என்ற தொனிப்பொருளில் சிறப்புரையாற்றுவார்.

மெய்நிகர் இணைப்பு: https://us02web.zoom.us/j/81928215942?pwd=ZHQ3VUtyZXpudnNDcitpTHVTbm9JQT09

 

Meeting ID: 819 2821 5942

Passcode: 445435

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.