இலக்கியச்சோலை

படித்தோம் சொல்கின்றோம்…. “விழித்திருப்பவனின் இரவு”….. “இடக்கை”….. முருகபூபதி.

எஸ்.ராமகிருஷ்ணனின் இரண்டு நூல்கள்….

“விழித்திருப்பவனின் இரவு” … ” இடக்கை ”

முருகபூபதி.

 

தமிழ் இலக்கிய உலகில் மிகவும் பிரபல்யமான படைப்பாளி எஸ். ராமகிருஷ்ணன், குறிப்பிடத்தகுந்த சில நாவல்கள், பல சிறுகதைகள், ஏராளமான கட்டுரைகள் எழுதியவர். சஞ்சாரம் என்னும் நாவலுக்கு 2018 இல் இந்திய சாகித்திய அகடமி விருது பெற்றவர்.

இந்திய கதா விருது, கனடா இலக்கியத்தோட்டத்தின் இயல்விருது உட்பட பல விருதுகள் பெற்றிருக்கும் ராமகிருஷ்ணன், பாபா, பீமா, சண்டக்கோழி, உன்னாலே உன்னாலே முதலான திரைப்படங்களுக்கு வசனமும் எழுதியவர்.

இவற்றில் உன்னாலே உன்னாலே திரைப்படம் அவுஸ்திரேலியா மெல்பனில் படமாக்கப்பட்டபோது, இங்கு வருகை தந்தவர்.

மேலைத்தேய இலக்கியங்களையும் இலக்கியவாதிகளையும் அறிமுகப்படுத்தியவர், யாத்ரீகனாக மாநகரம்- நகரம்- கிராமம்- காடு- மலை- சோலை- கடல்- நதிக்கரையோரம் என அலைந்த, உள்ளமும் உணர்வும் உள்வாங்கியவற்றை இலக்கிய நயமுடன் இதழ்களில் பதிவு செய்து வருபவர். இன்றைய தமிழ் இலக்கிய உலகில் மிகுந்த கவனத்தைப்பெற்றவர்.

தமிழ் இலக்கிய உலகம் கொண்டாடும் படைப்பாளி எஸ். ராமகிருஷ்ணன், அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இம்மாதம் 12 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரையில் மெய்நிகரில் நடத்தும் தமிழ் எழுத்தாளர் விழாவின் இறுதி நாளன்று, 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை – நினைவும் நிஜமும் என்னும் தொனிப்பொருளில் இலக்கியத்தின் ஆதாரமும் சமகால நிகழ்வுகளும் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றவிருக்கிறார்.

இத்தருணம் அவர் ஏற்கனவே எழுதிய இரண்டு நூல்கள் பற்றிய எனது வாசிப்பு அனுபவத்தை இங்கு பதிவுசெய்கின்றேன்.

“விழித்திருப்பவனின் இரவு”

இலக்கியவாதிகள் விழித்திருக்கவேண்டும். விழித்திருந்தால்தான் விருப்பு- வெறுப்பற்று மாற்றுக் கருத்துக்கொண்டவர்களின் படைப்புகளையும் ரஸிக்கும் – நயக்கும் மனோபாவம் வளரும் என்பதை போதனையாகக் கூறாமல், எழுத்துப்பணியூடாகவே உணர்த்திவருபவர் ராமகிருஷ்ணன்.

முன்னர் உயிர்மை இதழில் தொடர்ச்சியாக – சுமார் ஒன்றரை வருடம்- அவர் எழுதிய உலகில் சிறந்த எழுத்தாளர்களைப் பற்றிய அறிமுகம் – அவர்களின் படைப்பாளுமை குறித்த மதிப்பீடுகளின் தொகுப்பு நூல்தான் விழித்திருப்பவனின் இரவு.

கடந்த 2008 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சென்னையில் நடந்த புத்தகச்சந்தையில் நான் வாங்கிய பல புத்தகங்களில் ஒன்று ராமகிருஷ்ணனின் விழித்திருப்பவனின் இரவு. உயிர்மை பதிப்பக வெளியீடு.

விளாதிமிர் நபகோவ், ஜோர்ஜ் லூயி போர்ஹே, கார்லோஸ் புயண்டஸ், ஹென்றி டேவிட் தோரோ, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், அன்னா அக்மதோவா, ஆன் சேக்ஸ்டன், பிடெரிகோ கார்சியா லோர்கா, வர்ஜீனியா வுல்ப், ஜோசப் கான்ராட், கோபோ அபே, பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி, மிலோராட் பாவிக், ராபர்டோ கலாசோ, எர்னெஸ்ட் ஹெமிங்வே, பாப்லோ நெருதா, ஆக்டோவியா பாஸ், யுகியோ மிஷிமா, லூயி கரோல், சில்வியா பிலாத், மிலான் குந்தேரா, சர். ரிச்சர்ட் பர்ட்டன், ஹெர்மன் மெல்வில், பிராம் ஸ்டாகர், ஜே.ஆர்.ஆர். டோல்கின், ஜோஸ் சரமாகோ, ஜே.எம். கூட்ஸி, ஓரான் பாமுக்.

யார் இவர்கள்…? என்று கேட்பீர்கள்

இத்தனை பேரினதும் படைப்புகளையும் வாழ்க்கைச் சரிதத்தையும் நூலகங்களிலிருந்தும் இணையத்தளங்களிலும் தேடிப்பெற்று தான் உள்வாங்கிக்கொண்டவற்றை நயமுடன் பகிர்ந்தளித்திருக்கிறார் ராமகிருஷ்ணன்.

தீவிரவாசகனாக இருந்தால் மாத்திரம் இந்த அரிய பணி சாத்தியமல்ல. தொடர்ச்சியான தேர்ந்த வாசிப்புடன், பெற்றுக்கொண்டதை தகுந்தமுறையில் வாசகர்களுக்கு எளிய நடையில் அறிமுகப்படுத்துவதற்கு எடுத்துக்கொண்ட அவரது உழைப்பு மகத்தானது.

தமிழ் வாசகர்களில் – எழுத்தாளர்களில் எத்தனைபேர் மேலே குறிப்பிடப்பட்டவர்களைப்பற்றி அறிந்திருக்கின்றோம் என்பது கசப்பான கேள்விதான்.

இந்தத்தொடரை ராமகிருஷ்ணன் எழுதியதற்கான நோக்கம் என்ன? என்பதைப்பார்ப்போம். அவரே சொல்கிறார்:-

“ வாழ்வு தரும் நெருக்கடிகளைத் தாண்டி சாகசத்தை தன் வாழ்வு முறையாகக் கொள்வதும், கதை, கவிதை போன்ற தனது படைப்பிலக்கிய முயற்சிகளுக்கு வெளியில் அரசியல், சமூக, கலாச்சாரத்தளங்களில் தீவிர செயல்பாடு புரிவதும், இயற்கையின் நெடும்பாதையில் அலைந்து திரிவதும் என உலகம் முழுவதும் எழுத்தாளர்கள் மிகப்பெரிய ஆளுமைகளாக இருந்துவருகிறார்கள்.

தமிழில் எழுத்தாளன் பெரும்பாலும் தன்னைச்சுற்றிய உலகை அறிந்துகொள்ளவும் அதன் சமூகக் கலாச்சாரச் செயல்பாடுகளில் பங்குகொள்ளவும் விருப்பமற்ற மத்தியதர மனப்பாங்கு கொண்டவனாகவே இருக்கிறான். அவனது வாழ்வு அலுவலகம், வீடு என்ற இரண்டு கரைகளுக்குள் ஒடுங்கிக்கிடக்கிறது. அதன் வெளிப்பாடு படைப்பிலக்கியத்தில் ஒரு சவலைத்தனத்தை ஏற்படுத்துகிறது.

சமகால உலக இலக்கியத்தின் இயங்குதளம் குறித்தும், இலக்கியம் தவிர்த்து பிற துறைகளில் எழுத்தாளர்களின் ஈடுபாடும் பங்களிப்பும் எப்படியுள்ளது என்பதை முதன்மைப்படுத்தி அதன் வழியே எழுத்தாளனின் ஆளுமையை அறிந்துகொள்ள முயற்சித்ததின் விளைவே இக்கட்டுரைகள். காலம் காலமாக எழுத்தாளனின் வாழ்வு எத்தனை தீவிரமும் சவாலும் நிரம்பியது என்பதை இக்கட்டுரைகள் விரிவாக விளக்குகின்றன. “

ராமகிருஷ்ணனின் இந்த நூலில் அதியுர்விருதான நோபல் பரிசு பெற்றவர்களும்- மனச்சிதைவினாலும் வீர சாகசத்தினாலும் தற்கொலை செய்துகொண்டவர்களுமான ஆண்-பெண் இருபாலரும் இடம்பெறுகின்றனர்.

அவர்களின் எழுத்தூழியத்துக்கும் அப்பால் அவர்களிடமிருந்த விந்தையான இயல்புகளும் வாசகர்களுக்குத் தெரியவருகின்றது.

எழுத்தாளர்களின் தனிப்பட்ட வாழ்வைப்பார்க்காதீர்கள், அவர்களின் படைப்புகளை மாத்திரம் வாசியுங்கள்.- என்ற குரலும் சமூகத்தில் அவ்வப்போது ஒலிக்கத்தான்செய்கிறது. “மரத்தைப்பாருங்கள் அதில் பூக்கும் மலர்களையும் காய்க்கும் கனிகளையும் பாருங்கள், வேரை

மாத்திரம் பார்க்கத் துணியாதீர்கள். அப்படித் துணிந்தால் மரம்தான் பட்டுப்போகும் “. என்று வாதிடுபவர்களும் இலங்கை-தமிழக இலக்கியச்சூழலில் நடமாடுகிறார்கள்.

சில கட்டுரைகளைப்படிக்கும்போது நெகிழ்ச்சியும் சிலிர்ப்பும் அதிர்ச்சியும் வருகிறது.

எழுத்தாளர்கள் தம்மைத்தாமே சுயவிமர்சனம் செய்துகொள்ளத்தூண்டுகிறது.

அந்த ஆளுமைகளிடமிருந்த முன்னுதாரணங்களை நாடச்செய்கிறது.

ஆக்கஇலக்கியவாதிகள் மட்டுமன்றி பத்திரிகையாளர்களும் வானொலி- தொலைக்காட்சி ஊடகவியலாளர்களும் அறிந்துகொள்ளவேண்டிய தகவல்களும் இக்கட்டுரைகளில் விரவியிருக்கின்றன.

பத்திரிகையாளரும் நாவலாசிரியரும் பிடல் காஸ்ரோவின் நண்பரும் நோபல் பரிசு பெற்றவருமான கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் எழுதிய ஒரு நூற்றாண்டு காலத் தனிமை என்ற நாவல் இதுவரையில் 37 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு நான்கு கோடிகளுக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது என்ற தகவல் வியப்பளிக்கிறது.

பத்திரிகையாளருக்கான ஒரு பயிலரங்கில் மார்க்வெஸ் உரையாற்றுகையில்,

“ டேப்ரிகார்டர்தான் ஒரு பத்திரிகையாளனின் முதல் எதிரி. அது ஒரு சாத்தான். சொன்னதைத் திரும்பச்சொல்லும் இயந்திரக்கிளி.”- என்றும் “பத்திரிகையாளனுக்குத்தேவையானவை குறிப்பு எழுதுவதற்கான சிறிய நோட்டும், எதையும் கூர்மையாகக் கேட்டு உள்வாங்கிக்கொள்ளும் காதுகளும் செய்திகளின் பின் உள்ள உண்மையை அறிந்துகொள்வதற்கான விடாப்பிடியான ஆர்வமும்தான்”- என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.

காளைச்சண்டையை ஆர்வமுடன் பார்த்த அனுபவத்தை இலக்கியமாக்கிய நோபல் பரிசுபெற்ற எழுத்தாளரான ஏர்னெஸ்ட் ஹெமிங்வே தமது தந்தையைப்போலவே துப்பாக்கியினால் தன்னைத்தானே சுட்டுத்தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

இத்தனைக்கும் போர்முனைகளில் சாவோடு போராடிய ஒரு இராணுவவீரர் அவர்.

தகவல் களஞ்சியமாக மட்டுமன்றி இலக்கியநயம் மிக்க கட்டுரைகளாகவும் விழித்திருப்பவனின் இரவு நூல் மிளிர்கிறது.

நவீன உலக இலக்கியத்தின் வரைபடத்தை உருவாக்கிய மகத்தான படைப்பாளிகளின் புதிர்ப்பாதைகளைப்பற்றி இந்த நூல் பேசுகிறது என்ற உயிர்மைப் பதிப்பகத்தின் கூற்று அழுத்தமான பதிவுதான்.

“இடக்கை” ( நாவல் )

17 ஆம் நூற்றாண்டில் நீதி மறுக்கப்பட்டவர்களின் வரலாற்றை சமகால வரலாற்றுடன் ஒப்பீடு செய்யத்தக்க புதினம்

ராமகிருஷ்ணன் எழுதியிருக்கும் இடக்கை என்னும் நாவல், இந்தியாவின் கடைசி மொகாலய சக்கரவர்த்தியின் அந்திமகாலத்தைப்பேசும் கதை. ஆலம்கீர் ஔரங்கசீப் பாதுஷா 1707 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி தனது 91 ஆவது வயதில் மறைந்திருக்கிறார் என்று வரலாற்று ஆசிரியர்கள் எழுதிய குறிப்புகளிலிருந்து பார்க்கின்றோம்.

இவ்வாறு துல்லியமாக அதற்கு முன்னர் இந்தியாவில் தென்னாட்டில் ஆண்ட சேர, சோழ, பாண்டியர்கள் பற்றிய காலம் பதிவுசெய்யப்படவில்லை. வடக்கே பல மொகாலய சக்கரவர்த்திகள் பற்றிய வரலாறுகளுக்கு சான்றுகள் இருப்பதனால் அவற்றை உசாத்துணையாகக்கொண்டு எஸ்.ரா.வும் இந்த நாவலை எழுதியிருக்கிறார்.

எஸ்.ரா. எழுத்தாளர் மட்டுமல்ல ஒரு யாத்ரீகனும்தான். நாடோடியாக அலைந்து தகவல்கள் திரட்டி எழுதும் அவரது படைப்புகளின் வரிசையில் இந்த இடக்கை எமது கரத்திற்கு வந்துள்ளது.

இதனைப்படித்துக்கொண்டே மதன் எழுதியிருக்கும் வந்தார்கள் வென்றார்கள் என்ற தொகுப்பு நூலையும் சமகாலத்தில் படித்தேன். வந்தார்கள் வென்றார்கள் விகடனில் தொடர்ந்து வெளியாகி வாசகரின் அமோக ஆதரவினால் தனிநூலாகவும் பதிப்பிக்கப்பட்டு ஒரு இலட்சத்திற்கு மேல் விற்பனையாகியிருக்கிறது.

அதனை விகடன்குழுமம், தமது விற்பனையில் ஏறு முகம் எனச்சொல்லியிருக்கிறது.

ஆனால், வேறு ஒரு சந்தர்ப்பத்தில் ஆனந்தவிகடனிலிருந்து மதன், வெளியேறும் துர்ப்பாக்கியமான சூழல் தோன்றியது.

அதுபோன்று சமூக நாவல்களும் சரித்திர நாவல்களும் ஏராளமான கதைகள், கட்டுரைகளும் எழுதியிருக்கும் எஸ்.ரா.வும் முன்னர் எந்த பதிப்பகத்தின் ஊடாக தமது நூல்களை வெளிக்கொணர்ந்தாரோ அந்த உயிர்மைப்பதிப்பகத்திலிருந்து வெளியேறும் சூழ்நிலை பின்னர் தோன்றியிருக்கிறது.

எஸ்.ரா. சிறந்த கதை சொல்லி. அவரது நாவல்கள், சிறுகதைகள் அனைத்திலும் இந்தத்தன்மையை காணமுடியும். நான் படித்தவற்றில், அவரது உறுபசி, யாமம், சஞ்சாரம் முதலான நாவல்களிலும் விழித்திருப்பவனின் இரவு என்னும் கட்டுரைத்தொகுப்பிலும் அவருடை தேடல் மனப்பான்மையை பார்த்து வியந்திருக்கின்றேன்.

அவர் இந்த இடக்கை நாவலுக்கு எழுதியிருக்கும் முன்னுரையில் இருந்து சில வரிகள்:-

“ இந்நாவல் வரலாற்றில் வாழ்ந்த சாமானியர்களின் கதையைச்சொல்ல முயலுகிறது. அதிலும் குறிப்பாக வரலாற்றின் இருண்ட பக்கங்களை, நிழல்களைப்போல குரலற்றுப்போன மனிதர்களை அடையாளப்படுத்துகிறது. நீதிக்காகக் காத்திருப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகிப்போன இன்றைய சூழலில் காலம் காலமாக இந்திய மக்கள் நீதிக்காக போராடிய அவலத்தை, நீதி மறுக்கப்பட்ட நிரபராதிகளின் வேதனைக்குரல்களை நினவுபடுத்துகிறது இந்நாவல்.”

இந்நாவலில் 45 அங்கங்கள். ஒவ்வொன்றிலும் பல கதைகள், உப கதைகள். அவற்றில் சில வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஒன்றிணைகின்றன. சில முடிச்சவிழாத புதிர்களாகிவிடுகின்றன.

அந்தக் கதைகள், உபகதைகளின் ஊடாக வாழ்க்கைத்தத்துவமும் மிளிர்கிறது. சில வரிகளைப்பாருங்கள்:

” சாவின் காலடிகள் தனது அறைக்கு வெளியே கேட்டுக்கொண்டிருப்பதை அவர் உணர்ந்தார். ஆனால், கதவைத்தட்டி

உள்ளே வரவில்லை. காத்திருக்கிறது. ஒரு வேளை தன்னிடம் அனுமதிகேட்டு காத்திருக்கிறதா? அதுதான் நிஜம் என்றால் வெளியே காத்திருக்கட்டும். சாவைக்கண்டு அவர் பயப்படவில்லை. ஆனால், அவரது மரணத்தின் பின்பு ஏற்படப்போகும் அரியணைச்சண்டைகளை நினைத்து அவர் மிகவும் வேதனைகொண்டார். தேசத்தை ஆளமுடிந்த தன்னால் வீட்டை நிர்வகிக்க முடியவில்லை.” (பக்கம் 9)

இந்தவரிகளுடன் சமகால தமிழர் அரசியலையும் நாம் ஒப்பீடு செய்யமுடியும்.

ஒளரங்கசீப்பின் வாழ்வின் இறுதிக்கட்டத்திலிருந்து நாவல் தொடங்கியிருந்தாலும், Flash back காட்சிப்படுத்தலின் ஊடாக அவரது இயல்புகள் வாசகர்களுக்கு சொல்லப்படுகிறது.

இந்நாவல் ஒரு சக்கரவர்த்தி பற்றியது மட்டுமல்ல அவர்கள் காலத்தில் அடிமைச்சேவகர்களாக வாழ்ந்த அடிநிலை மக்களைப்பற்றியதாகவும் அமைந்திருக்கிறது. இது நீதி வழங்கவேண்டிய மன்னனின் கதை மட்டுமல்ல, நீதி மறுக்கப்பட்ட மக்களின் கதையாகவும் விரிகிறது. ஔரங்கசீப்பின் படைகளைப்பற்றிய காட்சி 227 – 228 ஆம் பக்கங்களில் சித்திரிக்கப்படுகிறது.

அவரது படை புறப்படுவதற்கு ஆறுநாட்களுக்கு முன்பு படை கிளம்ப இருப்பதற்காக எக்காளம் ஊதப்படுகிறது. அன்றிலிருந்து ஒவ்வொரு படைப்பிரிவும் புறப்படுகிறது. நாற்பதாயிரம் காலாட் படை. எட்டாயிரம் குதிரை வீரர்கள், முந்நூறு யானைகள், பீரங்கிகள். ஆறுகள் குறுக்கே வந்தால் மன்னரும் படைகளும் அவற்றை கடந்துசெல்ல படகுகள் தயார் நிலையில், மன்னருக்கான மருத்துவர்கள், எழுத்தர்கள், சமையற்கலைஞர்கள், இவர்கள் தவிர இருநூறு ஒட்டகங்களில் கூடாரம் அடிக்கத்தேவையான பொருட்களும் ஏற்றிச்செல்லப்படும். ஆயிரம் கூலியாட்களும் உடன் அழைத்துவரப்படுவர்.

இவ்வாறு மன்னர் முன்னே செல்ல, அவரது பரிவாரங்கள் ஆயிரக்கணக்கில் பின்தொடர வாழ்ந்த சக்கரவர்த்தியின் அந்திமகாலம் எத்தகைய தனிமையில் இருந்திருக்கிறது என்ற செய்தி இந்நாவலில் அழுத்தமாக பதிவாகியிருக்கிறது. இத்தகைய மன்னன் வாழ்ந்த தேசத்தில் காலா என்ற சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள் ஆயிரக்கணக்கான அடிமைகள். அவர்கள் தீண்டத்தகாதவர்களாகவும் வாழத்தலைப்பட்டவர்கள்.

அவர்களின் ஒருவன் தூமகேது. அவனது வாழ்வில் விதி கோரமாக விளையாடுகிறது. அவன் ஒரு பாமரன். அவனுடன் சக்ரதார் என்ற பண்டிதரும் சிறைப்பட்டு சித்திரவதைகளை அனுபவிக்கிறார்.

இந்த நாவலில் இரண்டு பக்கங்களை எஸ்.ரா சித்திரிக்கிறார். அதாவது மன்னர் பரம்பரைக்குள் நிகழும் காட்சிகள், சதிகள், ஆணவம், அதிகார மமதை, சந்தேகப்படும் இயல்பு.

மறு புறத்தில் அடிநிலை மக்களின் இயல்புகள், அவர்களின் அறியாமை, இயலாமை, தனிமை, ஏழ்மை, ஏமாற்றம், துயரம். இந்நாவலில் நூற்றுக்கணக்கான பாத்திரங்களை எஸ்.ரா. படைத்துள்ளார். அவற்றில் மன்னருக்கு சேவகம் செய்யும் அஜ்யா பேகம் என்ற அரவாணியும், கைதியாக தண்டனை அனுபவித்து தப்பிஓடும் தூமகேதுவும், அந்நிய தேசத்திலிருந்து வரும் ரெமியஸ் முதலான பாத்திரங்களுடன் பாதுஷா ஔரங்கசீப்பும் முழுமையான பாத்திரங்களாகியிருக்கிறார்கள்.

பல காட்சிகள் படிம உத்தியிலும் மாயாவாத சித்திரிப்பிலும் வருகின்றன. மன்னர் ஒரு ஆட்டுத்தோலில் எழுதிவைத்த உயிலும் இந்நாவலில் முக்கியமான பாத்திரமாகிறது. ஆனால், அந்த உயிலுக்கு உயிரில்லை. அதனால் அது பேசவில்லை. மற்றவர்கள் பேசுகிறார்கள். அவர்களின் உரையாடல்களினூடே அந்த உயிலும் நாவல் முழுவதும் பேசப்படுகிறது.

அரவாணியாக வரும் அஜ்யாபேகம், எவ்வாறு பெண்ணாக உருமாறினாள் என்பதும் தனிக்கதை. அவள், அவனாக இருந்த காலத்தில் பெண்களின் ஆடைகளை அணிந்த காரணத்திற்காக பலதடவை தாயால் தண்டிக்கப்பட்டவள். மன்னரின் பணிப்பெண்ணாகியதும் மன்னரால் எழுதப்படும் உயிலில் அவளது பெயரும் இடம்பெறுகிறது. தன்னை விட அவளிடத்தில் மன்னருக்கிருக்கும் பாசமும் நம்பிக்கையும்தான் இளவரசன் முகம்மது ஆஜம்மிற்கு அவள்மீதான வெறுப்பின் ஊற்றுக்கண்கள். சிறைக்கூடத்திலும் சித்திரவதை செய்யப்பட்டு இறுதியில் தூக்குத்தண்டனையில் மரணிக்கிறாள். நாவலின் 34 ஆம் அங்கம் அவளது இறுதிநாட்களை மிகவும் உருக்கமுடன் சித்திரிக்கிறது.

தனக்குத்தண்டனை தரும் அந்தக்காவலர்களிடம் அவள் பேசும் வார்த்தை: ” நன்றி சகோதரர்களே” அதுவே அவளது வாழ்வின் இறுதிவார்த்தை. காலைப்பொழுது விடியும்போது அவளது உடலை பொட்டலமாகக்கட்டி ஆற்றில் வீசுவதற்கு எடுத்துச்செல்கிறார்கள்

இரண்டு காவலர்கள். ஒரு அதிகாரத்தின் கீழ் இருக்கும் வரையில் அந்த அதிகாரத்தின் பொலிஸாரின் தயவிருக்கும். பாதகமில்லை. ஆனால், அதிகாரம் மாறும்போது அந்தத்தயவு ஆபத்தில் கொண்டுபோய் தள்ளும் என்பது சமகால அரசியல். ஔரங்கசீப்பின் தயவில் வாழ்ந்த அஜ்யா பேகம், அதிகாரம் மாறும்போது ஆபத்தில் சிக்கி சித்திரவதைகளை அனுபவித்து இறுதியில் தூக்குக்கயிற்றை முத்தமிடநேருகிறது.

இடக்கையை கூர்ந்து படிக்கும்போது, சமகால உலக அரசியலும் நினைவுக்கு வந்து செல்வது தவிர்க்கமுடியாதது. சௌகான் என்ற கிராமம் மழையின்றி வரட்சியால் வாடுகிறது. அங்கிருக்கும் ஆட்டு இடையர்களினால் மன்னருக்கு வரிசெலுத்தமுடியவில்லை. வரி வசூலிக்கவரும் பட்வாரி என்பவன் இவ்வாறு சித்திரிக்கப்படுகிறான்: அழுக்குப்படிந்த சட்டை. தலையில் சிறிய துணித்தொப்பி. தோல் செருப்பு. ஏழைப்பராரியாக வரும் அவனும் அந்த ஆட்சியில் ஒரு சுரண்டல் பேர்வழி என்பது சுவாரஸ்யமாக சித்திரிக்கப்படுகிறது.

வரிகட்டாமலிருக்க அந்த விவசாயிகளுக்கும் இடையர்களுக்கும் ஒரு ஆலோசனை சொல்கிறான். அங்கிருக்கும் மோட்டு என்பவனிடத்திலிருக்கும் பால் தரும் பசுவை லஞ்சமாகக்கேட்கிறான். அவர்களிடமிருக்கும் நிலங்களை கோவிலுக்கு எழுதிக்கொடுத்துவிட்டால், மன்னருக்கு வரி கட்டத்தேவையில்லை எனச்சொல்லும் அவன் பேச்சை நம்பி, நிலங்களை கோவிலுக்கு எழுதுகின்றனர். அவனோ தந்திரமாக ஆவணங்களை தன்பெயருக்கு மாற்றிவிடுகின்றான்.

இத்தகைய பல காட்சிகள் சமகால எமது அரசியல் வாழ்வையும் நினைவூட்டுகின்றன. துவாபர யுகத்தில் ஒரு பெண் மண்புழு, தனது கணவனான ஆண்புழு தேரின் சக்கரத்தில் நசிந்து கொல்லப்பட்டதற்கு நீதி கேட்க வானுலகம் சென்ற கதை…. மண்ணாலான லகியா என்ற பெண்ணை மணம்முடித்தவன், போதை தேவைப்பட்டபோதெல்லாம் மனைவியை கண்ணீர் விடச்செய்து அதில் கரையும் அவள் உடலை சுவைத்து போதையேற்றிக்கொள்ளும் கதை…. இவ்வாறு பல்வேறு உபகதைகளுடன் இடக்கை நகருகின்றது.

” எறும்புகள் வெல்லக்கட்டியை இழுத்துக்கொண்டு தனது இருப்பிடத்துக்கு வருவதுபோல் தான் பார்த்த உலகை தனது

இருப்பிடத்திற்கு இழுத்துக்கொண்டு வருவதற்கு மேற்கொண்ட முயற்சியின் விளைவுதான் தனது எழுத்துலகம்” என்று சொல்பவர் எஸ். ராமகிருஷ்ணன்.

அந்த உலகை எங்களுடன் பகிர்ந்துகொள்வதனால் இந்திய வரலாற்றில் ஔரங்கசீப்பின் காலத்தையும் அக்கால மாந்தர்களையும் சமகாலத்துடனும் இக்கால மாந்தர்களுடனும் ஒப்பீடுசெய்துகொள்கின்றோம்.

( அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வாசிப்பு அனுபவப்பகிர்வில் சமர்ப்பிக்கப்பட்ட உரை)

letchumananm@gmail.com

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.