முன்பட்டமும் பின்பட்டமும்!….. நடேசன்.
எனது எழுத்தாள நண்பர் ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார். எழுத்தாளர் ஜெயகாந்தனுக்குத் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதி தொலைபேசியில் ”கலைஞர் பேசுகிறேன்” என்றபோது ஜெயகாந்தன் ”கருணாநிதி பேசுகிறேன்” என்று கூறுங்கள் என்றாராம்.
இப் பட்டங்களின் மேல் உள்ள வெறுப்பை ஜெயகாந்தன் தெரிவித்திருக்கிறார் என நான் நினைத்தேன்.
இந்தியாவில் முக்கியமாகத் தமிழ்நாட்டில் இப்படியான பட்டங்கள் கொடுப்பதையும் வாங்குவதையும் ஒரு கலையாகவே செய்கிறார்கள்.
”கவியரசர்” கண்ணதாசன், அதன்பின் ”கவிசக்கரவர்த்தி” வைரமுத்து இதைவிட ”பெருங்கவிக்கோ” என எல்லாரையும் ராஜாக்களாக்கி இருக்கிறார்கள்.
பாரதியையும் மகாகவி எனக் கூறப்படுகிறது.
ஏன் இந்த விடயத்தில் எம்மைப் பின்பற்றி வில்லியம் சேக்ஸ்பியர்க்கு பிரித்தானியர் பட்டம் கொடுக்கவில்லை?
இந்தியாவுக்கு மட்டும் இந்தப் ”பட்டம் சூடும் கலை” உரிமையாக இருக்கவில்லை.
இலங்கையிலும் ”தந்தை செல்வா”, ”தளபதி அமிர்தலிங்கம”;, ”இரும்புத் தலையோன்” நாகநாதன் என்ற பட்டங்கள் இருந்தது,
ஆபிரகாம் லிங்கனுக்கோ ஏன் சமீபத்திய நெல்சன் மண்டேலாவுக்கு இந்தப் பட்டங்கள் கிடைக்கவில்லை?
ஜோஜ் புஸ்சுக்கு ”ஈராக்கை வென்ற வீரன்” என்றோ, ”சதாமைப் பொடியாக்கிய சூரன்” என்றோ பட்டம் கொடுக்கலாமோ?
சமீபத்தில் ஓர் இணையத்தில் ”அரசவை கவிஞர்” புதுவை இரத்தினதுரை என இருந்தது. இவற்றைவிட சகல தமிழ் ஊடகங்களும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை ”தமிழ் ஈழத் தேசிய தலைவர்” எனக் குறிப்பிடுகிறது. ஏன் தான் CNN , ஜோஜ் புஸ்சை மிஸ்டர் பிரசிடன்ற் என்றோ, BBC மிஸ்டர் ரோனி பிளையர் என்றோ குறிப்பிடுகிறார்கள்?
இந்தப் பட்டம் சூடும் கலை எம்மவர்களிடம் இருந்தால் மட்டும் போதாது. உலகத்தில் மற்றவர்களுக்கும் பரவ வேண்டும். இதைப் புலம்பெயர்ந்த தமிழராகிய நாம் செய்யக்கூடிய நிலையில் இருக்கிறோம். ஓர் இருவர் செய்கிறார்கள். ஆனாலும் மற்றய இனத்தவர்களுக்கு இந்த பட்டம் சூடல் நடக்கவில்லை.
சமீபத்தில் இன்பத் தமிழ் வானொலியினர் யாருக்கோ பட்டம் சூட்டியதாக கேள்விப்பட்டேன். மெல்பேன் மேடைகளில் நடந்ததை பார்த்துள்ளேன். ஆனாலும் இவர்கள் இந்தியாவில் இருந்த வருகை தந்தவர்களுக்குத்தான் பட்டமளிக்கிறார்கள்.
பொன்னாடையொன்றைப் போர்த்துவிட்டு நாங்கள் ஏன் மற்றவர்களுக்கும் இந்தப் பட்டங்களைக் கொடுக்கக் கூடாது? நிலஉடமை சமுதாயத்தின் அடையாளம் என சில அறிவுஜீவிகள் முணுமுணுத்தாலும், முக்கியமாகப் பல்கலைக்கழகங்களில் படிக்காதவர்களுக்கு இந்தப் பட்டங்கள் எவ்வளவு உதவியாக இருக்கும்.
என்னிடம் கேட்டால் இப்பட்டங்களை எமது திருமண விழாக்களுக்கு, அரங்கேற்றங்களுக்கு அழைத்து வரும் அவுஸ்திரேலிய அரசியல்வாதிகளுக்கும் மற்றும் பிரமுகர்களுக்கும் இந்தப் பட்டங்களை அளிக்க வேண்டும்.
கலை இலக்கியம் மற்றும் அரசியல்வாதிகளுக்கு மட்டும்தான் இவை சொந்தமா? வைத்தியர்கள், பொறியியலாளர்கள், கணக்காளர்கள், ஏன் விரிவுரையாளர்களுக்கும் இப்பட்டங்களைக் கொடுத்து வைத்திய திலகம், பொறியியல் மேதை, கணக்கியல் விற்பன்னர், மகாவிரிவுரையாளர் எனக் கூற வேண்டும்.
இப்படிப் பட்டங்களைக் கொடுப்பதில் நல்ல விடயம், பட்டத்தைக் கொடுக்கும் போது, பட்டத்தைப் பெறுபவர் மட்டுமல்ல கொடுப்பவரும் சரித்திரத்தில் இடம்பெறுவார்.
உதாரணமாக எம்ஜிஆருக்கு ரோட்டில் வைத்து K A. கிருஸ்ணசாமி என்பவர் புரட்சி தலைவர் என பட்டம் சூட்டினார் என ஒரு பத்திரிகையில் படித்தேன். எம். ஜி. ஆர் பெயர் உள்ளவரை K A. கிருஷ்ணசாமியின் பெயரும் விளங்கும். பெருங்கவிக்கோவை, நான் செவ்விகாணும் போது, அவருக்கு இந்தப் பட்டத்தைக் கொடுத்தவர்களையும் கேட்டு வைத்தேன்.
இன்னும் ஒரு முக்கியமான விடயம் சிறந்த கவிஞனுக்குப் பட்டம் கொடுக்கும் போது பட்டம் சூட்டியவர்களுக்கு கவிதை பற்றிய அறிவு இருக்க வேண்டும் என்ற தேவையில்லை. இந்த நடைமுறையைப் பின்பற்றி, வைத்தியர் ஒருவருக்கு நோயாளிகள் கூடப் பட்டம் அளிக்கலாம். அவரும் காசு செலவழித்து மேல்படிப்பு படிக்கத் தேவையில்லை.
எமது நாட்டுப் பழக்கம், கலாசார விழுமியங்கள் எம்மோடு மட்டும் நின்றுவிடாது, மற்றய இனத்தவர்களிடமும் பரவுவதற்கு நாங்கள் முயற்சிக்க வேண்டும். இது புலம்பெயர்ந்த தமிழர்களின் கடமைப்பாடாகக் கருதவேண்டும்.
பின்பட்டம்
பின்பட்டம் என நான் குறிப்பிடுவது பல்கலைக்கழகங்களில் படித்தோ அல்லது ஆராய்ச்சிகள் செய்து பெயரின் பின்னால் போடுவதாகும். இலங்கை தமிழராகிய எமக்கு இது முக்கியமானது ஏனென்றால், சிங்கள அரசாங்கங்கள் பல்கலைக்கழகங்களில் அனுமதி தரவில்லை என்பதாலே ஆயுதப் போராட்டம் கருக்கொண்டது. புலம்பெயர்ந்த தமிழர்களின் பிள்ளைகள் அவுஸ்திரேலியா கனடா போன்ற நாடுகளில் பல்கலைக்கழகங்களில் பெருமளவு படிப்பது மனதுக்குச் சந்தோசமான விடயமாகும்.
சமீபத்தில் கனடா சென்றபோது அங்குள்ள பத்திரிகை ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. பத்திரிகை விளம்பர கற்றலாக்கை (Advertising Catalogue) ஆகத் தெரிந்தாலும், மொட்டைத் தலையில் ஓர் இரு முடி தெரிவது போல் இலங்கை அரசியலைப் பற்றிய கட்டுரை தெரிந்தது, அரசியல் கட்டுரையை எழுதியவர் தனது பெயரின் பின்பகுதியில் கணக்காளர் பட்டத்தைப் போட்டிருந்தார். கணக்காளர் அரசியல் கட்டுரை எழுதக் கூடாது என்பதில்லை. அவரது பட்டய கணக்காளர் என்ற அந்தப் பட்டம் அங்கு பொருத்தமாகவில்லை.
சட்டம் பற்றிய கட்டுரையை எழுதிவிட்டு டாக்டர் பொன்மணி (MBBS & FRCOG ) பெண்நல மருத்துவம் எனப் போடுவதில் பொருத்தமிருக்கிறதாக எனக்குத் தெரியவில்லை.
கனடாவில் உள்ளவரை மட்டும் குறித்து நான் எழுதவில்லை. புலம்பெயர்ந்த தமிழர் பலருக்கு இந்தச் சிறு குறைபாடு இருக்கிறது.
விளம்பரம் செய்யும் போது தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதும் விளம்பரத்தை Misleading Advertisement எனக் கூறி நுகர்வோர் சட்டத்தில் தண்டிக்கப்படும். அதேபோல், இதுவும் ஒரு தவறான அபிப்பிராயத்தை வாசிப்பவர் மத்தியில் உருவாக்கும்.
ஆனால் இதுக்குத் தண்டிக்கவா முடியும்? விட்டுத் தள்ள வேண்டியதுதான்.!!!