பூதமும் வந்து பொசுக்கிடுமோ!… ( கவிதை ) …. சங்கர சுப்பிரமணியன்.
உரமிட்டு நீர்பாய்ச்சி ஓடோடி உழைத்திடவே
கரம்தொட்டு நான்மகிழ நெல்லும் களமதிலே
வரமெனக் கிடக்கிறதே மணிகள் குவியலாக
சிரம்தாழ்த்தி வணங்கினேன் நான்ஆதவனை
நீரும்பாய்ச்சாது நிலமருகிலேயும் செல்லாது
ஊரும் கதிரறுத்தால் நானங்கே ஏதறுப்பேன்
பாரும் பகருமே பாடுபட பலன் உண்டென்று
யாரும் அறியும் இவ்வுண்மை தெரியலையொ
கடந்த ஆண்டு நற்பயிர் நான் செய்தேனென
கிடந்தால் எனக்கும் நற்பயிர் கிடைத்திடுமா
மடமையாய் இருந்து நான் ஒன்றும் செய்யாது
கடந்தொன்று வந்து காக்குமென்றால் நலமா
பயிரேதும் செய்யாது பாழ்பட்டு நின்றிருந்து
உயிராய் நானின்று செய்தாலது உருப்படா
கயிறு திரித்தங்கு கதைசொல்வார் கேளாதே
எயிறு நாபடவே இயம்புவதெலாம் ஏற்பாயோ
தீதொன்றும் யாருக்கும் சிறிதளவும் செய்யாது
மாதர்தமை வயமாக்கி வஞ்சனையும் புரியாது
பாதகம் செய்வார்பக்கம் நில்லாது இருந்தால்
பூதமென எதுவந்து பொசுக்கிடும் பூவுலகில்!
-சங்கர சுப்பிரமணியன்