கவிதைகள்
என்னொடு வருமே!…. ( கவிதை ) ….. சங்கர சுப்பிரமணியன்.
ஏன் எனக்கு எல்லாமே வசந்தமாகிறது
ஊன் உடலின் உருவம் மாறிவிட்டாலும்
தான்வந்து சேர்ந்த தளர்வுறும் முதுமை
கூன்வந்நு நெருங்கிடாது தடுப்பதேன்
புருவத்தின் மேல் கைவைத்து புதிராக
அருகிலிருப்பாரை அதிசயமாய் நோக்க
நெருங்கி இருப்பார் சொல் கேளாதுமே
வருந்திடும் நாள் வந்ததில்லை என்பேன்
பல்வலியென்று படுத்தறியா நானின்றும்
சொல்லில் குறைவந்து குளறவுமில்லை
நல்லதை மட்டுமே நான் நினைத்து வாழ
எல்லையற்ற என் இயற்கை இருக்குதே
செல்வம் கொழித்திடும் செரிவுறு வாழ்வும்
அல்லல் படுத்தி அழிவுறு நிலை தாராதோ
மனை பல குவித்து மகிழ்ந்திடும் மாந்தர்
வினையது நன்று விளங்கிடவது வீடுபேறு
மண்ணில் விழுந்துடல் மக்கிய போதிலும்
விண்ணில் ஓரிடம் எனக்கில்லை எனினும்
எண்ணிடலங்கா இலக்கிய நிறைவொடு
தண்டமிழினிமை என்னொடு துணைவருமே!
-சங்கர சுப்பிரமணியன்.