ஓய்வுக்கால ஓடம்!…. ( கவிதை ) ….. கல்லோடைக்கரன்.
ஓய்வுக் காலம் வாழும் வாழ்க்கை
ஓடம் போலது ஓடும்
காய்தல் உவத்தல் கடினம் மறைந்து
காலம் மெதுவாய்க் கழியும்
தேய்தல் கொண்ட கருவி போலும்
தேகம் களைப்பால் தேயும்
மாய்தல் வரும்நாள் மனத்தி லெண்ணி
மருண்டு மனமும் மாயும் !
சுவைத்து ருசித்த சுவையா முணவில்
சேர்த்த விருப்பும் போகும்
குவித்து வைத்த கலவிக் களிப்பும்
குறைந்து மறைந்து மாளும்
தவித்துத் தேடிச் சுகித்த சுகமும்
திகட்டித் தீர்ந்து சாயும்
அவித்து உயிர்ப்பை இழந்த விதைபோல்
அனைத்து உயிர்ப்பும் வேகும் !
பார்த்துக் களித்த பாவை வண்ணம்
பார்வை நீங்கி மங்கும்
சேர்த்துத் துளிர்த்த சிந்தை பலவும்
சிதைந்து சீர்மை சிதறும்
ஆர்த்து எழுந்த ஆசை பெரிதும்
ஆடி அசைந்து அகலும்
வேர்த்துச் செய்யும் வேலை இன்றி
வெட்கம் வந்து கவியும் !
படைத்த இறைவன் பெருமை மீதே
பற்று வந்து கூடும்
உடைத்த மடையின் ஊற்றுப் போலே
உயர்ந்த பக்தி பாயும்
கிடைத்த யாவும் போதும் என்றே
கருத்தும் வெறுமை ஆகும்
துடைத்த தகளிக் காட்சி போலத்
திரண்ட பழமை தோன்றும் !
நினைத்து நினைத்துப் பார்ப் பதுவே
நாளும் தொழிலென் றாகும்
மனத்தில் நிலைத்த ஏக்கம் எல்லாம்
மறைந்து மாயம் ஆகும்
வனத்தில் விட்ட வாழ்க்கை போல
வரண்டு திசைகள் மாறும்
அனைத்து உணர்வும் அடங்கி நெஞ்சம்
அமைதிக் கீதம் பாடும் !
ஓடி யோடிக் காலம் ஓய
ஓய்வும் ஓய்ந்து போகும்
தேடித் தேடிச் சேர்த்த தேட்டம்
தேய்ந்தும் மகிழ்வே தேறும்
ஆடி யாடிக் களித்த காலம்
வந்து வந்து போகும்
பாடிப் பாடிப் பரவ சத்தால்
பரமன் பாதம் நாடும் !
இழுத்த மூச்சும் ஓர்நாள் ஓய்ந்து
இரண்டு கண்ணும் மூடும்
பழுத்த ஓலை வீழும் வகைக்குப்
பார உடலும் வீழும்
கொழுத்த நரியும் காட்டில் நின்று
களிப்பி லாட்டம் போடும்
புழுத்த உடலைப் புழுக்க ளுண்ணப்
பேரும் மறைந்து போகும் !