கவிதைகள்
நா(ர)தர் முடி மேலிருக்கும்!…. ( கவிதை ) ….. சங்கர சுப்பிரமணியன்.
படிப்பது ஒன்றென்றால்
இடிப்பது அதையே என்பதைப்போல்
தமிழில் படித்துவிட்டு
தமிழையே தாழ்த்திடுவார்
பாரதியை படித்திருப்பார்
பாரதிபோல் நடக்கமாட்டார்
செந்தமிழ் நாடெனும் போதினிலே
நொந்திடுவார் மனதினிலே
கங்கை நதிப்புறத்து கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்
என்பதெலாம் வெறும் ஏட்டிலென்பார்
இன்றதற்கு பொருள் வேறென்பார்
அவலை நினைத்துக் கொண்டு
உரலை இடிப்பார்
அவல் வரவில்லையென்றால்
அவர் தவிலாகும் தம் நிலை உணர்வார்
உண்ட வீட்டிற்கும் ஒதுங்கும் இடத்துக்கும்
எவர் ஒருவர் பங்கம் நினைக்கின்றாரோ
அவர் நன்றி என்பது சிறிதும் அறியாரென
நானிலத்தே நின்று நன்றாய் ஆடு பாம்பே!
-சங்கர சுப்பிரமணியன்.