உணவிட்ட கையா? உடனே அதை ஒடி!… ( கவிதை ) …. சங்கர சுப்பிரமணியன்.
பெற்ற தாயை அம்மா என்றழைத்தால்
தாயென சொல்லச்சொல்லும் ஒருவர்
அப்பாவை தந்தையென்று அழைக்க
தமிழை இங்கு சொல்லித்தர ஒருவர்
தமிழில் தினசரிக்குப் பெயரும் வைப்பர்
அதில் தமிழில் செய்திகளும் அச்சடிப்பர்
தமிழரிடமே விற்று பணமும் சேர்ப்பார்
தமிழரின் பணம் இனிப்பு தமிழ் கசப்பா
தொற்றால் மடிகின்றனரே என்ற கவலை
தடுப்பூசி பற்றாக்குறை என்றும் கவலை
எப்போது நாடு நலம்பெறும் எனக்கவலை
சிலருக்கோ தமிழ்நாடு என்றாலே கவலை
அன்னமும் ஆடையும் இங்கே என்றும்
ஆசையும் பாசமும் அங்கே என்றுமிங்கே
பழமொழி ஒன்றை சொல்வர் பைந்தமிழில்
பண்புடையார் அதைச் செய்ய மாட்டார்
நன்றி மறப்பது நன்றன்று என்றும் அறிவார்
சொன்னது தமிழ் இறைவனார் என்பதாலே
நாம் ஏன் அதன்படி நடக்க வேண்டுமென்று
தமிழ் வாழ்க என்றால் எரிச்சல் அடைவார்
வந்தாரை வாழவைக்கின்ற தமிழ்நாடே
உன்னை வைத்தே வளர்ந்து வாழ்கின்றார்
அன்னமிட்ட கையென்று சிறிதும் பாராமல்
உணவிட்ட கையை ஒடிப்பார் கலங்காதே!
-சங்கர சுப்பிரமணியன்.