இளமையும் செய்வீர் இலக்கியத்தே!…. ( கவிதை ) …… சங்கர சுப்பிரமணியன்.
இளமையும் முதுமையும்
இயற்கை தரும் மாற்றமன்றோ
எண்ணங்கள் யாவையும்
எக்காலத்தும் இளமையன்றோ
விதை முளைத்து செடியாவதும்
செடிவளர்ந்து மரமாவதும்
மரம்வளர்ந்து காய் கனி தருவதும்
பட்டுப்போய் வீழ்வதும் பாரினிலுண்டு
காய்த்து கனிதரும் நாளிலும்
கடைசியாய் அதுசாயும் நாள்வரை
ஈன்ற கனிகள் எத்தனை இருப்பினும்
அத்தனை கனியிலும் சுவை ஒன்றே
எத்தனை கிண்ணத்தில் இட்டாலும்
மது அத்தனையும் சுவை ஒன்றேதான்
மூத்த வயதினில் படைத்தாலும்
மொத்த இலக்கியமும் மூப்படைந்திடுமா
எண்ணிரண்டு பதினாறு வயது
அவள் கண்ணிரண்டும் பாடுதம்மா
காதல் கொண்ட மனதென்றதும்
கண்ணதாசன் பதினாறு வயதிலல்ல
கடல் புறா தந்த சாண்டில்யனும்
கன்னியரை தூரிகையால் எழுதி
இளமை கொலுவிருக்கும்- இனிமை சுவையிருக்கும் என்றதும் இளமையிலா
முதுமை சொல்லி முடங்க வேண்டாம்
எண்ணத்துக்கும் எழுத்துக்கு மூப்பேது
இங்கு இலக்கியங்கள் மூப்படைவதில்லை
பங்கமிலை இளமை செய்க இலக்கியத்தே!
-சங்கர சுப்பிரமணியன்.