கவிதைகள்
சிலநொடி மட்டும் அலை!… ( கவிதை ) … சங்கர சுப்பிரமணியன்.
என் அரும்பிய மீசையை வளைக்கரம் தடவ
விரும்பியவள் விழிகளில் என்னுரு தெரிய
நிரம்பிய மனமதில் நிரந்தரமாய் நிலைக்க
வரம்பு மீறாமல் இன்னொரு கரம் தடுத்திட
கடற்கரை மணலில் கரைதொடு அலைகள்
விடமனமின்றி மீண்டுமங்கு வருதல்போல்
தொட என்னைத் தூண்டி இணைந்தாலும்
மடமையால் மறுத்ததை மனமே நீ அறிந்திடு
தொட்டு அணைத்து இணைந்திட முயன்றும்
எட்டா கனியென கடந்திட்ட அலைகளாய்
மட்டுப் படுத்த முடியா என்கரங்களை இவள்
தட்டி விட்டாலும் அதில் உண்மையுமிலை
அருகில் சென்றால் சுடும் நெருப்பாகிறாள்
மருவுதல் தவிர்த்தால் கண்ணால் சுடுகிறாள்
பருவம்வந்த நாள்முதல் பழகி மகிழ்ந்தவள்
முருகென திரண்டு முழுதாய் இனிக்கிறாள்
கடலலையை கரை அனுமதிப்பதுபோலவே
இடமளித்து இவளும் என்னை இழுக்கிறாள்
சில நொடி மட்டும் அலை கரை நனைத்திட
பலநொடி தந்தாள் இதழ்கள் நனைத்திட!
-சங்கர சுப்பிரமணியன்.