உடைநனைய உடல்பிரிந்தார்!… ( கவிதை ) …… சங்கர சுப்பிரமணியன்.
மயங்குகிறது மாலை
மறுபடியும் வந்து வந்து மோதுகிறது
கடலின் அலைகள்
நீங்க மனமின்றி தனது
காதலனான கடற்கரையை
முத்தமிட்டு முத்தமிட்டு மகிழ்கிறது
முத்தமிடும் மகிழ்ச்சியும்
கொஞ்சநேரம் மட்டுமே
காதலைனுடன் நிலைக்கிறது
வெட்கம் வந்து தடுத்திடவே
விலகி உடனே செல்கிறது
பூ விட்டு பூ மாறி
தேனுண்னும் வண்டுபோல
மாறி மாறி வரும் அலைகள்
வந்து வந்து முத்தமிட கடற்கரையோ
அசையாமல் அங்கிருந்தே
முத்தங்களைப் பெறுகிறது
கடற்கரைக்கும் வண்டுக்கும்
பேதமென்ன என்றான்
மடிமீது படுத்திருந்த மங்கையின்
இதழில் முத்தமிட்டு
பெண்கள் நோக்கி செல்லும்
ஆண்கள் வண்டென்றால்
ஆண்கள் நோக்கி செல்லும்
அலைகள் பெண் என்றாள்
சரியாகச் சொன்னாய் என்றான்
நாம் அவைபோல் அல்ல என்று சொல்ல
பின் நாம் எதைப்போல என்று கேட்க
செம்புலப் பெயல் நீரென்றான்
சேர்த்தணைத்தான் அவளை
அவளோ கண்மூடி உலகை மறந்தாள்
பேரிரைச்சலுடன் வந்த அலையோ
காதலனை முத்தமிட தடையாயிருந்த
தன்னிலை மறந்திருந்த காதலரை
தண்டிக்க எண்ணியதோ
அவ்விருவர் உடை நனைய
உடல் பிரிந்தார்! தம் நிலை உணர்ந்தார்!!
-சங்கர சுப்பிரமணியன்.