உழைப்பை மதித்திடுவோம் ஓரணியாய் வாருங்கள்!… கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.
ஊசிமுதல் உணவுவரை
உழைப்பாலே வருகிறது
உழைக்கின்றார் வாழ்வெல்லாம்
உயர்வுபெற மறுக்கிறது
காசுள்ளார் கைகளிலே
உழைப்பெல்லாம் போகிறது
கவலையுறும் உழைப்பாளி
கண்ணீரில் மிதக்கின்றான் !
சமத்துவங்கள் பேசுகிறார்
சங்கங்கள் அமைக்கின்றார்
நினைத்தவுடன் மாநாடு
நிறையவே வைக்கின்றார்
அனைத்துமே உழைக்கின்றார்
அனுசரணை என்கின்றார்
ஆனாலும் உழைக்கின்றார்
அல்லலிலே இருக்கின்றார் !
வியர்வையிலே தொழிலாளி
வேதனையில் தொழிலாளி
நலமிழந்து கிடக்கின்றான்
நயமெதுவும் காணவில்லை
முதலீட்டும் முதலாளி
தலைநிமிர்ந்து நிற்கின்றான்
முழுதுழைக்கும் தொழிலாளி
நிலையிழந்து தவிக்கின்றான் !
மனமெண்ணும் நிலைவேண்டும்
உழைப்பதனை உயர்வென்று
உணர்த்தியே விடவேண்டும்
உழைத்திடுவார் இருப்பிடங்கள்
உயரவெண்ணும் உளம்வேண்டும்
உழைப்பாளி முதலாளி
ஓரணியாய் வரவேண்டும் !
வளமாக வாழ்வதற்கு
வழிசமைக்கும் தொழிலாளி
நிலமீது நிம்மதியாய்
தலைநிமிர வழிவேண்டும்
வளமீட்டும் முதலாளி
மனமகிழ வைத்துவிடும்
வாழ்வளிக்கும் தொழிலாளி
வாழும்நாள் வரவேண்டும் !
உழைக்கும் கைகளென்றும்
உயர்வினைப் பெறவேண்டும்
உழைப்பினை மதித்திடும்
உளமது எழவேண்டும்
உழைப்பினால் உலகமே
உயர்ந்திடும் தன்மையால்
உழைப்பவர் நலத்தினை
உயர்த்தியே போற்றுவோம் !
உழைப்பை மதிக்கும்நாள்
உன்னதமே உலகினுக்கு
உழைப்பை மதிக்கும்நாள்
உயர்வினையே உணர்த்திவிடும்
உழைப்பை மதிக்கும்நாள்
உழைப்பாளர் மகிழ்ந்திடுவார்
உழைப்பை மதித்திடுவோம்
ஓரணியாய் வாருங்கள் !…