கவிதைகள்
மொத்தமாய் எரிக்கையிலே எங்கே!,,, ( கவிதை ) … சங்கர சுப்பிரமணியன்.
கைதட்டினால் ஓடிப் போய்விடுமென்றார்
மெய்யாகவா என ஆச்சர்யம் அடைந்தோம்
விளக்கேற்றினால் வெருண்டோடுமென்றார்
பழக்கமாகி நம்மோடு பற்றிக் கொண்டதே
நம்மை பார்த்து உலகு வியக்குமென்றார்
நாம் முதலாய் நிற்க உலகு சிரிக்கிறதே
இன்னும் ஏனிந்த உண்மைக்கு மாறோ
தன்னால்தான் எல்லாமென்ற நினைப்போ
நாய்களின் வகைகளை படித்த ஒரு மனிதர்
திருக்குறளை நன்றாகப் படிக்கவில்லை
கணியன் பூங்குன்றனையும் அறியவில்லல
சாதி சொல்ல அவர்க்கு தமிழே உதவியது
நாய்கள் அறிந்திடுமா தமக்குள் வகையை
நாய்க்கும் சாதி சொல்லும் நல்லறிவாளரே
இந்த தொற்றில் இப்ப பல வகையிருக்கே
அவையும் சாதிபார்த்து வருமா பண்டிதரே
இத்தகைய மனிதர் இங்கு மலிந்திருக்க
மெத்தனமாய் தொற்று மேவி வலம் வருதே
சாதி பார்க்காமலது மனிதரை சாய்க்கிறதே
மொத்தமா எரிக்கையில் எங்கே உம்சாதி!
-சங்கர சுப்பிரமணியன்.