என் செய்வேன் என்னினமே!…. ( கவிதை ) …. சங்கர சுப்பிரமணியன்.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வென்பார்
ஒன்றுபட ஒருநாளும் விடவேமாட்டார்
கூடிவாழ்ந்தால் கோடி நன்மை என்பார்
கூடாதிருக்க கோடி வழி கண்டறிவார்
எருதுகளும் சிங்கமும் கதை படித்தவராம்
இறுதி வந்தாலும் இணையமட்டும் விடார்
குருதி கொப்பளிக்க குற்றுயிராயானாலும்
மறதியாயும் தன்னினம் நாட விடமாட்டார்
யாதும் ஊரே யாவரும் கேளிரென்பார்
தீதாகும் தம்மினத்துக்கு அதுவென்பார்
பாதகமாய் நாமிருக்க வேண்டாமெனில்
போதும் உம் புத்திமதி எமக்கு என்பார்
கோழி மிதித்து குஞ்சுகள் மாண்டிடுமோ
ஊழியே வந்தாலும் இன உணர்வழியுமோ
தாழியில் வைத்த எச்சம் தனித்தறிந்திடுமா
மூழியின்றி கரைசேர முயன்றால் நன்றாமா
குமரிக்கண்டத்தில் கோலோச்ச்சியது யார்
சிந்துவெளியில் சிறந்திருந்தவன்தான் யார்
சுமேரியா தொட்டு தடம் பதித்தவனும் யார்
மாயன் என்று மாயமாய்த் தெரிபவனும் யார்
உலகெலாம் பரந்து ஓங்கு புகழ்கண்ட குடி
தலையாய் நின்று தடம்பதித்த வாழ்ந்த குடி
நிலைதடுமாறி நின்றிப்போ தமைமறந்தே
குலைநடுங்க வைக்கிறதே என்செய்வேன்!
-சங்கர சுப்பிரமணியன்.