கவிதைகள்
மருத்துவம் என்பது வரமாகும்!… கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.
மருத்துவம் என்பது வரமாகும்
மக்களைக் காத்திடும் துணையாகும்
நலமுடன் நாளுமே வாழ்வதற்கு
நன்மையை நல்கிடும் வழியாகும்
பலவித வைத்தியம் பாரிலுண்டு
பாட்டிகள் வைத்தியம் அதிலொன்று
பரம்பரை வைத்தியம் விரும்பிடுவார்
பாரிலே பலபேர் இருக்கின்றார்
பத்தியம் காத்திடும் மருத்துவமும்
பத்தியம் பேணா மருத்துவமும்
எத்தனை யெத்தனை நோய்களையும்
எதிர்த்துமே நிற்குது பாரினிலே
வாழும் முறையில் மாற்றமெலாம்
நாளும் பெருகி வருவதனால்
நோயின் வகையும் பெருகிறது
நுண்மையாய் மருத்துவம் நோக்கிறது
நலத்துக்கு ஒவ்வா உணவுகளை
நிலத்தினில் மக்கள் உண்ணுகிறார்
நலத்தைக் காத்திட மருத்துவமும்
நாளும் பொழுதும் முயல்கிறது
ஆனந்தம் என்று மனமெண்ணி
அனைத்தையும் மக்கள் உணவாக்கி
அசுத்தம் தன்னை அகமெண்ணா
அழிக்கிறார் வாழ்வினைப் பாரினிலே
கருவிலே நோய்கள் வருகிறது
தெரிவிலே நோய்கள் திரிகிறது
உருத்தெரியாத நோய்க ளெல்லாம்
உலகினை ஆட்டி வதைக்கிறது
வர்த்தகம் உலகை ஆள்கிறது
மருத்துவம் அதற்குள் மாழ்கிறது
பணத்தினை முன்னே வைப்பதனால்
பக்குவ மருத்துவம் சுழல்கிறது
விழிப்புணர் வெழுந்து வரவேண்டும்
வெற்றியாய் மருத்துவம் எழவேண்டும்
பணமுடை நிறுவனம் மருத்துவத்தை
பார்த்திடும் நிலைமை அறவேண்டும்