கவிதைகள்
என்றுமே அவர்நினைப்பாய் இருந்திடுவோம் வாரீர்!… ( கவிதை ) … கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
சித்தராய் வந்த சிறந்த குருநாதர்
சிவாய நமசெப்பும் சிறந்த குருநாதர்
பித்தரைப் போல் திரியும் பெருங்குரவரானார்
நித்தமுமே அவரை நினைந்தபடி இருப்போம் !
நல்லூரான் அருளால் நம்குரவர் வந்தார்
தொல்வினையைப் போக்க நல்லுரைகள் தந்தார்
எல்லையிலா இறைவன் திருவடியைக் காட்டும்
நல்வழியில் செல்ல நமக்குத் துணையானார் !
நோய்நொடியில் நிற்பார் ஓடியங்கு சென்றால்
வேதனையைத் தீர்க்கும் வெளிச்சமென நின்றார்
சாதனை நீசெய்வாய் என்றவரின் வாயால்
ஓர்வார்த்தை உரைக்க காத்திருந்தார் பலரும் !
அவர் தொண்டராக அன்னியரும் வந்தார்
அமெரிக்கர் அவரின் பெருமையினை அறிந்தார்
ஆன்மீகம் என்னும் பேரொளியைக் கண்டு
அவர்வழியை இப்போ அகம் இருத்துகின்றார் !
விசரென்று பழித்தவந்த செல்லப்பர் தன்னை
நல்லூரான் கருணையினால் தேரடியில் கண்டார
கண்டதுமே காந்தமென ஒட்டியவர் நின்றார்
செல்லப்பா அருள்கிடைக்க தினமுமே அலைந்தார் !
பசித்திருந்த யோகரது பரிதாபம் கண்டார்
பரிசோதனைக் காலம் முடிவதையும் பார்த்தார்
உள்ளிருந்த பேரொளியை உவப்புடனே காட்டி
அள்ளவள்ள குறையா ஆனந்தங் கொடுத்தார் !
அன்றலர்ந்த தாமரையாய் ஆகினார் யோகர்
ஆன்மீகம் அவரிடத்து அமர்ந்து கொண்டதங்கே
எங்களுக்கு வாய்க்கும்படி நல்ல குருவானார்
என்றுமே அவர்நினைப்பாய் இருந்திடுவோம் வாரீர் !