முகிழ்த்தது முத்து

கணங்கள்!…. ( சிறுகதை )…. முருகபூபதி.

அண்ணாவின் ஆதரவு இல்லாமல் நானோ மகனோ அவுஸ்திரேலியாவுக்கு வந்திருக்கமாட்டோம். நானும் மகனும் இங்குவருவது முதலில் மச்சாளுக்கு விருப்பமில்லை என்பதை அண்ணாதான் ஒருநாள், மகனை அந்தப்பாடசாலையில் சேர்க்க அழைத்துப்போனபோது சொன்னார்.

“ அவள் புருஷனைப்பறிகொடுத்திட்டு பிள்ளையோட தனிச்சுப்போனாள். 215 என்று ஒரு விஸா திட்டம் இருக்கு. அதன்மூலம் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட இரத்த உறவினரை இங்கே அழைக்கலாம். அதுதான் பத்மாவையும் மகன் நிர்மலனையும் அழைக்கப்போறன்.” என்று அவவுக்குச்சொன்னன்

மகனை பாடசாலையில் சேர்ப்பதற்குச்சென்றபோது மச்சாள் வேலைக்குப்போயிருந்தா. அதனால் அண்ணாவால் சற்று சுதந்திரமாக அன்று பேசமுடிந்தது.

“ ஏன்… அண்ணா… நாங்க வாரது மச்சாளுக்கு விருப்பமில்லையா?”

“ அவவுக்கு தன்ர தம்பியை இந்த 215 விஸாவில் இங்கே அழைக்க விருப்பம் இருந்தது. ஆனால் அவன்ரபோக்கு எனக்குப்பிடிக்கயில்லை. உனக்குத்தெரியும்தானே…? ஊர்மேயும் கழுதை. ஒழுங்காக படிக்கவும் இல்லை. இயக்கத்துக்குப்போய் பிழைசெய்து பங்கருக்குள்ள போட்டான்கள். பிறகு எப்படியோ வெளிய வந்திட்டான்.”

அண்ணாவுக்கு அவன் இயக்கத்துக்குப்போனதும் வெளியே வந்ததும் மாத்திரம்தான் தெரியும். ஆனால் என்ரை அவரை ஆமிக்காரங்கள் இழுத்துக்கொண்டுபோனதும் அவனாலதான் என்பது அண்ணாவுக்குத்தெரியாது. அந்தக்கதையளை நான் அண்ணாவுக்கோ மச்சாளுக்கோ சொல்லவும் இல்லை. தன்னாலதான் அவரை ஆமி பிடிச்சுக்கொண்டு போனவங்கள் என்ற குற்ற உணர்வு மச்சாளின்ர தம்பிக்கு இருந்தது. அவர் காணாமல் போனபிறகு அவன்தான் உதவியாக இருந்தான். கொழும்புக்கு அவுஸ்திரேலியா எம்பஸிக்கெல்லாம் அவன்தான் என்னையும் மகனையும் கூட்டிக்கொண்டுபோனான்.

“ அண்ணா நீங்கள் அவனையும் இங்கே அழைக்க ஸ்பொன்சர் செய்திருக்கலாம்” என்று மாத்திரம் சொன்னேன்.

மச்சாளும் அண்ணாவும் அவர்களின் பிள்ளைகளும் வேலைக்கும் ஸ்கூலுக்கும் சென்றதும் அந்த வீட்டில் எனக்குத்தான் வேலை அதிகம். ஆரம்பத்தில் நானும் மகனும் வந்த புதிதில் முகத்தை இரண்டு முழத்துக்கு நீட்டிக்கொண்டிருந்த மச்சாள், பிறகு படிப்படியாக மாறிவிட்டா. நான் வந்தது அவவுக்கு பெரிய உதவி எண்டு வீட்டுக்கு வருபவர்களிடமெல்லாம் சொல்லிப்பூரிப்பா.

அவவுக்கு ஒரு சம்பளமில்லாத வேலைக்காரி கிடைத்திருப்பதனால் வந்த பூரிப்பு.

ஆறுமாதங்கள் அண்ணாவின் வீட்டிலிருந்தோம். கிட்டச்சொந்தம் முட்டப்பகை என்பார்களே. அதனால் அண்ணாவே மகனுடைய பாடசாலைக்குச்மீபமாக இரண்டறைகள் கொண்ட ஒரு வீட்டை வாடகைக்கு ஒழுங்குசெய்துகொடுத்தார். நான் சொல்லப்போகும் கதைக்கு இனி அண்ணா மச்சாள் குடும்பம் அவசியமில்லை என்பதனால் இத்துடன் நிறுத்திக்கொள்கின்றேன்.

—- —– —– —– —–

மகன் செல்லும் பாடசாலையில் பல இனத்துப்பிள்ளைகளும் படிக்கிறார்கள். எங்கட நாட்டிலதான் தமிழ்ப்பாடசாலை, சிங்களப்பாடசாலை, முஸ்லிம் பாடசாலை என்ற வேறுபாடுகள். ஆனால், இங்கே.. பலநாடுகளிலிருந்தும் வந்துகுடியேறிய பல இனத்துப்பிள்ளைகளும் ஒரே பாடசாலையில் படிக்க முடிகிறது. இரண்டாவது பாடமாக ஏதாவது ஒரு மொழியை பிள்ளைகள் படிக்கக்கூடியதாக இருக்கிறது.

மகன் ஒருநாள் “அம்மா ஒருநாளைக்கு தோசை சுட்டுத்தாங்கம்மா” எனக்கேட்டான். அண்ணாவீட்டில் எப்படியும் வாரத்தில் இரண்டுதடவையாவது தோசைக்காக உளுந்தும் அரிசியும் ஊறப்போட்டு மிக்ஸியில் அறைத்து ஓரு தேக்கரண்டி ஈஸ்ட்டும் போட்டு பிசைந்து புளிக்கவைத்து அண்ணா குடும்பத்துக்கும் மகனுக்கும் தோசையும் சட்னியும் சாம்பாரும் செய்துகொடுத்துவிடுவேன். ஆனால், இந்த வீட்டுக்கு வந்த பிறகு ஒரு மிக்ஸி எனக்கும் மகனுக்காகவும் வாங்குவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

அடுத்தவாரம்…. அடுத்தவாரம் என்று நாட்களை கடத்திவிட்டேன்.

ஒருநாள், “ஏனடா திடீரென தோசை கேட்கிறாய்?” எனக்கேட்டேன்.

“பாணும் இடியப்பமும் புட்டும் நூடில்ஸ_ம் சாப்பிட்டு சாப்பிட்டு அழுத்துப்போச்சம்மா. என்னோட படிக்கிற நிமாலைப்பற்றி உங்களுக்கு சொல்லியிருக்கிறன்தானே. அவனுக்கு தோசை சாப்பிட விருப்பம் அம்மா” என்றான்.

நான் சற்று யோசித்தேன். நிமால் சிங்களப்பெயராக இருக்கிறதே.

“ என்ன… உன்ர ஸ்கூல்ல சிங்களப்பெடியலும் படிக்கிறாங்களா?”

“ ஓம் அம்மா. நிமால், என்ர நல்ல ஃபிரண்ட். ஒரே கிளாஸ்தான். நல்லா பெட்பண்ணுவான். அவனுக்கும் என்னைப்போல கிரிக்கட்லதான் விருப்பம்.”

சென்றலிங் அடுத்தவாரம் காசு தந்தபோது ஒரு மிக்ஸியை வாங்கி விட்டேன். பாடசாலையால் வீடு திரும்பிய மகனுக்கு அதனைக்காட்டியபோது துள்ளிக்குதித்தான்.

என்னை கட்டி அணைத்து கன்னத்தில் முத்தம்கொடுத்தான்.

அவனுக்குத்தெரியாமல் கண்களை துடைத்துக்கொண்டேன். இந்தக்காட்சிகளைப்பார்க்க அவருக்குத்தான் பலன் இல்லாமல்போய்விட்டது. பாவிகள் எங்கே கொண்டுபோய்…..?

காணாமல்போனவர்களின் பட்டியலில் அவரும் சேர்ந்து பல ஆண்டுகளாகிவிட்டன. இருக்கிறாரா இல்லையா என்பதும் தெரியாமல் வாழ்வது எவ்வளவு பெரிய கொடுமை. அவர் காணாமல் போன தினம்தான் எனக்கு அவருக்கான திவசநாள்.

அவரை விசாரிப்பதற்காக கூட்டிச்செல்லும்போது மகனுக்கு ஐந்துவயதிருக்கும் பலநாட்கள் பலமாதங்கள் வருடங்கள் கேட்டுக்கொண்டிருந்த மகன், நான் அழுது கண்ணீர் வடிப்பேன் என்பதனால் கேட்பதேயில்லை. அவுஸ்திரேலியாவுக்கு வந்த பிறகு அவரை பெரும்பாலும் மறந்ததுபோலத்தான். அவன் படிப்பும் கிரிக்கட்டும் தொலைக்காட்சியுமாக இருக்கிறான். அவரை அழைத்துச்சென்ற தினம் வரும்போது விரதம் இருந்து சுவாமி அறையிலிருக்கும் அவரது படத்துக்கு படையல் போட்டு மகன் வரும்வரையில் காத்திருந்து அவனையும் படத்துக்கு முன்னால் நின்று வணங்கச்செய்துவிட்டுத்தான் அந்தப்படையலை இருவரும் சாப்பிடுவோம். அன்று வடை, பாயாசம் எல்லாம் செய்வேன். வருடம் ஒருமுறைவரும் திவசநாள்.

ஒரு திவசநாளில்….

“ அம்மா இன்றைக்கும் அழுதீங்களா…?” மகன் கேட்டான்.

“ அழாமல் இருக்கமுடியுமா தம்பி? “

“ ஏனம்மா இப்படியே அப்பாவை நினைச்சுக்கொண்டே இருக்கிறீங்க…நீங்களும் இன்னுமொரு கலியாணம் செய்து எனக்கு ஒரு அப்பாவைத்தரலம்தானே…?”

நான் அதிர்ந்துபோனேன். அவனது கன்னத்தில் ஒரு அறைவிட்டேன்.

“ ஐயோ அம்மா…” அவன் கதறிக்கொண்டு அறைக்குள் ஓடி கதவை சாத்திக்கொண்டான்.

என்றைக்குமே அவன் அப்படிப் பேசியதில்லை. எப்படி இந்த மாற்றம் அவுனுக்குள் நிகழ்ந்தது.

சிறிதுநேரத்துக்குப்பின்னர் அறைக்குள் எட்டிப்பார்த்தேன். அவன் கட்டிலில் உறக்கத்திலிருந்தான். அருகே சென்று அமர்ந்து அவனது கேசங்களை தடவி வருடினேன். அவன் அரைஉறக்கத்திலிருந்து கோபத்துடன் எனது கையை தட்டிவிட்டான்.

கண்களை மூடியவாறே “ இங்கே பிள்ளைகளுக்கு அடிக்கக்கூடாது தெரியுமா? பொலிஸுக்கும் சொல்லலாம்”

அவன் என்னை மறுமணம் செய்யச்சொன்னதன் அதிர்ச்சி குறைந்து பொலிஸையும் அழைக்கலாம் என்றதும் அதிர்ச்சி கூடியது.

“ அம்மாவிட்ட பேசுற பேச்சா இது. இனி நான் உன்னோட பேசமாட்டன். நீயே பொலிஸைக்கூப்பிட்டு சொல்லு.” நான் கோபத்துடன் எழுந்துவந்தேன்.

சோபாவில் சாய்ந்துகொண்டு அழுதேன். அப்படியே உறங்கிப்போனேன்.

சற்று நேரத்தில் மகன் அருகே வந்து அமர்ந்தது தெரிந்தது.

“ அம்மா வெரி சொறி. நான் அப்படி பேசியிருக்கக்கூடாதுதான். எங்கட ஸ்கூல்ல சில வெள்ளைக்கார பெடியன்களின் அம்மாமார் தங்கட ஹஸ்பண்டை விட்டுப்பிரிந்து போய்ஃபிரண்ட் வைச்சிருக்கிறதா கேள்விப்படுறன். சில பெடியன்களுக்கு ஸ்டெப் ஃபாதர், ஸ்டெப் மதர் இருக்கிறாங்க.”

“அவர்கள் அப்படி இருக்கிறார்கள் என்பதற்காக நாங்களும் அப்படி வாழமுடியுமா தம்பி…?”

“அம்மா உங்களுக்கு ஒரு ஜோக் சொல்லட்டுமா?” எனக்கு அருகில் நெருக்கமாக அமர்ந்துகொண்டான்.

“சரி…சொல்லு…”

“ Your children and my children playing with our children “ என்று ஒரு தகப்பன் தாயிடம் சொன்னவராம். எப்படியிருக்கம்மா….?” அவன் சொல்லிவிட்டு அட்டகாசமாக சிரித்தான். நானும் சிரித்தேன். பல ஆண்டுகளுக்குப்பின்பு அப்போதுதான் நானும் பலமாகச்சிரித்தேன்.

நானும் இந்த நாட்டில் மகன் ஊடாக தெரிந்துகொள்ளவேண்டியன பல இருப்பதாக உணர்ந்தேன்.

——— —— —— —— ——–

அன்று வெள்ளிக்கிழமை. காலையில் மகன் பாடசாலைக்கு புறப்படும்போது, “தம்பி… இண்டைக்கு தோசைக்கு போட்டிருக்கிறன். இரவே அரைச்சும்

வைச்சிட்டன். இரவைக்கு உன்ர ஃபிரண்ட் நிமாலையும் அவன்ர அப்பா அம்மாவையும் கூட்டிக்கொண்டுவா. இரவுக்கு அவுங்களுக்கு இங்கதான் டின்னர் எண்டு சொல்லு.”

“நல்ல அம்மா.” மகன் என்னை கட்டி அணைத்து முத்தமிட்டான். இதுபோன்ற சந்தர்ப்பங்களே அவனது குதூகலமான பொழுதுகள்.

“ அம்மா… நிமால் மட்டும்தான் வருவான். அவன்ர அம்மாவுக்கு பின்னேர வேலை. ஒரு ஃபக்டரியில் வேலைசெய்யிறா என்று ஒருநாள் நிமால் எனக்கு சொல்லியிருக்கிறான்.”

“ அப்படியென்டால் அவன்ர அப்பா , சகோதரங்கள்…”

மகன் சில கணங்கள் மௌனமாக நின்றான்.

“ என்ன பேசாமல் நிக்கிற….சொல்லு…” அவனது தோளில் தட்டிக்கேட்டேன்.

“ அவனுக்கும் அப்பா இல்லை…” மகன் தரையைப்பார்த்தவாறு சொன்னான்.

நான் திடுக்கிட்டேன்.

“ ஏன்.. என்ன நடந்தது?” ஆவலுடனும் எதிர்பார்ப்புடனும்தான் கேட்டேனா என்பது தெரியவில்லை.

“ மற்றவர்களின் தனிப்பட்ட விடயங்களை கேட்பது நாகரீகம் இல்லையம்மா.” எனச்சொல்லிவிட்டு மகன் பாடசாலைக்குப் புறப்பட்டான்.

நான் துணுக்குற்றேன். நான் இன்னமும் எனது இலங்கையில் ஊரிலிருப்பதும் மகன் அவுஸ்திரேலியனாக மாறிவருவதும் புலனாகியது. ஆம் நான் மகனிடம் கற்றுக்கொள்ள பல விடயங்கள் இருக்கின்றன.

 

——————- ——————- ————————-

மாலை ஐந்து மணியளவில் மகன் தனது சைக்கிளையும் கிரிக்கட் பெட்டையும் எடுத்துக்கொண்டு வெளியே செல்லப்புறப்படும்போது, “தம்பி வரும்போது நிமாலையும் கூட்டிக்கொண்டு வா” என்றேன்.

“ ஓம் அம்மா. நிமால் தாயிடம் ஏற்கனவே சொல்லிவிட்டான். அதுதான் இன்றைக்கு எங்கட பிளான். வரும்போது அவன் வீட்டுப்பாடங்களையும் எடுத்துவருவான். இருவரும் ஒன்றாக இருந்து இங்கே படித்துவிட்டு தோசையும் சாப்பிட்டு தன்ர தாய்க்கும் தோசை, சட்ணி, சாம்பார் வாங்கிப்போவான். எல்லாம் பிளான் போட்டுவைச்சிருக்கிறன்.”

மகன் இப்படிச்சொன்னதும் எனக்கு அவர்தான் நினைவுக்கு வந்தார். அவரும் எதனையும் முன்கூட்டியே திட்டம் வரைந்துதான் செயல்படுவார். அந்த

ஜீன்ஸ் மகனிடமும் இருப்பது எனக்குப் பெருமைதான். அப்பனுக்குத்தப்பாமல் பிறந்த பிள்ளை என்பது இதனைத்தானா? எனது மனஉளைச்சல் கண்ணீராக வடிந்தது.

மகன் சொன்னபடி நிமாலையும் கூட்டிவந்தான். அன்றுதான் அவனையும் நான் பார்த்தேன். மகனுடைய வயதுதான் இருக்கும் கண்களில் துருதுருப்பு. சிவந்தமேனி. தாய் அழகானவளாக இருக்கவேண்டும். வீட்டுக்குள் வந்ததுமே “அம்மே..” எனச்சொல்லி என்னைக்கட்டிக்கொண்டான். அவனுக்கும் அவுஸ்திரேலியா நாகரீகம் தொற்றியிருப்பதை உணர்ந்தேன்.

மகன் அவனுக்கு வீட்டைச்சுற்றிக்காண்பித்தான். சுவாமி அறையில் அவரின் படங்களையும் காண்பித்து இதுதான் என்ர அப்பா என்றான். இலங்கைப்போரையும் அப்பா காணாமல்போனதையும் தனக்குத்;தெரிந்த தகவல்களுடன் ஆங்கிலத்தில் நிமாலுக்கு சொல்லிக்கொண்டிருந்தான்.

நான் இருவருக்கும் தோடம்பழச்சாறு கொடுத்தேன்.

பேசிக்கொண்டிருந்தவர்கள் முன் ஹோலுக்கு வந்து வீட்டுப்பாடங்களை எடுத்துச்செய்யத்தொடங்கிவிட்டனர்.

அண்ணா குடும்பத்தினரிடமிருந்து சற்றுத்தள்ளி தொலைவுக்கு வந்த கவலை, இந்த நிமாலைக்கண்டதும் காணாமல்போய்விட்டது. இனி மகனுக்காக நான் அதிகம் கவலைப்படத்தேவையில்லை. அவனுக்கு விளையாட… ஒன்றாக அமர்ந்து படிக்க… நல்ல சிநேகிதன் கிடைத்துவிட்டான். நிமால் வீட்டுக்குள் நுழைந்ததுமே…என்னை “அம்மே…” என விளித்து கட்டிக்கொண்டதன் மூலம் எனக்கு இந்த நாட்டில் இன்னுமொரு பிள்ளை கிடைத்திருக்கிறான். எனது கண்கள் பனித்தன.

நான் சமையலறையில் வேலையில் மூழ்கினேன். சட்ணியும் சாம்பாரும் வைத்தேன். விசேடமாக மசால தோசைக்காக உருளைக்கிழங்கை அவித்து கரட்டைச்சீவி வெங்காயம் பச்சை மிளகாய் நறுக்கி எண்ணெயில் வதக்கி மசாலாக்கறியும் சமைத்தேன். ஹோலிலிருந்து படித்துக்கொண்டிருந்த பிள்ளைகள் இருவருக்கும் இந்த மசாலா மணம் மூக்கைத்துளைத்திருக்கவேண்டும்.

எழுந்துவந்து நான் செய்வதை பார்த்தனர்.

“ அன்ரி… எங்கட அம்மாவை ஒரு நாளைக்கு கூட்டிவாரன் அவவுக்கும் தோசை சுடுவது எப்படி என்று சொல்லிக்கொடுங்கோ…” என்று ஆங்கிலத்தில் சொன்னான் நிமால்.

“ மகனே… என்னையும் அம்மே என்றே கூப்பிடு…” எனச்சொல்லி அவனது தலையை தடவினேன்.

அவன், “தேங்ஸ்” என்றான்.

மேசையை ஒழுங்கு செய்துவிட்டு தட்டுகளும் எடுத்துவைத்து பிள்ளைகளை சாப்பிட அழைத்தேன்.

குளியலறைக்குச்சென்று கால் முகம் கழுவிக்கொண்டு வந்தனர். மகன், நிமாலுக்கு தன்னுடைய துவைத்து மடித்துவைத்த சிறியடவல் ஒன்றை எடுத்துக்கொடுத்தான்.

மகன் சுவாமி அறைக்குச்சென்று அப்பாவின் படத்தையும் சுவாமி படங்களையும் வணங்கிவிட்டுவந்தான். அவனது நெற்றியில் திருநிற்றுக்குறி தென்பட்டது. நிமால் அதனை விநோதமாகப்பார்த்தான்.

இருவரும் மேசையின் முன்னால் அமர்ந்தனர்.

நான் தோசையை பறிமாறியபோது… “ நல்ல வாசம் ” என்றான் நிமால்.

“ சரி.. சாப்பிடுங்கள். நிமால் வெட்கப்படாமல் சாப்பிடவேண்டும். தம்பி, நிமாலுக்கு எடுத்துக்கொடு… நான் முகம்கழுவிக்கொண்டு வாரன்” என்று சொல்லிவிட்டு திரும்பியபோதுதான் நான் நிமாலைக் கவனித்தேன்.

அவனுக்கு முன்னாலிருந்த தட்டில் நான் பரிமாறிய மசாலாதோசை, சட்ணி, சாம்பார் . அவன் தட்டில் கைவையாமல் கண்களை இறுக மூடி வாய்க்குள் ஏதோ முணுமுணுத்தான்.

சில கணங்களில் கண்களைத்திறந்து “ சரி… சாப்பிடுவோம்” என்றான். எனக்கும் மகனுக்கும் அவனது அந்த மௌன அஞ்சலி வினோதமாக இருந்தது.

“ நிமால், இந்த மௌனம் அதுவும் சாப்பிட முன்னர் இந்த மௌனம் கடவுளுக்கானது என்பது நல்லதொரு பண்பாடு” என்றேன்.

“ அம்மே… இது கடவுளுக்கான மௌனம் இல்லை. எனது அப்பாவுக்கானது. எனது அப்பா ஆர்மியில் பிரிகேடியராக இருந்தவர். ஒரு தற்கொலைத்தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரது உடலைக்கூட்டி அள்ளியதாக அம்மே சொல்லியிருக்கிறாங்க. அப்போது எனக்கு இரண்டுவயதிருக்கும். அப்பாவின் முகத்தை அவரது படங்களில்தான் பார்த்திருக்கிறேன்.” என்று நிமால் சொன்னதும், நான் உறைந்துபோனேன்.

அவர் காணாமல்போன நாளன்றும் நான் இப்படித்தான் நின்றேன்.

 

(டென்மார்க் ஜீவகுமாரன் வெளியிட்ட புலம்பெயர், புகலிடச்சிறுகதை நூல் ‘முகங்கள்’ தொகுப்பில் இடம்பெற்ற சிறுகதை -சிங்கள மொழியிலும் பெயர்க்கப்பட்டது )

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.