புதையல்!…. ( சிறுகதை ) …. சந்திரன் (ஆவூரான்)
ஊர் அடங்கி நிலைமை மோசமாகிப் போய்விட்டுது. கொடுமைக்காரனின் ஊர்திகள் என்னை நசித்துக் கொன்றுவிடுமாப்போலை தான் ஓடிக்கொண்டிருக்கின்றன.
இந்தக் கிராமத்தின் வளம் கொழித்த காலமொன்று இருந்தது. விவசாயம் செய்து தங்களின் விடாமுயற்சியால் ஒவ்வொரு குடிமகனும் ஓலைக்குடிசையிலிருந்து ஓட்டுவீடும், அமெரிக்கன் பற்றேணில் கல்வீடும் கட்டி, களித்திருந்தபொழுது….
ஐயோ! நான் சொல்லுற விதத்திலை கிராமத்தின்ரை உண்மை எழில் உங்களுக்கு விளங்காது. இந்த மக்களின் வாழ்வு புரியாது. போங்கோ! போய், எழுத்தாளர் தாமரைச்செல்வியின் ‘பச்சை வயல் கனவு’ எண்ட கதையைப் படிச்சுப் பாருங்கோ! தள்ளி நில்லுமேன்! ஊர் தின்ன வருவாரின்ரை ஊர்திகள் பூநகரிப்பக்கம் போகப் போகுது. உங்களையும் உழக்கிக்கொண்டு போகலாம். என்னையும்தான் உழக்கிக்கொண்டு போவாங்கள். அது உண்மை.
இந்தக் கிராமமும் இந்தக் கிறெவல் ரோட்டும் ஏன் இப்பிடிக் கிடக்குது தெரியுமே?
இவன்கள் சாள்ஸ், நாதன், ராஜா, வேந்தன், ரவி, கோவிந்தப்பாவின்றை மகன், தங்கராசா, படியலிங்கம், சுட்டுக் கொன்றாங்களே வளாகத்துப் பொடியன் சத்தியசீலன், எல்லாருமாய்ச் சேர்ந்து, அதோ அந்த மைதானத்தைத் திருத்தித் தரச்சொல்லி – அதுதான் எங்கடை விரல்கள் எல்லாம் எரிய எரியத் தேசிக்காய் போட்டு உரஞ்சி, தேர்தல் மையைக்கழுவி கள்ள வோட் போட்டுப் பார்ளிமேந்துக்கு அனுப்பிவைத்தமே சங்கரி – அவரிட்டை இந்த மைதானத்தைத் திருத்தித் தாங்களேன் எண்டு கேட்டதுதான்… உடனே கோபம் வந்துட்டுதே எம்.பீக்கு! ‘நீங்கள் எல்லாரும் ஆர்? எந்தக் கிராமம் எண்டே தெரியாது’ எண்டு சொல்லிப்போட்டார்.
படிச்சவங்கள், அறிவுள்ள பிள்ளையள், தங்களின்ரை முழுமுயற்சியாலை,
சிறிதாய் வளரும் சின்னக் கிராமம் சிந்திக்க வைப்போம், அது எங்கள் இதயம்
எண்டு எழுதிப்போட்டு, அதைச் செய்தும் காட்டினாங்கள். ஆனால் அவங்களும் எங்கேயோ தூரதேசம் போய்விட்டாங்கள். அது கொடுமையான கதை.
ஆ! அடிச்சுதா? பார்த்தீங்களா? நான் சொன்னென். பார்த்துப்போங்கோ எண்டு! எதுக்கும் என்னைத்தான் கோவிப்பீங்கள். இப்பிடி எத்தினைபேர் என்னிலை உரஞ்சிப்போட்டு நாசமாய்ப்போன கல்லு எண்டு திட்டிப்போட்டுப் போகினம். இவ்வளவுகாலத்துக்கும், முழு வெறியிலைகூட, என்னிலை முட்டாமலே நடந்து போன ஆட்கள் ஆக மூண்டு பேர்தான்
1. ஒண்டு, அவர் அய்யம்பிள்ளை மாஸ்டர் (அதுதான் மணிவாசனுடைய தகப்பன்) – இயக்கத்திலை இருந்தபோது ஆமி அடையாள அட்டையைக் காட்டச்சொல்ல, அவர் தன்ரை அடையாள அட்டைக்குப் பதிலாய்க் கராட்டிக்காட்டைக் காட்டி, ஆமியிடம் அம்பிட்டவர்
2. மற்றது, தலையை ஆட்டியாட்டி ‘தெரிதெரி, தெரிதெரி, கண் தெரியாதடோய்! சுண்ணாகத்துக் கோவியரே?’ எண்டு றோட்டாலை சத்தம் போட்டுக்கொண்டு நடக்கிற கிழவன்.
3. மூன்றாவது, பெரியதம்பி எண்டு, கண்டாவளைப் பொடியன். அவன் படிச்சவன் ஆனால் மூளை சுகமில்லாதவன். இவன் செயக்குமார் குடிச்சுப்போட்டு வந்து தானாக எனக்குமேலை விழுந்து கீறுப்பட்ட காயத்தைக் காட்டி, ஆமி அடிச்சுது, புலிகள் பிடிச்சுது, அதனாலை இனிமேல் இலங்கையிலை வாழமுடியாது எண்டு சொல்லித்தான் டென்மார்க்கிலை அகதி அந்தஸ்து கேட்டவன், எண்டு, ஆரோ பேசிக்கொண்டினம்.
பார்த்து நடக்கிற ஆட்கள், கண்ணிருக்கிறவை, நிதானமாய்ப் போறவை, இவைகூட என்னிலை உரஞ்சிப்போட்டு, கல்லு எண்டு என்னை ஏசி, மேலும் ஒருக்காய் எனக்கு உதைஞ்சுபோட்டுப் போவினம். எனக்குள்ளையும் எத்தனை வேதனைகள், மனஉளைச்சல்கள், ஆசைகள், கனவுகள்.. ம்.. எல்லாம் நிலைச்சுவிடவேணும் எண்ட நம்பிக்கைதான். முந்தி, இளைஞர்வட்டப் பொடியள் கூடியிருந்து கதைச்ச இடமும் இதுதான். பரந்தன் சந்தியிலையிருந்த இராணுவமுகாமை உளவுபார்த்த புலிவட்டனுகள் மறைவாய் என்னைத்தானே பயன்படுத்தினவங்கள். ஆமிக்காரங்கள்கூட என்னிலை குந்தியிருந்தவங்கள்தானே! இப்பிடி இருக்கிற பொழுது, ஒருநாள் அந்த ஆமிக்காரன் வந்து புல்டோசராலை என்னைக் கிளப்பப்பார்த்தான். ஆனால் அவன்ரை கப்டன் வந்து தடுத்துப்போட்டான்.
அந்தத் தடுப்புத்தான் புலிகள் என்னைத் ஒரு தடுப்பாகப் பாவிக்க வாய்ச்சுப்போச்சுது.
அப்ப, புல்லானாலும் புலிக்கு ஆயுதமாகும் எண்டு சொன்னது சரிதானே!
ஆ! பரந்தன் இராணுவமுகாமைப் பெடியள் அழிச்சுத் தரைமட்டமாக்கினபோது நீங்கள் பார்த்திருக்கவேணுமே! அப்பா! எத்தினை பொடியன்கள் என்னிலை தங்கடை உடம்பை உரஞ்சிக்கொண்டு போனவங்கள்! உண்மையிலை கல்லாய் இருந்தாலும் எனக்கிந்தத் தவப்பேறு கிடைத்து, நான் அனுபவித்தது எப்பவெண்டால் – அந்த
வீரமறவரின்ரை உடல் என்னிலை உரசிக்கொண்டு தவழ்ந்துபோனபோதுதான். அதுவே நான் செய்த தவம்.
புகைபுகையாய் வந்தார்கள், படைபடையாய் வந்தார்கள் எண்டெல்லாம் ஆமிக்காரர் அறிக்கைகள் விட்டாங்களே!
கற்பனையில்லை கரும்புலி யாகம்! கவிதையில் நானும் பாடிட விற்பனைக்கில்லா இந்தப் பூக்கள் உயிர்த்தேன் தந்தே தமிழ்த்தேன் காக்கும்!
எண்டு ஒரு வழிக்கிறுக்கன் பாடினானே! நினைவிருக்குதா?
அல்லும் பகலும் வெறும் கல்லாய் இருந்துவிட்டு அதிட்டம் இல்லை என்று அலட்டிக்கொண்டார்
எண்டு ஒரு பாட்டு நடராசாவின்ரை கடை ரேடியோவிலை கேட்கும். சிலவேளைகளிலை சயிக்கிள்கடைப் பசுபதி வேலைமுடிந்து போகிறபோது பாடிக்கொண்டு போவார், எவனை நினைச்சுப் பாடினாரோ, ஆருக்குத் தெரியும்! வடிவாய்க் கேளுங்கோ! என்ரை காலடியிலை பெரியதொரு புதையல் கிடக்குது. கிட்டத்தட்ட 250 ஆண்டுகளுக்கு முந்தி எண்டு சொல்லலாம்.
All of you Gentlemen, listen! Pandara-vanniyan is a very strong king. Our soldiers are not enough to round him up. Open that rock, and put that golden ball under. m…m…Oh God! ….. Run away. Follow me …………
எண்டு சொல்லிக்கொண்டு அண்டைக்கு அந்த வெள்ளையன்கள் ஒரு புதையலை என்ரை காலடியிலை வைச்சபோது பண்டாரவன்னியன்ரை படைகள் அவங்களை விரட்டிக்கொண்டு போய்விட்டினம். அன்றிலிருந்து இன்றுவரை நான் அதைப் பாதுகாத்துக்கொண்டு வாறேன்.
ஒருநாள் அய்யம்பிள்ளை வாத்தியார் குடிக்காமல் நிதானமாய்ப் போகிறபோது தன்ரை காலாலை என்னை உரஞ்சிப் போட்டார். உடனே அவருக்குக் கோபம் வந்திட்டுதே!. அதனாலை டியூசன் மாஸ்டர் சார்ல்ஸ் குணரத்தினத்திட்டைச் சொல்லி அவற்றை மாணவப் பொடியளைக்கொண்டு என்னைக் கிளப்ப முற்பட்டினம். எனக்கெண்டால் சந்தோசம்தான். இந்தப் பொடியள் இந்தப் புதையலை எடுத்தால் இந்தக் கிராமமும் முன்னேறும், பொடியளுக்கும் கொஞ்சம் நனையும் எண்டு நினைச்சு சந்தோசப்பட்டேன். ஆனால், அதுக்குள்ளை பாட்டுக்காரப் பாகவதர் வந்து தடுத்துப்போட்டார்.
இது எனக்குப் பெரிய கவலை பாருங்கோ! இவ்வளவு காலமும் பாதுகாத்துக் கொண்டு வந்த புதையலை ஒருவராவது எடுப்பதாக இல்லை.
நாட்டிலை புலிகளின்ரை போர்நிறுத்தம் வந்தபின்னாலை, உலக வரைபடத்திலை வன்னிப்பிரதேசம் ஊன்றிப் பார்க்கப்படுகுது. எல்லா நாட்டவர்களும் வந்து பார்க்கினம். இப்பிடித்தான் அண்டைக்கு வந்த வெள்ளையன் ஒருத்தன், கையிலை வரைபடத்தை வைச்சுக்கொண்டு, பூநகரிவீதி முனையிலை நிண்டுகொண்டு, எதையோ பார்க்கிறான். அந்த மனிதனைப் பார்த்தால், ஆரும் ஒல்லாந்தனோ அல்லது ஆரோ
ஆங்கிலேயன்றை உறவுக்காரனுடைய தாத்தாவோ, பாட்டனோதான் இந்த வரைபடத்தை இவனுக்குக் குடுத்திருக்கவேணும் போலையிருக்குது.
அய்யையோ! இந்தச் சங்கதி தெரியாமல் இந்தப் புலிப்பொடியளும் அவனுக்கு வழிகாட்டுறாங்களே! நான் எப்பிடி இதை அவங்களுக்கு விளங்கப்படுத்துவேன்? பண்டாரவன்னியன் காலத்துப் புதையலை இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் ஆரும் பயன்படுத்தாமல் நான் பாதுகாத்து வைத்திருக்கிறேன். இரண்டு பரம்பரைச் சகாப்தத்துக்குப் பிறகு, இந்தப் புதையல் பிறகும் வெள்ளைக்காரன்ரை கைக்குத்தான் போய்விடுமோ?! அதுதான் பயமாயிருக்குது. அல்லது
அல்லும்பகலும் தெருக்கல்லாய் இருந்துவிட்டு அதிட்டமில்லை என்று அலட்டிக்கொண்டார்
எண்ட பாடலிலை சொன்னதுபோலைதான் ஆகிவிடுமோ?
ஆமிக்காரங்களை அடித்து வன்னி மண்ணைவிட்டு அகற்றிய பின்னர் என் மனம் ஆறியிருந்தது உண்மை. ஒருநாள் இந்தப் பொடியள் றோட்டைத் திருத்துவாங்கள், அந்தநேரம் என்னைக் கிளப்பி எடுக்கிறபொழுது புதையலும் வெளிப்படும். அதை வைச்சு இந்தச் சின்னச் சிவன்கோவிலையும் புதுப்பிச்சுக் கட்டி, மைதானத்தையும், அந்த வாசிகசாலையையும் திருத்தி, புனரமைப்பாங்கள் எண்டு நினைச்சிருந்தேன்.
ஆனால் இப்ப எல்லாம் கலைஞ்சுபோய் கனவாய்ப்போய்விடும் போலிருக்குது. இப்பிடி நான் தனியாய்க் கிடந்து தவிக்க இந்த வெள்ளைக்காரர்தான் காரணம். உண்மையாய், வெள்ளைக்காரர் நல்லது செய்வாங்களாம். அவங்கள் இங்கிருந்து சுரண்டிக்கொண்டு போனதை வைத்து, தங்கள் நாட்டைத் திருத்தி வளப்படுத்தினபடியால்தானே இண்டைக்கு எங்கடை தமிழ் அகதிகளுக்கு அங்கை தஞ்சம் கொடுத்து வாழவைக்கிறாங்கள். இது ஒருவகையிலை பார்த்தால், ஈடுசெய்யும் பணி எண்டுதான் சொல்லவேணும்…. அப்பிடியெண்டால், இந்தப் புதையலை என்ன செய்யிறது? அதுக்காக, இதை வெள்ளைக்காரர் எடுக்க அனுமதிக்கலாமோ?
வெள்ளைக்காரர் போட்ட றோட்டும் அவங்கள் வரைந்த வரைபடத்துடனும்தானே இந்த மண் இப்பிடியே கிடக்குது! கடவுளே! எல்லாம் நல்லபடியாய் நடக்கவேணும்…
ஆர் இது? என்ன, புதுமுகமாயிருக்குது?
இல்லையில்லை. இந்தப் பொடியனை எங்கையோ பார்த்தமாதிரி இருக்குது. அடட!……. இந்த எங்கடை கிராமத்துப் பொடியன்தான்!. எனக்குத் தெரியும். இவன்… இவன், நாகம்மா கிழவியின்ரை பேரனெல்லோ! அதுதானே பார்த்தென். இவன் கலியாணமும் கட்டி, பிள்ளையளும் இருக்கினம்.
அவன் கொண்டுவந்த பெட்டியிலை என்ன எழுதியிருக்குது? ஒஸ்ரேலியா என்று எழுதியிருக்கின்றது.
ஆனால், இவன் ஏன் பூநகரி றோட்டையும், மற்றப் புழுதி றோட்டையும் நிண்டு உன்னிப்பாய்ப் பார்க்கிறான்?
பெண்சாதியோடை வாறான். கிட்ட வாறான். எனக்குக் கிட்டவாய் வந்துநிண்டு என்னைக் காட்டி எதையோ சொன்னவன், பிறகு தன்ரை சப்பாத்தைக் கழட்டிப்போட்டு, பெண்சாதிக்குத் தன்ரை கால் நடுவிரலையும் காட்டுகிறான்.
அய்யோ, பாவம்! என்னாலைதான் அவன்ரை கால்நகம் கழண்டது. பாவம்.
அதை ஞாபகப்படுத்திக் காட்டுகிறான். ஏதோ கதைக்கினம்… கேட்பம்!
‘இங்கை, உசானி! இந்தக் கல்லாலைதான் எனக்கு ஒஸ்ரேலியாவுக்கு நிரந்தர விசா கிடைச்சது. இந்தக் கல் அடிச்சுத்தான் என்ரை கால்நகம் கழண்டுபோனது. நான் என்ரை கால்நகத்தை ஆமி புடுங்கிப் போட்டான் எண்டு சொல்லித்தான் வழக்குப்போட்டு விசா எடுத்தனான். அதுதான், இந்தக் கல்லைக் கிளப்பி, இதிலை ஆஞ்சநேயர் சிலை ஒண்டு செய்து, ஒஸ்ரேலியா மெல்போணிலை ஒரு கோயில் கட்டலாம் எண்டு யோசிக்கிறென்’. என்ன சொல்கிறீர்கள் உங்களுக்கொரு நிரந்தர வாழ்க்கையை அமைக்க உதவின கல்லை தெய்வமாய் நினைச்சு வழிபடுகிறது பெரிய விசயம் தானே.
‘அப்பாடா! இப்பதான் நிம்மதி. அவன் சொன்னதைச் செய்துமுடிக்கிறதுக்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்கின்றான்.. என்ரை கனவும், நினைவும், உண்மையாய் நடக்கப் போகிறத …
அப்பனே! ஆஞ்சநேயா! நீ வாழ்க! அது சரி… அப்பிடியெண்டால்…. கீழேயிருக்கிற புதையல்?