முகிழ்த்தது முத்து

“கோயிலும் சங்கமும்”!… ( சிறுகதை )…. கே.எஸ்.சுதாகர்.

நாட்டிற்குப் புதிதாக வந்து நண்பர் வீட்டில் ஒரு மாதம் குதூகலமாக ‘குஜாலாக’ இருந்தோம். வீடு ஒன்று வாடகைக்கு எடுத்துக் கொண்டு போகும் போது, “எங்களுக்குக் கிட்ட பத்து நிமிஷம் கார் ஓடும் தூரத்தில் ஒரு கோயில் இருக்கு” என்று நண்பர் செந்தி எங்களுக்குச் சொன்னார். முதலிலேயே சொன்னால் எங்களை அங்கே கூட்டிக் கொண்டு போக வேண்டி வரலாம் என நினைத்து அவர் இதை எங்களுக்குச் சொல்லவில்லை.

நண்பர் கோயிலுக்கு எல்லாம் போவதில்லை. நண்பரின் குடும்பத்திற்கும் கரப்பான் பூச்சிக்கும் ஏதோ ஒரு வகையில் பூர்வ ஜென்மத் தொடர்பு இருந்திருக்க வேண்டும். கரப்பான் பூச்சிகள் வெளிச்சத்தைக் கண்டு பதகளித்து ஓடுவது போல, அவர்களும் மனிதர்களைக் கண்டு பதட்டப்பட்டு ஓட்டமெடுக்கின்றார்கள். கடைகளுக்குப் போய் வருவது என்றால் கூட ஒரு ‘ஒட் ரைமில்’தான் போய் வருகின்றார்கள். அதுவும் சுவர்க்கரையோரமாக பதுங்கிப் பதுங்கியே போய் வருகின்றார்கள்.

வீடு மாறும் போது கார் ஒன்றும் எடுத்துக் கொண்டோம்.

வேலை தேடும் படலம் விசித்திரமானது. ‘றிசுமி’யை (Resume) எல்லா இடங்களிலும் விதைத்து விட்டோம். விதைக்கும் போது சற்று மங்களகரமாக இருக்கட்டுமென்று அதன் ஓரு மூலைப்பக்கமாக திருநீறு சந்தணமும் தடவி விட்டோம். நான்கு மணித்தியால வேலை, எட்டு மணித்தியால வேலை, மாலை வேலை, இரவு வேலை, நடுச்சாம வேலை, கசுவல் வேலை, கசுவலுக்குக் கசுவல், ரெம்பரரி, பேர்மனன்ற் ரெம்பரரி என்று தற்காலிக வேலையிலேயே பல ரகம். ஒரு நாளைக்கு இரவு மூன்று மணி போல வேலை முடியும். இன்னொருநாள் இரவு மூன்று மணிக்குத்தான் வேலை தொடங்கும். காசு கையில் புரள வேண்டுமென்றால் நாங்களும் புரளத்தான் வேண்டும் என்று செந்தி சொல்லுகின்றான்.

ஒருமாதிரி செந்தி சொன்ன கோயிலுக்குப் போகின்ற காரியம் கை கூடியது. ஒருநாள் வெள்ளிக்கிழமை இரவு கோயில் தரிசனம்.

கோவிலில் முப்பது பேர் மட்டில் மிகவும் சுறுசுறுப்பாக தெய்வீகமாக இருந்தார்கள். பூஜை நடந்தது. சிலர் சுவாமி தரிசனம் செய்வதை விடுத்து எங்களைத் திரும்பித் திரும்பி புதினம் பார்த்தார்கள்.

“இண்டைக்குத்தான் உங்களைக் கோயிலிலை காணுகின்றோம். அவுஸ்திரேலியாவுக்குப் புதிசோ?” என்றார் ஒருவர்.

“இல்லை. நாங்கள் இஞ்சை வந்து சில மாதங்களாகிவிட்டன. இன்றுதான் கோயிலுக்கு வருவதற்கு சந்தர்ப்பம் வந்தது.”

“இங்கே கோயில் இருப்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?”

எனக்கு இந்தக் கோயிலை அறிமுகம் செய்து வைத்தவரை தேடும் படலம் நடந்தது. நான் ஒளிந்து கொண்டிருக்கும் நண்பரைக் காட்டிக் கொள்ள விரும்பவில்லை. சிரித்து மழுப்பினேன்.

“உங்களுக்கு என்ன பெயர் எண்டு சொன்னனியள்? சிவலிங்கமோ? மூண்டு பிளையளும் உங்கடைதானே! என்னுடைய பெயர் முருகேசு, கோயில் கொமிட்டி பிறசிடன்ற். இவர் இரா.வரதன், செக்கிரட்டரி. அடிக்கடி கோயிலுக்கு வந்து போங்கோ என்ன!” என்றார் முருகேசு.

“மாதத்திலை நீங்களும் ஒருநாள் பூசை எடுத்துச் செய்யலாம்” என்றார் இரா.வரதன்.

“வெள்ளிக்கிழமையிலை சாப்பாடு குடுக்கிறனியளாம். உண்மையா?”

“ஓம். ஓம். இட்டலி, தோசை, பூரி, வடை – ‘சீப்’பா குடுக்கிறனாங்கள். நீங்கள் அடிக்கடி கோயிலுக்கு வந்து போக வேணும்” திரும்பவும் சொன்னார் முருகேசு.

அருச்சனைக்கு பற்றுச்சீட்டு எழுதும்போது,

“உங்களுக்கு வேறு என்ன என்ன துறைகளிலை நாட்டம் உண்டு?” என்றார் காசாளர்.

“இலக்கியத் துறையிலை கொஞ்சம் ஆர்வம் உண்டு” என்றேன் நான்.

“இஞ்சாரும் வரதன், உமக்கொரு ஆள் கிடைச்சிருக்கிறார்!” என்று வரதனைக் கத்திக் கூப்பிட்டார் காசாளர். இரா.வரதன் கோயிலை விட ஒரு இலக்கியச் சங்கத்திலும் பதவி வகிக்கின்றார் என்ற விபரம் தெரிந்தது. அவர் சங்கத்தின் செயற்பாடுகள் பற்றி விலாவாரியாக எடுத்துரைத்தார். கடைசியில்,

“உங்களுக்கு விருப்பமெண்டால் அங்கத்தவராகலாம். தனிய என்றால் 25 டொலர். குடும்பம் என்றால் 50” என்று சொல்லி, சேர்ட் பொக்கற்றுக்குள் றெடியாகவிருந்த தனது தொலைபேசி எண் எழுதிய துண்டையும் தந்தார்.

“இங்கே மனிதர்கள், வாழ்க்கையை ஒவ்வொன்றாக ஸ்திரப் படுத்திக் கொண்டு – ‘வெல் செற்ரில்’ ஆகும்போது, பட்டம் பதவி கோயில் சங்கம் பாடசாலை என்ற கோதாவினுள் அவர்கள் வாழ்க்கை இறங்கி விடுகின்றது” என்பார் நண்பர் செந்தி. இந்த ‘வெல் செற்ரில்’ என்பது ஆளாளுக்கு வேறுபடுவதாகவும் தெரிகிறது. கார், பஜீரோ ஜீப் ஆக மாறலாம். சாதாரண வீடு, மாடி கோடி லக்ஸ்சறி என்று போகலாம் என்பதாகவும் அறிக.

அடிக்கடி நாங்கள் கோவிலுக்குப் போய் வந்தோம்.

“நீங்கள் அடிக்கடி கோயிலுக்கு வந்து போக வேணும்!”

நிரந்தரமாக ஒரு மாலை வேலை கிடைத்த போது கோயிலுக்குப் போக முடியாமல் போய் விட்டது. இரண்டு மூன்று மாதங்கள் கழிந்த ஒரு லீவு நாளில் மீண்டும் கோவிலுக்குப் போனோம்.

கோவிலில் முருகேசு, இரா.வரதன் போன்றவர்களைக் காணவில்லை. ஓரிருவரைத் தவிர, ஐயர் முதற்கொண்டு எல்லாரும் புதுமுகங்களாக இருந்தார்கள். அந்த இருவரும் எங்களை அடையாளம் கண்டு கொண்டார்கள்.

“எங்கை கனநாளாக கோயில் பக்கம் காணேல்லை?”

அவர்களிடம் எங்களது வாழ்க்கைச் சரிதத்தைச் சொல்லிக் கொண்டிருக்கையில், மனைவி பின்னால் சுரண்டி கோவிலிற்கு வந்த விஷயத்தை ஞாபகப் படுத்தினாள். எனக்கு இரா.வரதனிடம் ஒரு காரியம் ஆக வேண்டியிருந்தது. அப்பொழுது எனது மைத்துனன் அவுஸ்திரேலியா வருவதற்கு வலை போட்டுக் கொண்டிருந்த நேரம். இரா.வரதனிடம் ‘கொம்மியூனிற்றி ஸ்பொன்சர்’ பற்றிக் கேட்டறிய வேண்டியிருந்தது.

“எங்கை வரதனைக் காணவில்லை?” மெதுவாக ஒருவரிடம் தூண்டில் போட்டேன். அவர் என்னை மேலும் கீழும் வியப்புடன் பார்த்தார். ஒன்றும் சொல்லவில்லை.

‘அடிக்கடி கோயிலுக்கு வந்து போங்கோ’ என்று சொன்னவர்களையே கோயிலில் காணவில்லை என்றால் மனம் சங்கடப்படாதா என்ன?

சாப்பாடு விற்பனை செய்யும் இடத்திற்குப் போனால் விபரங்கள் அறியலாம் என்ற நன் நோக்கில் அங்கு விரைந்தேன். என்னதான் இந்துக்கோயில் என்றாலும், சாப்பாடு விற்பனை செய்யுமிடத்தில் சிங்கள இனத்தவரும் கிறிஸ்தவ மதத்தினரையும் காணக்கூடியதாக இருந்தது. தோசைப் பார்சல் கட்டும் போது கதை கொடுத்ததில் அங்குள்ள பெண்மணி விசயத்தைச் சொன்னாள்.

“அவர்கள் சண்டை பிடிச்சுக் கொண்டு இன்னொரு கோயில் கட்டப் போயிட்டினம்!”

அவள் அதை அமைதியாகச் சொன்னாலும், எங்களுக்கு அந்த விஷயம் அதிர்ச்சியாக இருந்தது. அவர்கள் அடிபட்டுக் கொண்டு போனார்களா அல்லது இவர்கள் அடித்துத் துரத்தினார்களா? யாருக்குத் தெரியும்?

“என்ன கோயில் கட்டப் போகினம்? எங்கை கட்டுகினம்?” காருக்குள் ஏறும்போது மனைவி கேட்டாள்.

“வீட்டை போய் வரதனுக்கு ஒரு ரெலிபோன் போட்டால் எல்லாம் தெரிய வரும்.”

“பிறகு கதை கேக்கிற நினைப்பிலை, ஸ்பொன்சரைப் பற்றிக் கேக்க மறந்து போகாதையுங்கோ.”

“நீர் ஒருக்கா எனக்கு ஒரு ஹெல்ப் செய்யும். எம்.எஸ்.விஸ்வநாதன்ரை சீ.டி.யைப் போட்டிட்டு, ‘உண்மையே உன் விலை என்ன?’ எண்ட படத்துப் பாட்டை ஒருக்கா அமத்தி விடும்.”

முருகா… முருகா… முருகா – என்று பாடல் தொடங்கியது.

‘இத்தனை மாந்தருக்கு ஒரு கோயில் போதாது…

வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக வரதனின் ரெலிபோன் நம்பரைத் தேடத் தொடங்கினேன்.

“இஞ்சாருங்கோ. ஸ்பொன்சர் விஷயம் கதைக்க முதல், ஃபமிலி மெம்பர்சிப் சங்கத்துக்கு எடுக்கிறோமெண்டு சொல்லுங்கோ. அப்பதான் மனிசன் குளிர்ச்சியடைந்து விஷயத்தைக் கக்கும்” மனைவி சமயோசிதமாக விடயதானங்கள் தந்தாள்.

ஒருமாதிரி ரெலிபோன் நம்பரைக் கண்டு பிடித்தேன்.

“ஹலோ! ஆர் கதைக்கிறது?”

“ஹலோ! நீர் முதல் ஆருக்கு எடுத்தனீர் எண்டு சொல்லும். அவர்தான் இப்ப கதைக்கிறது.”

“நான் இஞ்சை சிவகணேசன் கதைக்கிறன். வரதனோடை கதைக்க முடியுமா?”

“வரதன்தான் கதைக்கிறன்.”

“இரண்டு மூண்டு மாதங்களுக்கு முதல் கோயிலிலை சந்திச்சனாங்கள். ஞாபகம் இருக்குமெண்டு நினைக்கிறன்.

“இருக்குது. இருக்குது”

“நாங்கள் உங்கடை சங்கத்திலை ஃபமிலி மெம்பராக சேர ஆசைப்படுறம்.”

“நான் அந்தச் சங்கத்திலை இப்ப இல்லை.”

கோபமாகக் கத்திவிட்டு ரெலிபோனை அடித்து வைத்தார் வரதன். இதென்னடாப்பா இந்த மனிசனுக்கு நடந்தது? என் மனம் நொருங்குண்ட இதயம் போலானது.

கோயில் உடைந்தது.

இப்போது சங்கமும் உடைந்ததோ?

என் மனம் உடைந்து போயிற்று.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.