கல்முனை வடக்கில் இலக்கிய விழா!…. செ.துஜியந்தன்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் 2020 கலை, இலக்கியப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வும் இலக்கியம் சிறப்பு மலர் வெளியீட்டு விழாவும் இன்று(30) பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறைமாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் கலந்து கொண்டார். அத்துடன் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.எம் ரின்சான், சமூர்த்தி தலைமை முகாமையாளர் கே.இதயராஜ், கலாசார அதிகார சபை செயலாளர் கலாபூஷணம் கே.சந்திரலிங்கம், கலாசார உத்தியோகத்தர் ரி.பிரபாகரன், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் வி.தயாஜினி, இந்துகலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் கெ.சுஜித்திரா உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
இங்கு பிரதேச மட்டத்தில் நடத்தப்பட்ட கவிதை, சிறுகதை, இலக்கிய விபரணம், சித்திரம், கையெழுத்து போட்டிகள் ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவர்கள், கலைஞர்கள் சான்றிதழ், பரிசு வழங்கி கொளரவிக்கப்பட்டதுடன் தெற்காசிய கராத்தே போட்டிகளில் பங்குபற்றி பதக்கங்களைப்பெற்று நாட்டிற்கும், பிரதேசத்திற்கும் பெருமை தேடிக்கொடுத்த கராத்தே வீரர் எஸ்.பால்ராஜ் கலாசார அதிகார சபையினால் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மேலும் இங்கு ஜனாதிபதியின் தேசத்தை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் பிரதேசத்திலுள்ள அரச, அரசார்பற்ற நிறுவனங்களின் சுவர்களில் சுவரோவியங்களை வரைந்து அழகுபடுத்திய உள்ளுர் ஓவியக்கலைஞர்கள் விசேடமாக சான்றிதழ், பரிசுவழங்கி கௌரவிக்கப்பட்டனர். கல்முனை வடக்கு பிரதேச கலாசார பிரிவினால் இலக்கியம் எனும் இலக்கிய விழா சிறப்பு மலர் அதிதிகளினால் வெளியிட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.