அவுஸ்திரேலியா – இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் மாணவருக்கான கொடுப்பனவு!
அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் (1988 – 2020 ) மேலாக இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவியுடன் கல்வியை தொடரும் இலங்கை மாணவர்களுக்கான, நிறைவுபெறும் 2020 ஆம் ஆண்டிற்கான முழுநிதிக்கொடுப்பனவும் வழங்கப்பட்டுள்ளது.
தன்னார்வ தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியம் சமகால கொரோனோ வைரஸ் நெருக்கடிக்கு மத்தியிலும், கல்வி சார்ந்த பராமரிப்பு பணிகளுக்கு உள்வாங்கியிருக்கும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு , அம்பாறை முதலான மாகாணங்களையும் மலையகம், மற்றும் கம்பகா மாவட்டத்தைச்சேர்ந்த ஏழைத்தமிழ் மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவுகளை இந்தப்பிரதேச மாணவர் கண்காணிப்பாளர்கள் – தொடர்பாளர்கள் ஊடாக வழங்கி வருகின்றது.
இன்று 30 ஆம் திகதி புதன்கிழமை கம்பகா மாவட்டத்தில் நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவு, கல்லூரி மண்டபத்தில் அதிபர் திரு. புவனேஸ்வரராஜா முன்னிலையில் குறிப்பிட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
மாணவர்களின் தொடர்பாளர் ஆசிரியை செல்வி லோஜினி மற்றும் மாணவர்களின் தாய்மாரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
கடந்த வாரம் அம்பாறை , மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட மாணவர்களுக்கும், அதற்கு முன்னர் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி மாவட்ட மாணவர்களுக்கும் மலையக மாணவர்களுக்கும் நிதிக்கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.
இலங்கையில் தொடர்ந்து நீடிக்கும் கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாடசாலைகள் சீராக இயங்காத நிலையிலும் மாணவர்களின் நலன் கருதி சமூக இடைவெளிபேணி இந்த நிதிக்கொடுப்பனவுகள் கட்டம் கட்டமாக வழங்கப்பட்டன.
—0—