முல்லைத்தீவில் அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதருக்கு திருவுருவச்சிலை!
மக்கள் சேவையே மகேசன் சேவை என வாழ்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் அமரத்துவமடைந்த அருட் தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளாருக்கு முல்லைத்தீவு மறை மாவட்டத்தில், அவர் நீண்டகாலம் இறைபணியை தொடர்ந்த பிரதேசத்தில் திருவுருவச்சிலை நிர்மாணிக்கப்பட்டது.
சுநாமி அனர்த்தத்தில் உயிரிழந்தோரை நினைவுகூரும் வேளையில், சுநாமி கடற்கோள் காலத்தில் அவர் தீவிர அர்ப்பணிப்புடன் மக்களுக்கு சேவையாற்றிய பகுதியிலேயே இச்சிலை நிறுவப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தகுந்தது.
முல்லைத்தீவு சுநாமி நினைவாலய வளாகத்தில் , முல்லைத்தீவு மறைக்கோட்ட குரு முதல்வர் அருட்தந்தை யாவிஸ் அடிகளார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்தப்பிரதேச மக்களும் அருட் தந்தைமாரும் அருட்சகோதர , சகோதரிகளும் கலந்துகொண்டனர்.
யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜோசப் ஜெபரட்ணம் அடிகளார் இந்நிகழ்வில் உரையாற்றுகையில், “ அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதரின் முகம் எப்பொழுதும் ஏழைமக்கள் மீது இரக்கசிந்தனையை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும். அவ்வாறே இன்று இங்கு நிறுவப்படும் திருவுருவச்சிலையின் முகத்தோற்றமும் பொலிவுபெற்றிருக்கிறது. சுநாமி கடற்கோள் அநர்த்ததின் பின்னர் இந்தப்பிரதேச மக்களின் மீள் கட்டுமானத்தில் தனது அக்கறையை காண்பித்து, மக்களின் புனர்வாழ்வுக்கு உதவிய பெருந்தகை அவர்.
அதற்கான நன்றியின் வெளிப்பாடாகத்தான் அன்னாரின் திருவருவச்சிலை இங்கே அமைகிறது.
இச்சந்தர்ப்பத்தில் ஒரு முக்கிய தகவலையும் தெரிவிக்கவேண்டும். அன்று சுநாமி ஆழிப்பேரலை அநர்த்தம் நிகழ்ந்தபோது அவரது முன்னெச்சரிக்கையான செயற்பாடுகளினால் பலரது உயிர்கள் காப்பாற்றப்பட்டது. வழமையாக திருப்பலி நடக்கவேண்டிய ஆலயத்தில் அதனை அன்று நடத்தாமல் வேறு ஒரு ஆலயத்தில் அவர் அதனை நடத்தியதன் மூலம் பலர் உயிர்தப்பினார்கள்.
அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அவர்கள் நினைவுகளாக என்றும் எம்முடனும், எந்த மக்களுக்காக அவர் வாழ்ந்தாரோ அம்மக்களின் நினைவுகளுடன் வாழ்ந்துகொண்டிருப்பார். “ என்று குறிப்பிட்டார்.
( தகவல்: வண.பிதா வசந்தன் அடிகளார் )