மெல்பன் 3 CR தமிழ்க்குரல் வானொலியில் கால் நூற்றாண்டுக்கும் மேல் ஒலித்த குரல்!… முருகபூபதி.
இன்று டிசம்பர் 06
சண்முகம் சபேசன் நினைவரங்கு!
அவுஸ்திரேலியாவில் விக்ரோரியா மாநிலத்தில் மெல்பனை தளமாகக்கொண்டிருந்து இயங்கிய தமிழ்ச்சங்கம், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் புனர் வாழ்வுக்கழகம், மற்றும் 3 CR வானொலி தமிழ்க்குரல் ஒலிப்பரப்புச்சேவை முதலானவற்றில் நீண்டகாலமாக ஈடுபட்டுழைத்திருக்கும் சண்முகம் சபேசன் கடந்த மே மாதம் 29 ஆம் திகதி ( 29 -05 – 2020 ) ஆம் திகதி அதிகாலை மெல்பனில் மறைந்தார்.
மெல்பனில் Fitzroy smith street இலிருந்து 1976 ஆம் ஆண்டு முதல் இயங்கும் 3 CR சமூக வானொலி கலையகத்திற்கு கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேல் வாராந்தம் சென்று தமிழ் ஒலிபரப்பை நிகழ்த்தியவர் சபேசன்.
அவ்வாறு அவர் முக்கியத்துவம் வழங்கிய மற்றும் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் தமிழர் புனர்வாழ்வுக்கழகம். விக்ரோரியா தமிழ்ச்சங்கம், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ் அகதிகள் கழகம், இலங்கை மாணவர் கல்வி நிதியம், அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், பாரதி பள்ளி, கேசி தமிழ்மன்றம் உட்பட பல சமூக அமைப்புகளின் நிகழ்ச்சிகளுக்கும் முன்னுரிமை கொடுத்து ஒலிபரப்பினார்.
அத்துடன், அவுஸ்திரேலியாவில் கலை, இலக்கியம், கல்வி மற்றும் சமூகப்பணிகளில் ஈடுபட்ட ஆளுமைகள் மறைந்தவேளைகளில் அவர்கள் பற்றிய நினைவுரைகளுக்கும் முக்கியத்துவம் வழங்கியவர்.
சபேசன், தமிழ்த்தேசியத்திலும் பேச்சுவார்த்தை மற்றும் ஆயுதப்போராட்டத்தின் ஊடாக தொடர்ந்து ஈழ
விடுதலைப்போராட்டத்தை முன்னெடுத்த வேலுப்பிள்ளை பிரபாகரனிடத்திலும் ஆழ்ந்த நேசம் கொண்டிருந்தவர்.
பதினொரு வருடங்களிற்கு முன்னர், மே மாதத்தில் நேர்ந்துவிட்ட ஈடுசெய்யப்படமுடியாத இழப்புகளினால் கலங்கியிருந்த சபேசனும் 2020 மேமாதம் நிரந்தரமாக விடைபெற்றுவிட்டார்.
2009 கொடுந் துயரத்தை தீவிரமான வாசிப்பிலிருந்து கடந்து செல்வதற்கு முயன்றவர். எனினும் தீராத துயரம் அது. எனதும் இவரதும் நண்பருமான கவிஞர் புதுவை ரத்தினதுரை, இவரை வன்னியில் சந்தித்தபோது எனக்காக கொடுத்தனுப்பிய இயக்கத்தின் தமிழ்த்தாய் வெளியீடான நினைவழியா நாட்கள் கவிதைத் தொகுதியை எடுத்துவந்து தந்ததுடன், நண்பர் யாதவன் ஊடாக பெற்ற புதுவையின் நேர்காணல் பதிவையும் 3 CR வானொலி தமிழ்க்குரலில் ஒலிபரப்பினார்.
“ யு.கே.க்குப்போக யூ.ரி.ஏ ஏறாமல் ஏ.கே. தூக்கி இறந்தவர்கள் எத்தனைபேர்….. இங்கே பற்பலர் பேசிக்களித்தனர் எம்நாடு எரிகையில் ஓடிப்பறந்தனர் சங்கமாடிய தமிழ் எனப்பேசிய தம்பிமார் எல்லாம் கடலைக்கடந்தனர் “
என்று புலம்பெயர்ந்தவர்கள் பற்றி கவிதை பாடிய கவிஞர் புதுவை ரத்தினதுரை எழுதிய புலுனிக்குஞ்சுகளும் பூவரசம் வேலியும் என்ற நூலையும் புலம்பெயர்ந்த தமிழர்கள் வெளிநாடுகளில் வெளியிட்டு வைத்தபோது, மெல்பனிலும் அந்த நூலின் வெளியீட்டு விழாவை முன்னின்று நடத்தியவர்தான் சபேசன்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் குழு வௌியிட்ட “ இஸ்லாமியத் தமிழரும் தமிழீழ விடுதலைப் போராட்டமும் “ என்ற நூல் எனக்கு கிடைத்தபோது, அதுபற்றிய எனது வாசிப்பு அனுபவத்தையும் தனது வானொலி ஒலிபரப்பில் சபேசன் சேர்த்துக்கொண்டார். அந்த நூலை தமிழீழ விடுதலைப்போரில் முதற் களப்பலியான இஸ்லாமியத் தமிழ் வீர மறவன் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் லெப்டினன்ட் ஜூனைதீனுக்கு சமர்ப்பணம் செய்திருந்தனர்.
அக்கட்டுரை பின்னர் கொழும்பு தினக்குரல் வார இதழிலும் வெளியானது. மூத்த இலக்கிய ஆளுமைகளான, மகாகவி பாரதி, புதுமைப்பித்தன், கண்ணதாசன், ஜெயகாந்தன், அகிலன், தி. ஜானகிராமன், எஸ். பொன்னுத்துரை, டொமினிக்ஜீவா, இரசிகமணி கனகசெந்திநாதன், கவிஞர் அம்பி முதலானோரின் சுவாரசியமான
மறுபக்கங்கள் குறித்து நான் எழுதியிருந்த தொடரையும் தனது 3 CR தமிழ்க்குரலில் அவரே வாசித்து ஒலிபரப்பினார்.
சபேசன், தமிழ்நாட்டின் தமிழ் உணர்வாளர்கள் பேராசிரியர் சுப வீரபாண்டியன், பழ. நெடுமாறன், ஓவியர் புகழேந்தி, கவிஞரும் திரைப்பட வசன கர்த்தாவுமான அறிவுமதி, இயக்குநர் தங்கர்பச்சான், கவிஞர் வைரமுத்து ஆகியோருடனும் நட்புறவு கொண்டிருந்தவர்
மெல்பனுக்கு சுப. வீரபாண்டியன், ஈழவேந்தன், உலகத் தமிழர் பேரவையைச்சேர்ந்த வண. பிதா இமானுவேல் அடிகளார் உட்பட பல தமிழ் உணர்வாளர்கள் வருகை தந்த சந்தர்ப்பங்களில் சபேசனின் இல்லத்தில் அன்பான உபசரிப்பில் திழைத்திருக்கிறார்கள்.
அரசியலில் கலை, இலக்கியத்தில் மாற்றுக்கருத்துக்கொண்டவர்களுடனும் சிநேகபூர்வமாக பழகும் மென்மையான இயல்புகளையும் தன்னகத்தே கொண்டிருந்தவர் சபேசன்.
நவீன தமிழ் இலக்கியத்தில் இவருக்கிருந்த தீவிர நாட்டத்தினால், தரமான இலக்கியச் சிற்றிதழ்களையும் நூல்களையும் தருவித்து படிப்பவர். சென்னையில் நடைபெறும் புத்தகத் திருவிழாவுக்கும் சென்று வந்து தனது அனுபவங்களை எம்முடன் பகிர்ந்துகொள்வார்.
இவரது வாசிப்பு அனுபவத்தின் தீவிரம், இவரை புதுச்சேரியில் வதியும் கரிசல் இலக்கிய வேந்தர் என வர்ணிக்கப்படும் மூத்த படைப்பாளி கி. ராஜநாரயணன் அவர்களையும் தேடிச்சென்று உறவாட வைத்தது.
ஈழத்து இலக்கியத்தின் மீதும் புகலிட இலக்கிய முயற்சிகள் குறித்தும் ஆர்வம் காண்பிக்கும் கி. ரா. அவர்கள், சபேசனு டனான அந்த சந்திப்பிற்குப்பின்னர், தீராநதி இதழில் ஒரு கட்டுரையும் எழுதினார். அதற்கு Cover Story முக்கியத்துவமும் வழங்கப்பட்டிருந்தது.
சபேசனின் வானொலி உரைகள் ஏராளமாக அவரது சேகரிப்பில் இருக்கின்றன.
சில கட்டுரைகள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. மூத்த சட்டத்தரணி நடேசன் சத்தியேந்திரா முதல், முன்னாள் இலங்கை வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மண் கதிர்காமர் வரையில் சபேசனின் சில உரைகள் தமிழிலும் ஆங்கில மொழிபெயர்ப்பூடாகவும் சென்றிருக்கும் செய்திகள் பலரும் அறியாதது.
குறிப்பிட்ட உரைகளை தொகுத்து நூலாக வெளியிடவேண்டும் என்ற கனவையும் நீண்டநாட்களாக மனதில் சுமந்துகொண்டிருந்தவர்.
2020 ஆம் ஆண்டு பிறந்ததும் அந்த வேலைகளை ஆரம்பிக்கும் எண்ணத்திலிருந்தவர். எதிர்பாராமல் சுகவீனமுற்றார். கடந்த மேமாதம் 29 ஆம் திகதி அதிகாலை காலன் அவரை கவர்ந்து சென்றான்.
அவரது வாழ்வையும் பணிகளையும் நினைவுகூரும் அரங்கம் இன்று 06 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இணையவழி காணொளி ஊடாக ஏற்பாடாகியுள்ளது. இந்நிகழ்வை சபேசனின் நண்பர்கள் – எழுத்தாளர்கள் நடேசன், முருகபூபதி ஆகியோர் ஏற்பாடுசெய்துள்ளனர்.
இக்காணொளி அரங்கில் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன், சுந்தரமூர்த்தி, நவரத்தினம் இளங்கோ, எழுத்தாளர் பாடும்மீன் ஶ்ரீகந்தராசா, ஜூட் பிரகாஷ், மோகன் குமார் மற்றும் திருமதி சிவமலர் சபேசன் ஆகியோரும் சபேசனின் பிள்ளைகள் மற்றும் உறவினர்களும் உரையாற்றுவர்.
இன்று 06 ஆம் திகதி மாலை 7.00 மணி – அவுஸ்திரேலியா – மெல்பன் நேரம்
இந்தியா – தமிழ்நாடு நேரம் பகல் 1.30 மணி
அய்ரோப்பா – நேரம் காலை 8.00 மணி
காணொளி இணையவழி ZOOM ID https://us02web.zoom.us/j/84094440988?pwd=Q2lCZ2x0QWc2RllKSS96SG5uRXNCQT09
————0——–