ஒருநாள், சங்கப் பாடல் ஒன்றை இணையத்தில் தேடியபோது, அதன் அருமையான ஆங்கில மொழிபெயர்ப்பு தற்செயலாகக் கிடைத்தது. அதன் நேர்த்தியும் அழகும் என்னைப் பெரிதும் கவர்ந்தன.
மொழிபெயர்த்தவர், வைதேகி ஹெர்பர்ட். இந்திய, அமெரிக்கப் பெண்மணி. இவர், கடந்த பல வருடங்களாக முழுநேரப் பணியாகவே சங்கப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வருகிறார் என்பதை அறிந்தேன். ஒரு பல்கலைக்கழகம் செய்யவேண்டிய வேலையை, 2,000 வருடங்களாக ஒருவருக்குமே தோன்றாத இந்த மேன்மையான பணியை, தனி ஒருவராகச் செய்துகொண்டிருக்கிறார் என்பதை அறிந்தபோது என்னை வியப்பு விழுங்கியது.
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய 18சங்க நூல்களில் 12 நூல்கள் மொழிபெயர்க்கப் பட்டுவிட்டன. சில அச்சில் உள்ளன. இவருடைய அர்ப்பணிப்பும், காதலும், உழைப்பும் என்னைப் பிரமிக்கவைத்தன.
சமீபத்தில் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கிய மொழிபெயர்ப்பு விருதை ஏற்பதற்கு டொரொன்டோ வந்திருந்த வைதேகியைச் சந்தித்தேன். அவரிடம் பேசியதில் இருந்து…
” மருத்துவத் துறையில் மேலாளராகப் பணியாற்றிய உங்களுக்கு எப்படி சங்க இலக்கியத்தில் இத்தனை ஈடுபாடு?”
”நான் ஆங்கிலப் பள்ளியில் படித்திருந்தாலும் எனக்கு இயற்கையாக தமிழில் அதிக ஆர்வம் இருந்தது. கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்த முனைவர் ஜார்ஜ் ஹார்ட்டின் நட்பு, பல ஆண்டுகளுக்கு முன் கிடைத்தது. அவர் சங்க இலக்கியப் பாடல்களை மேற்கோள் காட்டி பொருளையும் சொல்லி அசத்துவார். அப்போதெல்லாம் ‘சங்க நூல்களை முறையாகக் கற்றுத்தேற வேண்டும்’ என்று நினைத்துக்கொள்வேன். ஆனால், வேலை, குடும்பம் என்று அதற்கு வாய்ப்பே இல்லாமல் போனது. காலம் கிட்டும் வரை காத்திருந்தேன். இப்போது என் முழு நேரப் பணியே இதுதான்.”
”சங்கப் பாடல்களில் உங்களைக் கவர்ந்த பொதுவான அம்சம் என்ன? எது உங்களை திரும்பத் திரும்பப் படிக்கவைத்து மொழிபெயர்ப்பு வரை உந்தித் தள்ளியது?”
”நான் இயற்கையை நேசிப்பவள். சங்கப் பாடல்களில் இயற்கையின் அத்தனை வசீகரங்களும் சொல்லப்பட்டு உள்ளன. அரசனுடைய வீரத்தைச் சொல்வதானாலும், பெண்களின் மனநிலையைச் சொல்வதானாலும் அது இயற்கையின் ஊடாகத்தான் சொல்லப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு பாட்டிலும் ஏதோ ஒருவகையில் இயற்கை வந்து சேர்ந்துகொள்ளும். இப்போது சூழலியல் பற்றி பேசுகிறோம். ஆனால், நமது மூதாதையர் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு பாடல்களில் கிடைக்கும் உவமைகளே சான்று.
நற்றிணை 13 -ல்
‘ஏனல் காவலர் மா
வீழ்த்துப் பறித்த பகழி
அன்ன சேயரி
மழைக் கண்’ என்ற வரிகள் வரும். ‘காவலர்களின் அம்புகள் குத்தி விலங்கின் உடம்பில் ரத்தம் வடிவதுபோல சிவந்த கண்கள்!’ என்னே ஓர் உவமை பாருங்கள்!
புறநானூறு 237. பாடியவர் பெருஞ் சித்திரனார். பாடப்பட்டோன், இளவெளிமான். மூத்த வெளிமான் இறந்தபோது மனைவியர் மார்பிலே அடித்து அழுகின்றனர். அதனால் வளையல்கள் உடைந்து கீழே சிதறுகின்றன.
‘ஊழின் உருப்ப எருக்கிய
மகளிர் வாழைப் பூவின்
வளை முறி சிதற’ என்கிறார் புலவர். ‘நெஞ்சிலே அடித்து அழும் பெண்களின் உடைந்த வளையல்கள் வாழைப் பூக்கள் போல நிலத்தில் சிதறிக் கிடக்கின்றன!’ சோகத்தைச் சித்திரிக்கும்போதும் எத்தனை நயமான உவமை!
இந்த உச்ச நிலையை எட்ட, அதற்கு முன் எத்துணை நூற்றாண்டுகள் தமிழ் மொழி வளர்ந்திருக்க வேண்டும்! இப்படி உயர்ந்து நிற்கும் பழைய இலக்கியம், உலகத்தில் வேறு எங்கும் கிடைக்காது. ஆனால், நம்மிடம் 2,000 வருட காலமாக இருக்கிறது. அதன் அருமையை நம்மில் பெரும்பாலானவர்கள் உணரவில்லை!”
”அந்தப் பொக்கிஷங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் எண்ணம் எப்போது உண்டானது?”
”சங்க இலக்கியங்களைப் பயில, தற்போது சென்னை இராணிமேரி கல்லூரியில் உதவிப் பேராசிரியராக இருக்கும் முனைவர் இரா.ருக்ம ணியை அணுகினேன். எளிய உரையுடன் 103 வரிகள் கொண்ட முல்லைப்பாட்டைத் திருத்தமாகக் கற்றுக்கொடுத்தார். நல்ல மாணவியாக ஒவ்வொரு வார்த்தைக்கும் பொருள் கேட்டு குறித்துவைத்து கற்றுக்கொள்ள ஆரம்பித்தபோதுதான், தொன்மையான சங்க இலக்கியத்தின் அழகும் ஆழமும் புரியத் தொடங்கின. எனக்கு ஏற்பட்ட வியப்பை சொற்களால் விளக்க முடியாது.
இத்தனை பெரிய செல்வத்தை நம் மூதாதையர் நமக்காக விட்டுப் போயிருக்கிறார்கள். இதை எல்லோருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது. முதலில், நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது ‘முல்லைப்பாட்டு’ம் ‘நெடுநல்வாடை’யும்தான். அவற்றை பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட்டுக்கு அனுப்பி வைத்தபோது அவருடைய பாராட்டுதல் கிடைத்தது. அதன் பிறகே மற்றவற்றையும் மொழிபெயர்க்கும் நம்பிக்கை வந்தது!
என்னுடைய பதிற்றுப்பத்து மொழிபெயர்ப்பை, டோக்கியோ பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் டாகனோபு டாகாஷி (Dr.Takanobu Takahashi) பாராட்டியுள்ளார். இளம் கல்வியாளர்கள் பலரும் இணையதளத்தின் மூலம் என்னுடன் தொடர்புகொண்டனர் (www.sangamtran-slationsbyvaidehi.com). விலங்கியல் அறிஞர் முனைவர் பி.ஜெகநாதன், வான இயல் அறிஞர் முனைவர் ரமேஷ் கபூர், விலங்கியல் அறிஞர் முனைவர் சிந்து ராதாகிருஷ்ணா… போன்ற பல ஆராய்ச்சியாளர்கள் தமது ஆராய்ச்சிகளுக்காக என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள். இந்தக் கால நவீன ஆராய்ச்சிகளுக்கு உதவும் பல கூறுகள், அந்தக் கால தமிழில் பொதிந்திருக்கின்றன!”
”நல்ல அட்டையில், தரமான தாளில், நல்ல அச்சுடன் உங்கள் மொழிபெயர்ப்பு நூல்கள் கிடைக்கின்றனவே. இது எப்படிச் சாத்தியமானது?”
”முனைவர் ருக்மணிக்கு அழகியல் உணர்வு அதிகம். ஆதலால், நூலின் அட்டை, அமைப்பு, தாளின் தரம், யாவும் சிறப்பாக அமைய இருவரும் இணைந்து செயல்படுகிறோம். சென்னையில் உள்ள கொன்றை பதிப்பகத்தின் மூலம் வெளியிடுகிறோம். என் பணத்தில்தான் நூல்களை அச்சிட்டு வெளியிடுகிறேன். அமெரிக்காவில் மெக்சிகனில் உள்ள திருமூர்த்தியின் நிறுவனம் இந்த வேலையை ஏற்று இருக்கிறது. புறநானூறு, குறைந்த விலையில் சிறந்த பதிப்பாக அமெரிக்காவில் வெளிவந்திருக்கிறது. சங்க நூல் மொழிபெயர்ப்புகளையும் அந்த நிறுவனம் மூலம் மின்நூல்களாகக் கொண்டுவரும் திட்டம் இருக்கிறது.
எளிய ஆங்கிலம் மூலம் சங்க நூல்களை இளம் தலைமுறையினருக்கு அறிமுகம் செய்வதற்கு இது நல்ல வாய்ப்பு. ‘சங்க இலக்கியம்’ என்னும் பெரும் செல்வத்தை இளைய தலைமுறையினருக்குக் கடத்துவது மட்டுமே மிக முக்கியமானது
நன்றி: விகடன்.
முகநூல் பதிவு: Kandasamy R