Featureமுகநூல்

சேந்தனின் நினைவுகள்!…. சதாசிவம் ஜீவா.

சேந்தனின் நினைவுகள் மட்டும்தான் இனி. பழகியவர்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும் அவருடைய சுவையான சுவாரசியமான பேச்சுக்கள் கதைகள். பல்கலைகழகத்தில் பொறியியல் மாணவனாக பயின்றகாலத்தில் கவிதைகள் படைப் பதில் ஆர்வமாக இருந்தார். அதனால் அவருக்கு முற்போக்கு இலக்கிய வியாபாரிகள் மத்தியில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதை முற்றாக தவிர்த்தார். அன்றைய காலகட்டத்தில் பேராசிரியர் இவருடைய திறமையை அறிந்து இவரைத் தேடி வீட்டுக்குப் போயிருந்தார். வீட்டுக்குள் இருந்த சேந்தனிடம் தந்தை பண்டிதர் வீரகத்தி சேதியைச் சொன்னார். சேந்தன் அந்த பே(ர்) ஆசிரியரை சந்திக்க விரும்பவில்லை. அதற்கு தந்தையார்,
‘பேராசிரியரடா’
உறுதியாக மறுத்துவிட பேராசிரியர் நடையைக் கட்டினார். ஏனெனில் சேந்தனுக்கு பேராசிரியரின் எந்தவொரு நிலைப்பாட்டிலும் உடன்பாடிருந்ததில்லை. இதே பேராசிரியருக்கு வால்பிடித்து விரிவுரையாளராக கவிஞராக விமர்சகராக இலக்கிய கர்த்தாவாக உருவகித்துக்கொண்டவர்கள் பலர்.
சேந்தன் கொள்கையை பிடிக்கவுமில்லை, கோட்பாடுகளை தூக்கிக்கொண்டு அலையவுமில்லை. ஆனால் தான் மதித்த மனிதத்துக்காக நேர்மையாக கடைசிவரை வாழ்ந்தார்.
பாசிசத்தின் பிடியிலிருந்து தப்பித்து கொழும்பு செல்வதற்காக சிலருக்கு உதவியதற்காக விடுதலைப் புலிகளால் கைதுசெய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறையிலிருந்ததர். அப்போது நடந்த சம்பவங்களை எம்முடன் பகிர்ந்துகொண்டார். அதில் ஒன்று, சேந்தனுடன் கம்யூனிஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் இருந்தார். ஒருநாள் இவர்களை விசாரணை செய்யும் புலி ஒன்று கன்னம் வீங்கி, ஒருபக்க கண்ணும் வீங்கியபடி வந்தார். கம்யூனிஸ்ட்காரர்:
‘என்ன தம்பி கன்னம், கண்ணெல்லாம் வீங்கிக்கிடக்கு’
என்று அன்பாகவும் ஆதரவாகவும் வினாவினார். அதற்கு அந்தப் புலி:
‘பல்லுக்கொதி’
என்றான். உடனே கம்யூனிஸ்ட்காரர்:
‘ஐயோ தம்பி உப்பிடி விட்டுட்டு இராதையும். உடன டொக்டரிட்ட கொண்டே காட்டும் பேந்து மூளையைப் பாதிச்சு ஆபத்தில முடிஞ்சுபோம்’
என்றாராம். சேந்தன் கொடுப்புக்க சிரிச்ச சிரிப்பு இப்பவும் கண்ணுக்குள்ள.
சேந்தனை நான் முதல் முதலில் சந்தித்தது கொழும்பில்தான். இதே கம்யூனிஸ்டின் மகளின் சமத்திய சடங்கில்தான். இதற்கு முதல் சேந்தனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். சந்தித்தது இங்குதான். ‘இவர்தான் அன்ரனின் மச்சான்’ என யாரோ அறிமுகப்படுத்திவைக்க, என்னருகில் வந்தவர்,
‘தம்பி எனக்கு மண்டையால போகுது சாரயத்த வாத்தால்தான் மனம்கொஞ்சம் ஆறும்’
ஏன இருவரும் கொள்ளுப்பிட்டியிலுள்ள சாரயக்கடைக்குப் போனோம். அது பூட்டிக்கிடந்தது. காலை என்பதால் கடை திறக்கும் வரை வாசலிலேயே தவம் கிடந்து, சொற்பண பாணத்தை வேண்டிக்கொண்டு சாமத்திய சடங்கு ஒரு பக்கமாக நடக்க நாமும் ஒரு பக்கமாக ஒதுங்கினோம்.
இறுதியாக இலங்கை சென்றிருந்தபோது தொலைபேசியில் அழைத்து நான் வந்திருக்கிறேன் அன்ரன் தொடர்பான ஒரு நூலை வெளியிடப்போகிறேன். அன்ரனைப் பற்றி ஏதாவது எழுத்தித் தருவீர்களா? எனக் கேட்டேன்.
‘அது ஒன்றும் பிரச்சினையில்லை. நீர் வீட்ட வாருமன்’
என்றார். வீட்டுக்குப் போனேன் அவர் சொல்ல சொல்ல எழுதிக்கொண்டு வந்தேன். கரவெட்டியிலிருந்து முச்சக்கரவண்டியில் யாழ்ப்பாணம் நோக்கி பயணம். அதற்குள் ஒரு ஆறேழு தடைவைகள் தொலைபேசியில் அழைத்து, ‘அந்த சொல்ல எடுத்துப்போட்டு இந்த சொல்லப் போடன அந்த வாக்கியம் முடிவில முற்றுப்புள்ளி போடாத கமாவ போடு’ என தொடர்ந்து, அடுத்த நாள் நான் கணனியில் தட்டச்சு செய்துகொண்டிருக்க தொலைபேசியில் அழைத்து திருத்தங்களை சொல்லிக்கொண்டிருந்தார். அப்பொழுதான் எனக்கு ஞாபகம் வந்தது இவர் கவிஞன் என்று.
அந்த நூல் தொடர்பாக நாலைந்து வருடங்களுக்கு முன்னரே ஒரு சிலருடன் கதைத்திருந்தேன். அதிலொருவர் அந்நேரம் ‘அன்ரனுக்கு இதுகூட செய்யேலாட்டி பிறகென்ன கட்டாயம் செய்வம். நீர் எப்ப வெளியிடப்போறீர் என்று சொல்லும் நான் எழுதித் தாறன்’ என்றவர் அந்த நூல் வெளியீட்டை கனடாவில் செய்வதற்கு பல தடைகளையும் தடங்கல்களையும் செய்தது மட்டுமல்லாமல், புலியிசம் சொல்லும் அதே குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்தார்.
ஆனால் ஒரு இசங்களையும் தூக்கிப்பிடிக்காத சேந்தன் நான் கேட்ட மறுநாளே ஒரு மனிதனுடன் பழகிய நட்புக்காக அது அநீதியாக நடந்தேறிய அவலமான கொலை அவ்வாறான ஆயிரம் ஆயிரம் கொலைகளை நாலுபேருடன் பகிர்ந்துகொள்ள வரலாற்றில் பதிய வேண்டும் என்ற வைராக்கியத்தோடு அன்ரனுக்கான கட்டுரையை தந்தார்.
ஓவ்வொருவரும் நடந்துகொள்ளும் முறையிலேயே மனங்களில் உயர்வையும் தாழ்iவும் ஏற்படுத்திக்கொள்கிறார்கள். சேந்தனின் நேர்மையும் எளிமையும் என் மனதில் மட்டுமல்ல அவருடன் பழகிய அத்தனை பேருடைய மனங்களில் உயர்ந்தே நிற்கும்.
‘தம்பியவ உவன் காரில திரியிறான் இப்ப உவன பொசுக்கிப்போடனும் விட்டியளோ பிறகு உவன் ஆமக்காறில திரிவான் அப்ப சந்தர்ப்பமே கிடைக்காது’
புரிஞ்சவன் புரிஞ்சுக்கோ, புரியாதவன் புரிஞ்சவன்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோ!
– சதாசிவம் ஜீவா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.