நாவல்கள்

கல்…புல்…காகம்…36…(நாவல்)…..சங்கர சுப்பிரமணியன்.

காலங்கள் உருண்டோடின. மனோன்மணி மதுரைக்கு வந்தபின் கொஞ்சம் கொஞ்சமாக கணவன்
உடல்நிலையில் நல்ல மாற்றங்கள் உருவாவதைக் கண்டாள். அத்தோடு மனநிலையிலும்
படிப்படியாக முன்னேற்றம் தெரிந்தது.

வசந்தம் மலர மரங்கள் எல்லாம் பூத்துக்குலுங்கின. இதமான தென்றல் காற்று மிதந்துவந்து
மனோன்மணியின் உடலில் மோதிச்சென்றது. மாமனார் மாமியாரும் முன்பிருந்ததைவிட
இன்னும் அவளிடம் அன்பாக நடந்தனர். அவள் கணவனும் பூரணகுணம் அடைந்தான். பழையபடி
பேச்சும் நடையும் வந்துவிட்டது. செயற்கைக்கால் பொருத்தியிருக்கிறதென்றோ இதற்குமுன்
மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தான் என்றோ யாரிடம் சொன்னாலும் யாரும் நம்பியிருக்க
மாட்டார்கள். இதெல்லாம் இரண்டு ஆண்டுகளில் நடந்து முடிந்ததென்றாலும் யாரும் நம்பவே
மாட்டார்கள். நல்ல சூழ்நிலையும் நல்ல ஆறுதலான கவனிப்பும் அத்தோடு எப்படியும் குணமடைய
வேண்டும் என்ற மனநிலையும் ஏற்பட்டுவிட்டால் எப்படிப்பட்ட சவாலிலும் இருந்து மீண்டு விடலாம்
என்பதற்கு குணசேகரனே எடுத்துக்காட்டு.

இந்த மூன்று ஆண்டுகளில் என்னவெல்லாமோ நடந்து வாழ்க்கை எப்படியெல்லாமோ திசைமாறி
திரும்பவும் நேர்கோட்டில் செல்லுமென்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.  அவர்களது அன்பு
மகன் மனோகரன் இப்போது மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். குணசேகரனும் திரும்பவும்
பணியில் சேரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டான். அவன் பார்த்து வந்த வட்டாட்சியர் பதவிக்கு
தற்காலிகமாக அமர்த்தப்பட்டவரின் பதவிக்காலம் இன்னும் சிலமாதங்களிலேயே முடிவடைவதால்
அவ்வேலையில் சேரலாம் என்ற முடிவுக்கு வந்தான்.

மனோகரன் இன்னும் பள்ளியில் இருந்து வரவில்லையா? என்று கேட்டுக்கொண்டே வாசலில்
விற்றுக் கொண்டிருந்த தள்ளுவண்டிக்காரனிடம் நாளைக்கு சமையலுக்கு வேண்டிய காய்கறிகளை
வாங்கிவிட்டு வீட்டினுள் நுழைந்த குணாவின் அம்மா கேட்டாள்.

“வரக்கூடிய நேரம்தான் அத்தை, மாமா அவனை அழைத்துவர மாமா அப்போதே சென்றுவிட்டார்கள்.
உங்கள் மகன்தான் போய்க்கூட்டி வருகிறேன் என்றார். அவர் எவ்வளவு வற்புறுத்தினாலும் மாமா
நல்லா ஓய்வெடுத்துக்கொள் என்று சொல்லிவிட்டு அவரே சென்று விட்டார்.” என்றாள் மனோன்மணி.

“அவர் கவலை அவருக்கு. மகன் எப்படியோ தப்பி பிழைத்து குணமாகி இப்பதான் ஒருவழியா
நல்லா இருக்கான். இன்னும் கொஞ்சநாளில் பழையமாதிரி வேலைக்கும் போய்விடுவான். அதுவரை
இன்னும் ஓய்வெடுத்து உடம்பை நல்லபடியாய் பார்த்துக் கொள்ளட்டும் என்ற எண்ணமே அவரை
பேரனை அழைத்துவர சென்றிருக்கிறார்.”

மாமியாரும் மருமகளும் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போதே தாத்தாவும் பேரனும் வந்து
சேர்ந்தனர். வந்த கணவரிடம் அப்போதே சென்ற தாங்கள் இங்கே பக்கத்திலிருக்கும் பள்ளியிலிருந்து
மனோகரனை அழைத்துவர ஏன் இவ்வளவு நேரம்? அந்த விபத்து நடந்ததிலிருந்து வெளியில்
சென்றவர்கள் வீடு வரதாமதித்தால் என்னவெல்லாமோ எண்ணி கவலைப்பட வைக்கிறது என்றாள்.
அதற்கு அவரோ பள்ளியில் தாமோதரன் என்ற ஆசிரியரிடம் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்ததே இந்த
தாமதத்திற்கு காரணம் என்று சொன்னாலும் கேட்காமல் அப்படி என்ன அந்த ஆசிரியரிடம்
பேசிக்கொண்டிருந்தீர்கள் என்று கேட்க அவரும் விளக்கமாகச் சொன்னார்.

“சரி, நீ கவலைப்படுவதிலும் நியாயம் இருக்கு. நம்ம மனோகரன் விளையாட்டில் ரெம்பவும் ஆர்வம்
காட்டுகிறானாம். அதனால் அவனை பெரிய விளையாட்டு வீரனாய் மாற்றிவிடுங்கன்னு சொல்றாரு”
என்றார்.

“அப்படியா? நீங்க என்ன சொன்னீங்க?”

“நான் என்னத்த சொல்லபோறேன். அவங்க அப்பனே வட்டாட்சியாளர். அவ்ன் தன் மகனை மாவட்ட
ஆட்சியாளராத்தான் ஆக்குவான். சரி பார்ப்போம். இப்ப அவன் சின்ன பையன். வளர்ந்து என்ன
ஆவான்னு யாருக்கு தெரியும். அத அப்புறம் பார்க்கலாம்னு சொல்லிட்டு வந்தேன்.”

இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போதே வாசலுக்கு வந்த குணசேகரன் என்ன பேரனை
கூட்டிக்கிட்டு உள்ள வராமல் அங்கே என்ன பட்டிமன்றம் என்று கேட்க அவர்களும் பட்டிமன்றமே
என்றனர். அதற்கு அவனும் அடடே சும்மாதான் கேட்டேன். உண்மையிலே பட்டிமன்றமா அப்படி என்ன
பட்டிமன்றம் என்று கேட்டான். அதற்கு குணசேகரனின் அப்பா,

“குணா, பள்ளிக்கூடத்தில் மனோகரனின் ஆசிரியர் அவன் விளையாட்டில் ஆர்வம் அதிகமாக
காட்டுகிறானாம். அதனால் அவனை சிறந்த விளையாட்டு வீரனாக ஆக்குங்கள் என்று சொல்கிறார்”
என்றார்.

(தொடரும்)

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.