செங்கதிரோனின் “யாவும் கற்பனையல்ல” நூல் விமர்சனம்… பாவேந்தல் பாலமுனை பாறூக்
ஈழத்தின் தமிழ்ச் சிறுகதைச் செல் நெறியில் புதிய மாற்றத்தை அவாவி நிற்கும் செங்கதிரோனின் “யாவும் கற்பனையல்ல”
‘யாவும் கற்பனையல்ல’ செங்கதிரோன் என்ற புனைபெயரில் எழுதிவரும் த.கோபாலகிருஸ்ணன் பிரசவித்திருக்கின்ற (2023 செப்டம்பர் ), 80 பக்க சிறுகதை நூல். 13 சிறுகதைகள் நூலில் இடம்பெற்றுள்ளன.
செங்கதிரோன் ஆறுதசாப்த கால எழுத்தனுபவம் மிக்கவர்.மட்டக்களப்பில் இருந்து வெளிவந்த “செங்கதிர்”என்ற கலை இலக்கிய மாசிகையின் பிரதம ஆசிரியராகச் செயற்பட்டு , ஐந்து ஆண்டுகள்(2008-2013 ) 61 பல்சுவை இதழ்களை வெளியிட்டவர், கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் “ஓலை” என்ற இலக்கிய மடலின் ஸ்தாபக ஆசிரியராக இலக்கியப் பணிபுரிந்தவர். “கண்ணகி கலைக்கூடல்” என்ற அமைப்பின் தலைவராக 2011 முதல் இயங்கி 11 பெருவிழாக்களை நடத்தியவர் என்று இலக்கிய உலகில் தடம் பதித்திருப்பவர். ஏற்கனவே, தமிழர் அரசியலில் மாற்றுச் சிந்தனைகள்- (கட்டுரை -2016) விளைச்சல் ( குறுங்காவியம் –2017)சமம் (உருவகக் கதைகள்- 2022) என்ற நூல்களை அவர் தந்திருந்த போதிலும் அவரின் முதலாவது சிறுகதைத் தொகுதியாக வெளிவந்திருப்பது இந்நூலே யாகும்.
சிறுகதைகளை எழுதுபவர்கள் அக்கதைகள் நிறைவுக்கு வந்தவுடன் “யாவும் கற்பனை”என்று அடைப்புக்குள் போட்டு வைப்பது வழக்கம். எழுத்தாளன் தனக்கு வகுத்துக் கொண்ட முற்கூட்டிய பாதுகாப்பு அரணாக அதனைச் சொல்வர்.
ஆனால், அதற்கு மாற்றமாக ‘யாவும் கற்பனையல்ல’ என்ற
தலைப்பிட்டு, துணிச்சலோடு, கதைகளை வடிவமைத்திருக்கின்றார் கதைஞர் செங்கதிரோன்.யதார்த்த பூர்வமானவையாகவும், சமூக விமர்சனங்களாகவும் கதைகள் அமைந்து வந்திருக்கின்றன. செங்கதிரோன் “இஸங்களயோ”,மேற்குலக நாட்டுக்
கோட்பாடுகளையோ “வரித்து”க்கொண்டு இலக்கியம் படைக்க வந்தவரல்லர்.
“நல்ல முற்போக்கான சிறுகதை ஒன்றினை படைப்பதற்கு எந்த “இஸம்களும் “தேவையில்லை எந்த வாதங்களும் அவசியமில்லை. மனித நியாயமும்,அந்த நியாயத்தை மனதார விசுவாசிக்கின்ற மனிதநேய உள்ளமும் ,அந்த நியாயத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற தர்மாவேசமும் ,அந்த வெளிப்பாட்டை இலக்கியமாக்கும் எத்தனமும்,அதற்கேற்ற மொழிப் புலமையும், கற்பனை வளமும், படைப்பாற்றலும் இருந்து விட்டால் ஒரு படைப்பாளி நோக்காடு உறுவதும், அந்த நோக்காடு சிறந்ததொரு இலக்கியத்தை பிரசவிக்கும் என்பதும் தானாகவே நிகழும். இதற்கு எந்த மேற்கு நாட்டுக் கலை இலக்கிய கோட்பாடுகளும் வழிகாட்டலும் தேவையில்லை என்ற உறுதிப்பாட்டோடு தனித்தனமை வாய்ந்த சிறுகதைகளை எழுதி வருபவர் அவர். அவர் தந்திருக்கின்ற நூலில்,
“துரோகி” என்றொரு கதை.
இலங்கையில் 1983 ஜூலை இனக் கலவர காலம் .வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுப்புக் காவலிலும் விளக்கமறியலிலும் வைக்கப்பட்டிருந்த தமிழ்க் கைதிகள் படுகொலை செய்யப்படுகின்றார்கள்.
மட்டக்களப்பில் செங்கலடி பிரதான வீதியில் இருந்து பத்து கிலோமீட்டர் தூரத்திலுள்ள “முந்தன் கிரமத்து வெளியி”லுள்ள நீர்ப்பாசன திணைக்களத்தின் வேலைத்தளமொன்றில் கனரக வாகனங்கள் வேலைக்கமர்த்தப் பட்டிருக்கின்றன. இவ்வாகனங்களின் ‘ஆப்பரேட்டர்களும் ,கிளினர்களும்’ வெளிமாகாணங்களைச் சேர்ந்த சிங்களவர்கள். அந்த வேலைத்தலம் பொறியியல் உதவியாளரான கதை சொல்லியின் பொறுப்பில் இருக்கிறது. வேலைக் கமர்த்தப்பட் ட அவர்களுக்கு, தமிழர்களால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாதவாறு அவசரமாகச் செயற்பட்டு அவர்களை மட்டக்களப்பில் இருந்து பாதுகாப்பாக அனுப்பிவைத்து விடுகிறார் பொறியியல் உதவியாளரான கதை சொல்லி..
“எனது கடமையை சரிவர செய்த நிம்மதியுடன் அன்று இரவு நன்றாக தூங்கினேன். விடிந்ததும் தெரியவில்லை கண்விழித்த போது என்னை காணவெனன்று காலை 6 மணிக்கே வந்து காத்திருந்தான் முந்தன் குமாரவெளி வேலைத்தல காவலாளி கணபதிப்பிள்ளை . அன்று இரவு 10, 12 தமிழ் பொடியன்கள் கத்தி, கோடரி, இரும்பு கம்பிகள். பொல்லுகளுடன் அங்கு வேலை செய்த சிங்கள ஆட்களை தேடி வந்ததாக செய்தி சொன்னார் .
அலுவலகம் சென்றபோது என்னை வாசலுக்கு வந்து எதிர் கொண்டார் எங்கள் அலுவலகக்
கணக்காளர் சிற்றம்பலம் . குட்மோனிங் மிஸ்டர் சிற்றம்பலம் ‘ என்றேன். ”
‘குட்மார்னிங் கிடக்கட்டும் . நீர்பார்த்த வேலை சரிதானோ’ என்றார் ஒரு எரிச்சலுடன்.
“ஏன்என்னநடந்தது ” என்றேன
“எங்கடாக்கள வெலிக்கடையில் “சீ”னாக்கள் சாக்கொண்டு போட்டினம் நீர் என்னெண்டா காணும் அவைகளை காப்பாற்றி நேற்று அவருடைய ஊருக்கு அனுப்பி போட்டில்லோ வாறீர். நீ ரெல்லாம் தமிழினத் துரோகி ஐசே”
என்றார்.
பதில் சொல்ல விரும்பாமல் அலட்சியம் செய்து விட்டு கடந்து சென்று விட்டேன்.
1983 ஜூலை 27 ஆம் தேதி மீண்டும் வெலிக்கடையில் இரண்டாவது தடவையாகவும் தமிழ்க் கைதிகள் மீது தாக்குதல் 18 பேர் பலி. நாட்டில் நிலைமை மோசமடைந்தது .இரண்டு மூன்று நாட்களின் பின் ஊவா மாகாணம் பசறை லுணுகலையில் உள்ள மலைநாட்டு ஊர்களிலிருந்து பாதிப்படைந்த தமிழ் குடும்பங்கள் எப்படியோ உயிர் தப்பி வெறுங்கையுடன் அகதிகளாக வந்து சேர்ந்திருந்தார்கள்.
நான் முன்நின்று ஊரில் உள்ள பிரமுகர்களைக் கூட்டி அகதிகளாக வந்த குடும்பங்களுக்கு உதவவும் அவர்களை செங்கலடியில் குடியமர்த்தவும் வேண்டிய பணிகளை ஆரம்பித்தேன் .
சிற்றம்பலம் என்னைநெருங்கி வந்தார் . “உம்மோடு கதைக்கலாமோ” என்றார்
சொல்லுங்கள் என்றேன்.
“சொல்லுறன் எண்டு குறை நினையாதீங்கோ? வடக்கத்தியானுக்கு உதவுறீங்க .உவங்கள் நன்றி இல்லாதவர்கள் பாருங்கோ’
எனக்கு பத்திக் கொண்டு வந்தது .”இங்க பாருங்க மிஸடர் சிற்றம்பலம் அன்றைக்கு நான் ஏதோ சிங்கள ஆக்கள பாதுகாப்பாக ஊருக்கு அனுப்பி வச்சதுக்கு உங்கட அந்தத் தமிழ் உணரர்ச்சியை காட்டினீங்க .இப்ப சிங்கள ஆட்களிட்ட அடிபட்டு ஓடிவந்த தமிழ் அகதிளிட்ட உங்கட அந்த தமிழ் உணர்ச்சியக் காட்டாம அவங்களுக்கு உதவி செய்யாதீங்க என்று சொல்றீங்க.உங்க கொள்கைதான் என்னெண்டு எனக்கு விளங்கல்ல .ஆர் துன்பத்தில் இருக்கிறார்களோ அவர்களுக்கு உதவோணும். இதில் தமிழ் சிங்களமென்று இல்ல.எல்லாரும் மனிஷர்தான் உங்களைப் போல ஆக்களால் தான் நாட்டிலே இப்படிப்பட்ட பிரச்சனை எல்லாம் வருது”. என்று நெற்றிப் பொட்டில் அடித்த மாதிரிக் கூறிவிட்டு அவரை விட்டு அப்பால் நகர்ந்தேன்.
என்று கதையை முடிவுக்கு கொண்டு வருவார் .செங்கதிரோன்.
இவ்வாறு ‘யாவும் கற்பனையல்ல ‘என்ற தொகுப்பில் வரலாற்றுப் பதிவுகளாகவும் மனித நேயப் பண்புகளோடும் இடம்பெற்றுள்ள பல கதைகளை எடுத்துக்காட்டலாம்.
“ஊர்மானம் “என்றொரு கதை.
“கடவுளே இவள் என்ன காரியத்தைப் பார்த்தாள். எண்ட மானம் மரியாதை எல்லாம் போயித்தே. எண்ட வயித்தில இவளைப் போய் சுமந்தனே.” பூரணம் தன் தலையில் இரண்டு கைகளாலும் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்தாள். அவளின் அருகில் அவளது மற்ற மகள்களான நான்கு ‘குமர்’களும் திகைத்துக் கொண்டு செய்வதறியாது நின்றிருந்தனர்.
என்று கதை ஆரம்பிக்கிறது.
கதை இதுதான்.
மூத்தமகள் சுந்தரி, வீரச்சோலைக்கு குஞ்சாத்தையின் வீட்டுக்குப் போய் வருவதாகக் கூறிச் சென்றவள் வரவில்லை.
ஊர்மக்கள் கூடி வந்து, தந்தை செல்லையாவிடம் கேள்வி கேட்டனர்.
“மகள் சுந்தரிய இவன் கடைக்காரஉதுமான்ட மூத்த மகன் ரஹீம் கூட்டிட்டு போய் கசாது முடிச்சுப் போட்டான் .கசாதை முடிச்சுப் போட்டு இரண்டு பேரும் போலீசில் சொல்லி இருக்காங்க நாங்க களவுல கல்யாணம் முடிச்சிட்டம் ரெண்டு பேரும் விரும்பித்தான் முடிச்ச நாங்க. தாய் தகப்பனுக்கு தெரியாது அவங்களுக்கு பொலீசால தெரியப்படுத்துங்க எண்டு. கடக்கார உதுமானும் போலீசில் வந்து என்னப் போல தான் கண்கலங்கிக்கு நிண்டான். சுந்தரி எனக்கு பக்கத்துல வந்து குளறிட்டு நின்றாள்.அவள நான் வீட்டை கூட்டி வந்து என்ன செய்ற .அவளுக்கு இன்னொரு கல்யாணம் செய்து வைக்க எனக்கு ஏலுமா ?அவளுக்கு காலாகாலத்தில கல்யாணம் செய்து வச்சிரிந்தா ஒரு முஸ்லிம் பொடியனோட அவள் போயிருப்பாளா இன்னும் நாலு பொட்ட குஞ்சுகளை வச்சிருக்கிற நான் ஒண்டும் பேசாம பேயறைஞ்சவன் மாதிரி நின்டன். எல்லாத்துக்கும் நமது ஏழ்மைமை தானே காரணம்”
என்றார் செல்லையா.
இதனை ஏற்றுக் கொள்ளாத அந்தக் கிராமத்து இளைஞர்கள் சத்தமிடுகின்றனர்.
“என்ன செல்லையா அண்ணே உங்கட மூத்த மகள முஸ்லிம் பொடியனுக்கு கூட்டிக் கொடுத்துப் போட்டு வந்து நிக்கிறீங்க. வெக்கம் இல்லையா உங்களுக்கு .
ஊர விட்டு இவங்கள எழுப்போணும் இவங்களால ஊர்ரமானமும் எங்கட மானமும் தமிழண்ட மானமும் போய்த்து.”என்று ஒருவன் சத்தமிட்டுக் கத்தினான்.மற்றொரு இளைஞன் “அதுதாண்டா சரி” என்று ஆமோதித்துக் கூச்சலிட்டான். இவற்றை யெல்லாம் பார்த்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் மரக் குற்றியின்மேல் தலையில் கைவைத்துக் கொண்டு குனிந்து யோசித்துக் கொண்டிருந்த செல்லையா, திடீரென்று திமிர் கொண்டு எழும்பினான். “பொத்துங்கடா வாய. என்ன எங்கள ஊரை விட்டு எழுப்ப போறயளா? ஏலுமெண்டா அனுப்புங்கடா பாப்போம். அஞ்சு குமர்களையும் வச்சித்து கோழி அடகாக்குற மாதிரி நாங்க பொத்தி பொத்தி வச்சிருக்கக் குள்ள யாருடா வந்து பொண் கேட்டவன். இப்ப சொல்லுங்கடா கிளி போல இன்னும் நாலு பொம்பள பிள்ளைகள் என்னிட்ட இரிக்கி. ஊர்ர மானம் ,உங்கட மானம், தமிழன்டா மானம் என்று ரோஷம் பார்க்கிற உங்கள்ள இருந்து துணிச்சல் உள்ள ஆராவது முன்வாங்கடா என்ர மற்றப் புள்ளைகளை சந்தோஷமாக கட்டித்தாரன். இதுக்கு சம்மதமானவர்கள் வளவுக்குள்ள நில்லுங்க மற்றவனுகள் போங்கடா வெளியே. அதைஉட்டுப் போட்டு ஆராவது எங்கள ஊரை உட்டு எழுப்ப போறேன் என்று வளவுக்குள் கால் வச்சயளெண்டா அந்தக் கால கத்தியால் வெட்டி போட்டு மறியலுக்கு போறதுக்கு நான் ஆயத்தம்” என்றார் செல்லையா, தவளை பிடிக்க வென்று வீட்டுக்குள் நுழைந்த சாரைப்பாம்பு மண்ணெண்ணையை ஊற்றியவுடன் விரைவாக நழுவி வெளியே செல்வது போல் இளைஞர் கூட்டத்தினர் ஒவ்வொருவராக கடப்புக்கு வெளியே வீதிக்கு நழுவினர் என்று கதை முடிகிறது .
நாளாந்த வாழ்க்கையின் சாதாரண விடயங்களையும் கதையாக்கித் தரும் ஆற்றல் பெற்றவராகவும் செங்கதிரோன் அடையாளம் பெறுவதைஎடுத்துக்காட்டுவதற்கும்
நூலில் சில கதைகள் உள்ளன.
“குடை கவனம்”என்ற கதையில், “மழ தூறுது குடையைக் கொண்டுபோங்க குடை கவனம்” என்று மனைவி கூற அதனை எடுத்துக் கொண்டுபோனவர் குடையை மறக்காமல் கொண்டு வருவதற்காக எடுத்துக் கொண்ட பிரயத்தனங்களையும் இறுதியில் குடை காணாமற் போக புதுக் குடையொன்றை வாங்கி வந்து வீட்டில் சமாளிப்பதையும் மண் வாசனையோடு சொல்லிச்செல்கிறது “குடை கவனம் “சிறுகதை.
புதிது புதிதான, பேசப்பட வேண்டிய மையப் பொருட்களில் கதைகளைத் தந்திருக்கின்றார் கதைஞர் செங்கதிரோன்.
“சமகால ஈழத்து இலக்கியச் செல்நெறியிலிருந்து விலகி நிற்கின்ற, வித்தியாசமான செல் நெறிசார்ந்த சிறுகதைகளைக் கொண்டிருக்கின்ற நூலாக அணிந்துரையில் குறிப்பிடுகின்ற பேராசிரியர் செ. யோகராசா சமூக, போராட்ட, அரசியல் சார்ந்த முக்கியமான சிறுகதை நூலாகவும் இதனை அடையாளப் படுத்துகின்றார்.
“செங்கதிரோன் தனக்குரிய இயல்பான எழுத்து நடையில் ஒரு தவநிலையில் இருந்து எழுதித் தந்திருக்கின்ற நூல் ‘யாவும் கற்பனையல்ல’ என்று முன்னீட்டில் குறிப்பிடும் தீரன் ஆர்.எம்.தௌஷாத், “இவருக்குள் இயங்கும் ஒரு சமூகப் போராளியின் ஆக்ரோஷ வெளிப்பாடு சில கதைகளில் முனைப்புக் காட்டுகிறது அதே சமயம் அவர் கதைகளை ஒரு தீவிர போக்கில் சொல்லுகின்ற தன்மை ,செங்கதிரோனின் சமூக அக்கறையை வெளிக்காட்டுகிறது .மட்டுமின்றி, சமூக கொடுமைகளுக்கு எதிராகவும் தனிமனித சிறுமைத் தனத்திற்கு எதிராகவும் உரத்து குரல் கொடுக்கும் தன்மைகளும வெளிப்பட்டு நிற்கிறது என்று குறிப்பிடுவதையும் இங்கு எடுத்துக் காட்டலாம்.
நூலாசிரியருக்கு நமது வாழ்த்துகள்.
இன்னும் பல நூல்களைத் தர நமது பிரார்த்தனைகள்.
நூல்:- ‘யாவும் கற்பனையல்ல’
நூலாசிரியர்:- செங்கதிரோன் த. கோபால கிருஷ்ணன்.
விலை:- ரூபா-500-