ஹசீனா ஆட்சியில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட நிகழ்வுகளில் இந்தியா தொடர்பு- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சியின் போது கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களில் இந்தியாவின் தொடர்பு உள்ளதாக பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு கண்டறிந்துள்ளது.
மேலும், 3,500 க்கும் மேற்பட்ட வங்காளதேச பிரஜைகள் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்திருக்கலாம் என்றும் விசாரணைக் குழு மதிப்பிட்டுள்ளதாக பங்களாதேஷ் அரசு நடத்தும் செய்தி நிறுவனமான பி.எஸ்.எஸ். தெரிவித்துள்ளது.
பங்களாதேஷின் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி மைனுல் இஸ்லாம் சவுத்ரி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழுவின் அறிக்கையின் படி, சில கைதிகள் இன்னும் இந்தியச் சிறைகளில் வாடக்கூடும் என்று சட்ட அமலாக்க வட்டாரங்கள் தொடர்ந்து கருதுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், இந்தியாவில் இன்னும் சிறையில் இருக்கும் வங்காளதேச குடிமக்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சங்களிடம் நாங்கள் பரிந்துரைக்கிறோம்.
பங்களாதேஷுக்கு வெளியே காணால் ஆக்கப் பட்ட பிரஜைகள் வேறு நாடுகளின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பது ஆணையத்தின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது என்றும் விசாரணை அறிக்கை கூறியுள்ளது.
இந்தியாவுக்கும் வங்காளதேசத்துக்கும் இடையே சிறைப்பிடிக்கப்பட்ட பரிமாற்றங்கள் மற்றும் கைதிகளின் எதிர்கால நடவடிக்கைகள் பற்றிய புலனாய்வுத் தகவல்களைக் கண்டறிந்ததாக ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.
77 வயதான ஷேக் ஹசீனா, முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசுக்கு எதிரான போராட்டங்களின் பின்னர், கடந்த ஆகஸ்ட் 5 ஆம் திகதி இந்தியாவுக்குத் தப்பிச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது.