நீருக்கடியில் மூழ்கிய பழமையான நகரம்; 20 ஆண்டுகள் கடந்தும் வெளிவராத ரகசியம்!
குஜராத் மாநிலத்தின் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட 9,500 ஆண்டுகள் பழமையான நகரம் பற்றி பல யூகங்கள் வெளியாகி உள்ளன. இதை சிலர் பழங்கால இடம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு, 2002ஆம் ஆண்டு, குஜராத் மாநிலத்தின் கடற்கரையில் காம்பாட் (Khambhat) வளைகுடாவில் ஒரு நகரம் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொலைந்த நகரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நகரம் சுமார் 9,500 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கியதாக கூறப்படுகிறது. நகரம் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கியிருந்தாலும், எப்படி மூழ்கியது என்பது தற்போதுவரை மர்மமாகவே உள்ளது.
இந்த பெரிய நகரம் ஐந்து மைல் நீளமுள்ள காம்பாட் வளைகுடாவின் கீழ் அமைந்துள்ளது. இந்த பழங்கால கண்டுபிடிப்பு 120 அடி அரேபிய கடலுக்கு அடியில் உள்ளது. இது நாகரிகத்தை பற்றிய நமது புரிதலை மறுவரையறை செய்ய தூண்டுகிறது. இதில் மண் பானைகள், முத்துக்கள் மற்றும் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. கார்பன் டேட்டிங் படி, இந்த எலும்புகளில் சில, சுமார் 9,500 ஆண்டுகள் பழமையானவை என்று தெரியவந்துள்ளது.
கடலில் மூழ்கிய நகரத்தின் தோற்றம் பற்றி, 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் விவாதித்து வருகின்றனர். இது சிந்து சமவெளிக்கு முந்தையதாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கம்பாட் வளைகுடா குஜராத்தின் அரேபிய கடல் கடற்கரையில், மும்பை மற்றும் டையூ தீவின் வடக்கே அமைந்துள்ளது. இது கம்பத் வளைகுடா அல்லது காம்பே வளைகுடா என்றும் அழைக்கப்படுகிறது.
உயர் தெளிவுத்திறன் கொண்ட சோனார் ஸ்கேன்கள், கடல் தளம் முழுவதும் சிதறிய வடிவியல் கட்டமைப்புகளை வெளிப்படுத்துகின்றன. அதன் நன்கு வடிவமைக்கப்பட்ட வடிவங்கள் மனித தொடுதல் பற்றி பல தடயங்களை காட்டுகின்றன.
இந்தியாவின் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓஷன் டெக்னாலஜியின் முன்னாள் தலைமை புவி விஞ்ஞானியான பத்ரிநாராயண், சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முந்தைய ‘mother culture’-லிருந்து இந்த நகரம் வந்திருக்கலாம் என்று கூறியுள்ளார். மேலும், இது கடந்த ice age-க்கு பிறகு மூழ்கியிருக்கலாம் என்றும், இது முக்கிய வர்த்தக மையமாக இருந்திருக்கும் என்றும் கூறப்படுகிறது.
குஜராத் மாநிலத்தின் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த நகரம் பற்றி முழுமையாக தகவல் தெரியவந்தால் வரலாற்றை மாற்றி எழுத முடியும் என்று திரைப்பட தயாரிப்பாளர் கிரஹாம் ஹான்காக் தெரிவித்துள்ளார். ஏனென்றால், பண்டைய நாகரிகங்களைப் பற்றிய கதைகளுக்கு இந்த நகரம் பல சவால்களை முன்வைக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தின் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட 9,500 ஆண்டுகள் பழமையான நகரம் தொடர்பாக, கம்பாட் வளைகுடாவில் பல தசாப்தங்களாக ஆய்வு செய்த போதிலும், அதை பற்றிய முழுமையான தகவல் தெரியவில்லை.