கடைசியா எப்போ பீரியட்ஸ் ?; விசாரிக்கும் சீன அரசு அதிகாரிகள்!
பெய்ஜிங்: சீனாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்த, அந்நாட்டு அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பெண்களின் கருவுறுதலை தெரிந்துக்கொள்ளவும், அது குறித்து ஆய்வு மேற்கொள்ளவும் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள், பெண்களுக்கு ஃபோன் செய்து கடைசியாக எப்போது மாதவிடாய் வந்தது என்பது குறித்த விவரங்களை கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட முதல் நாடு என்கிற வரிசையிலிருந்த சீனா, தற்போது இரண்டாம் இடத்திற்கு சென்றிருக்கிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த 60களில் சீன அரசு மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக, பெரிய அளவில் மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்குள் வந்தது. ஆனால் எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் மக்கள் தொகை கட்டுக்குள் வந்ததால், சீனா சிக்கலை எதிர்கொள்ள தொடங்கியது. எனவே, கடந்த 2015ம் ஆண்டு நாமிருவர் நமக்கு ஒருவர் எனும் திட்டத்தை அந்நாடு கைவிட்டது.
ஆயினும் தொடர்ந்து மக்கள் தொகை குறைந்துக்கொண்டே வருகிறது. எனவே இது குறித்து ஆய்வு மேற்கொள்ளவும், ஆய்வின் அடிப்படையில் மக்கள் தொகை எண்ணிக்கையை பழைய மாதிரி மீட்டுக்கவும் சீன அரசு, அதிகாரிகளை நியமித்திருக்கிறது. இந்த அதிகாரிகள் திருமணமான ஒவ்வொரு பெண்களிடமும் குழந்தை பேறு குறித்து விசாரித்து வருகின்றனர். நம்மூரில் கிரிடிட் கார்ட் வேண்டுமா? என நச்சரிப்பார்களே, அதே பாணியில் சீனாவில் சுகாதாரத்துறை அதிகாரிகள் குழந்தை எப்போது பெற்றுக்கொள்ளப்போகிறீர்கள்? என கேட்டு போன் செய்து டார்ச்சர் செய்கிறார்களாம். இதனை சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தி ஊடகம் தெரிவித்திருக்கிறது. சீனாவில் வசிக்கும் பல பெண்களுக்கு இது போன்ற அழைப்புகள் சர்வ சாதாரணமானதாக இருப்பதாகவும், கடைசியாக எப்போது மாதவிடாய் வந்தது என்று கூட சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்பதாகவும் சவுத் சைனா மார்னிங் போஸ்ட் தெரிவித்திருக்கிறது.
மக்கள் தொகை சரிவு பிரச்னை சீனாவுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த உலகத்தையே பாதித்து வருகிறது. உலகம் முழுவதும் குழந்தைகளின் பிறப்பு விகிதம் பரவலாக குறைந்து வருகிறது. ஐரோப்பாவை எடுத்துக்கொண்டால் அங்கு சராசரியாக ஒவ்வொரு பெண்ணுக்கும் 1.22 என குழந்தை பிறப்பு விகிதம் இருக்கிறது. இது சர்வதேச சராசரியான 2.3 எனும் விகிதத்தை விட மிகவம் குறைவானதாகும். இங்கிலாந்தில் கடந்த 1938 முதல் குழந்தை பிறப்பு விகிதம் கணக்கெடுப்பட்டு வருகிறது. ஆனால், இந்த ஆண்டு முன்னெப்போதை விடவும் பிறப்பு விகிதம் சரிந்திருக்கிறது என அதிகாரிகள் கூறுகின்றனர்.
மறுபுறம் ஏராளமான குழந்தைகளுக்கு சுகாதாரமான வாழ்க்கையும், உணவும் கிடைக்காமல் இருக்கிறது. இந்த ஏற்றத்தாழ்வு நீக்கப்பட்டால், சர்வதேச அளவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் சமமானதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. என்ன மக்களே மக்கள் தொகை பெருக்கம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?