சீனாவுக்கு லட்சக்கணக்கில் கழுதைகளை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்
சீனாவுக்கு ஆண்டுதோறும் கழுதைகளை லட்சக்கணக்கில் ஏற்றுமதி செய்வதற்கு பாகிஸ்தான் சீனாவுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் பல நூறு கோடி ரூபாய் வருமானம் பாகிஸ்தானுக்கு கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் தற்போதைய நிலவரப்படி சுமார் 52 லட்சம் கழுதைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் மாடுகள் அதிக அளவு இறைச்சிக்கு பயன்படுத்தப்படுகின்றன. அதனுடன் ஒப்பிடும்போது கழுதைகள் அவ்வளவாக இறைச்சிக்கு பயன்படுத்தப்படுவது கிடையாது.
இந்த நிலையில் சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் சீனாவுக்கு ஆண்டுதோறும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கழுதைகளை ஏற்றுமதி செய்ய பாகிஸ்தான் அரசு உறுதி அளித்துள்ளது. சீனாவுக்கு தோல் மற்றும் இறைச்சியை ஏற்றுமதி செய்யும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏற்கனவே பொருளாதார பிரச்சனையில் சிக்கி தவித்து வரும் பாகிஸ்தானுக்கு, சீனாவின் இந்த ஒப்பந்தம் சரிவிலிருந்து மீள ஓரளவு கை கொடுக்கும் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறியுள்ளனர்.
நீண்ட கால அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் மூலம் சில நூறு கோடி ரூபாய் பாகிஸ்தானுக்கு வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவை பொறுத்த அளவில் அங்கு பாரம்பரிய மருத்துவத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இதற்காக கழுதையுடைய தோல்கள் அதிகளவு பயன்படுத்தப்படுகின்றன. சீனாவில் அந்நாட்டின் தேவைக்கு தகுந்தார் போல் கழுதைகள் எண்ணிக்கை கிடையாது. இதனால் வெளிநாடுகளில் இருந்து அவற்றை இறக்குமதி செய்ய அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேபோன்று உணவுக்காகவும் சீனாவில் கழுதை அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. கழுதை இறைச்சியை பயன்படுத்தி வித விதமான உணவுப் பொருட்களை சீனர்கள் தயாரிக்கின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் உடன் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் பலன் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.