திருடர்களை பிடிப்பதில் அரசாங்கம் அவசரப்படாது – பிரதமர் ஹரிணி !
திருடர்களைப் பிடிக்கும் விடயத்தில் அரசாங்கத்திற்கு அவசரம் கிடையாதென, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
திருடர்களைப் பிடிப்பதற்கு ஏன் இந்தளவு தாமதம் என திருடர்களே தம்மை கேட்பதாக தெரிவிக்கும் பிரதமர், இவை,முறையாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் எனவும் அரசாங்கம் அந்த விடயத்தில் அவசரப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.
கெஸ்பேவ நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற, கெஸ்பேவ தொகுதி தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அங்கு மேலும் தெரிவித்துள்ள பிரதமர்,
திருடர்களைப் பிடிப்பதில் தாமதம் ஏன்? என திருடர்களே எம்மிடம் கேட்கின்றனர். நாம் அவர்களுக்குக் கூறுவது குழப்பமடைய வேண்டாம். நாம் திருடன், பொலிஸ் விளையாட்டை நடத்துபவர்கள் அல்ல. அத்துடன் அவர்களைப் போன்று நாடகம் நடத்துபவர்களும் அல்ல.
தற்போது நாட்டைக் கட்டி யெழுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். திருடர்களைப் பிடிப்பது ஊடகங்கள் முன்னாள் நடத்தப்படும் நாடகம் கிடையாது. நாம் அவர்களைப்போன்று திருடர்களைப் பிடித்து சிறையிலோ அல்லது வைத்தியசாலையிலோ வைத்து பின்னர் கையொப்பம் தவறாக உள்ளது எனக் கூறி, அவர்களை விடுவிப்பவர்களும் அல்ல.
இதனை உரிய வகையில் சட்டத்திற்கு இணங்க மேற்கொள்வோம். திருடர்களுக்கு சரியான தண்டனையை வழங்குவது அவசியம். அதனை முறையாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில்,எமக்கு குழப்பமோ அவசரமோ கிடையாது அதனை முறையாக மேற்கொள்வோம்.
திருடர்களுக்கு சிறைக்கு செல்வதில் அவசரம் காணப்பட்டாலும். எமக்கு எந்தவித அவசரமும் கிடையாது. எமது உடன்படிக்கை, தோல்வியுற்ற கட்சிகளுக்கோ அல்லது நபர்களுக்கோ பதில் அளிப்பது அல்ல. இந்த உடன்படிக்கை மக்களுடனானது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.