கந்தசஷ்டி விரதம் நாளை ஆரம்பம்!
தமிழ் கடவுளாகிய முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபட உகந்த நாட்களில், கந்தசஷ்டி விரதம் மிக முக்கியமான விரதமாகும்.
மாதந்தோறும் சஷ்டி திதி வந்தாலும், ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டி திதிதான் ‘கந்தசஷ்டி’ விழாவாக கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாத வளர்பிறை பிரதமை திதியில் தொடங்கி, சஷ்டி திதி வரையான 6 நாட்கள், கந்தசஷ்டி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
முருகப் பெருமானின் அவதார நோக்கமான அசுரர்களை வதம் செய்து, தேவர்களை காத்தருளிய காலமே இந்த கந்தசஷ்டியின் ஆறு நாட்களும்.
தேவர்கள், முருகனை வேண்டி பலன் பெற்ற இந்த காலத்தில் நாமும் முருகனை வழிபட்டால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் கொடுமையான துன்பங்களையும் நீக்கி, நம்மையும் முருகப் பெருமான் காத்திடுவார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
கந்த சஷ்டி திருவிழா ஐப்பசி அமாவாசையை அடுத்த ஆறு நாட்கள் கொண்டாடப்படுகிறது.
தீமையான சூரபத்மனை எதிர்த்து நன்மையான முருகப்பெருமான் வெற்றி பெற்றதன் அடையாளமாக இவ்விழா நடத்தப்படுகிறது.
இவ் விழாவின் முக்கிய நிகழ்வானது 6 நாட்கள் விரதமுறையைக் கடைப்பிடிப்பது ஆகும்.
இந்த ஆண்டு கந்தசஷ்டி விரதம் நவம்பர் 02 ஆம் திகதி துவங்கி, நவம்பர் 08 ஆம் திகதி வரை கடைபிடிக்க வேண்டும்.
கந்தசஷ்டி விரதம் யார் வேண்டுமானாலும் இருக்கலாம் என்றாலும் குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு மிக முக்கியமான விரதமாக இது கருதப்படுகிறது.
சஷ்டி விரதத்தை பல வகைகளில் கடைபிடிக்கலாம்.
இவற்றில் எது முறை யாருக்கு ஏற்றதோ அந்த முறையை பின்பற்றி விரதம் இருக்கலாம்.
காப்பு கட்டி விரதம் இருக்க நினைப்பவர்கள் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்றோ அல்லது வீட்டிலேயே காப்பு கட்டிக் கொண்டோ, வீட்டில் உள்ள பெரியவர்கள் கைகளால் காப்பு கட்டிக் கொண்டோ விரதத்தை துவக்கலாம்.
நவம்பர் 02 ஆம் திகதி காலை 6 மணிக்கு முன்பாக காப்பு கட்டிக் கொண்டு விரதத்தை துவக்கி விட வேண்டும்.
விரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினை கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம்.
விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து நீராடி தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிந்து, காலையும் மாலையும் வீட்டின் சுவாமி அறையில் விளக்கேற்றி, வீபூதி பூசி, தேவராங்கள் பாடுதல் வேண்டும் அத்துடன் கோயில் வழிபாடு செய்தல் மிகவும் நன்று.
அசுர சக்திகளின் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும் மலங்களை மட்டுமன்றி ஆறுவகை எதிரிகளான காமம், கோபம், பேராசை, செருக்கு, மயக்கம், பெருமை ஆகிய வகைகளை அழித்து முற்றுணர்வு, வரம்பிலாற்றல், தன் வயமுடைமை, வரம்பின்மை, இயற்கையுணர்வு, பேரருள் ஆகிய தேவ குணங்களை நிலை நாட்டியதால் கந்த சஷ்டி விரதமே பெருவிழாவாக அனுஷ்டிக்கப்படுகின்றது.