“பதவியேற்கும் முன் காசா போரை முடிக்க வேண்டும்” நெதன்யாகுவிற்கு ட்ரம்ப் அழுத்தம்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று பதவியேற்கும் நேரத்தில் காசா போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் டொனால்ட் ட்ரம்ப் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
ட்ரம்ப் மற்றும் நெதன்யாகுவுக்கு நெருக்கமானவர்களை மேற்கோள் காட்டி டைம்ஸ் ஓப் இஸ்ரேல் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, விரைவில் இஸ்ரேல் போரில் வெற்றிபெற வேண்டும் என்று நெதன்யாகுவிடம் வலியுறுத்தியதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போருக்குப் பிறகு காசாவின் பாதுகாப்பை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரப்போவதாக நெதன்யாகு அறிவித்துள்ளார்.
இந்நிலையில், ஹமாஸ் மீண்டும் ஒருங்கிணைக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க காசாவிற்குள் ஒரு இடையக மண்டலத்தை நிறுவுவதாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளிப்படுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், 101 பணயக்கைதிகள் ஒப்படைக்கப்பட்டவுடன் போரை முடிவுக்கு கொண்டுவரும் ஒப்பந்தத்தை ஏற்க நெதன்யாகு தயாராக இல்லை எனவும், நெதன்யாகு போரை உடனடியாக முடிக்கத் தயாராக இல்லை என்பதே இதன் பொருள் எனவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
முன்னதாக ஜூலை மாதம் குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் பேசியிருந்த ட்ரம்ப், தான் பதவியேற்கும் முன் பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கவில்லை என்றால், பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்திருந்தார்.
ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு ஜூலை மாதம் முதல் பல சந்திப்புகளை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், காசா போரை உடனடியாக நிறுத்தக் கோரி நெதன்யாகுவுக்கு டிரம்ப் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பது குறித்து இரண்டு மூத்த இஸ்ரேலிய அதிகாரிகள் தி டைம்ஸ் ஓப் இஸ்ரேலுடன் தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜனவரியில் பதவியேற்கும் முன் போரை முடிவுக்குக் கொண்டு வர முடியாவிட்டால், அது அமெரிக்காவுடனான இஸ்ரேலின் நல்லுறவைக் கெடுக்கும் என்பது ஒரு கவலை.
மேலும், யுத்தத்தை விரைவாக முடிவுக்கு கொண்டுவருவதற்கு உள்ளக அரசியல் தடையாக இருப்பதாகவும் அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.