ஸ்பெயினில் பேரழிவை ஏற்படுத்திய இயற்கை அனர்த்தம்; 95 பேர் உயிரிழப்பு
தென்கிழக்கு ஸ்பெயினில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது.
அவற்றில் 92 இறப்புகள் வலென்சியாவில் மட்டும் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் இரண்டு இறப்புகள் Castilla-La Manchaலும், மற்றொன்று மலகாவிலும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஸ்பெயினின் பாதுகாப்பு மற்றும் அவசரநிலைத் துறை, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானிலை எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.
காஸ்டெல்லோன், வலென்சியா மற்றும் அலிகாண்டே ஆகிய இடங்களுக்கு மழைக்கான மஞ்சள் மற்றும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், வலென்சியா மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் ஸ்பெயின் வரலாற்றில் அதிக விலைகொடுக்க நேரிட்ட இயற்கை பேரழிவு என காப்பீட்டு ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர.
முன்னதாக 1983ஆம் ஆண்டு பிஸ்கேயில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு மிகவும் விலைகொடுக்க நேரிட்டதாகவும், அப்போது 977 மில்லியன் யூரோ காப்பீடாக வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் வலென்சியாவில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரழிவு இன்னும் மோசமாக இருக்கலாம் என காப்பீட்டு ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வலென்சியா மற்றும் பிஸ்கேயில் ஏற்பட்ட இயற்கை பேரழிவின் போது முக்கியமான வேறுபாடுகள் உள்ளதாகவும், 2024ஆம் ஆண்டின் மதிப்பீட்டில் ஸ்பெயினில் அதிக கார்கள் இயக்கப்படுவதாகவும், அதனால் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக அதிகளவான காப்பீட்டு தொகை வழங்க நேரிடும் எனவும் விபரிக்கப்பட்டுள்ளது.