பயத்தில் இஸ்ரேல் பிரதமர் மகனின் திருமணம் ஒத்திவைப்பு
இஸ்ரேல்-ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இடையில் மோதல் வலுத்துள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நவம்பர் 26ஆம் திகதி வடக்கு டெல் அவிவ் பகுதியில் நடைபெறவிருந்த தனது மகனின் திருமணத்தை ஒத்திவைத்ததாக கூறப்படுகிறது.
தற்போதைய மோதல்கள் மற்றும் வடக்கில் இருந்து வரும் ட்ரோன்களின் அச்சுறுத்தல் காரணமாக திருமணத்தை ஏற்பாடு செய்வது ஆபத்தானது என்று இஸ்ரேல் பிரதமருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஹிஸ்புல்லாவின் புதிய தலைவர் நசிம் காசிம், பல மாதங்களுக்கு போராட முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். எனினும், போர் நிறுத்தத்திற்கு தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த மாதம் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவின் வீடு, ட்ரோன் தாக்குதலில் குறிவைக்கப்பட்டதுடன் வீட்டின் சிறய பகுதிக்கு சேதம் ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து தன்னையும், தனது மனைவியையும் படுகொலை செய்ய முயன்ற பிரதமர் நெதன்யாகு குற்றம் சாட்டினார், மேலும் அவர்கள் அதற்கான விலையை செலுத்துவார்கள் என்று சபதம் செய்தார்.
இதேவேளை, காசா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான புதிய ஒப்பந்தம் குறித்து விவாதிக்க தயாராக இருப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
இதன்படி, காசா போரை முடிவுக்குக் கொண்டுவர மத்தியஸ்தர்களிடமிருந்து புதிய திட்டங்களை ஆய்வு செய்து வருவதாக அந்த அணியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
“காசாவில் உள்ள எங்கள் மக்களின் துன்பங்களை முடிவுக்குக் கொண்டுவரும், நிரந்தர போர்நிறுத்தத்தை அடைவதற்கும், காசா பகுதி முழுவதிலும் இருந்து ஆக்கிரமிப்பை திரும்பப் பெறுவதற்குமான எந்த ஒப்பந்தம் அல்லது யோசனைகளுக்கும் தமது அமைப்பின் கதவு திறந்திருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் தலைமையிலான கடலோரப் பகுதி முற்றுகையை முடிவுக்குக் கொண்டு வரவும், கட்டுப்பாடற்ற நிவாரண உதவிகள் மற்றும் காசாவின் மறுகட்டமைப்பை அனுமதிக்கவும், இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளுக்காக காசாவில் இஸ்ரேலிய பணயக்கைதிகளை மாற்றவும் ஒரு ஒப்பந்தம் வேண்டும் அவர் வலியுறுத்தியுள்ளார்.