உக்ரேன் மோதலை தீர்க்க அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு; புட்டினிடம் மோடி தெரிவிப்பு!
கசானில் ஆரம்பமான 16 ஆவது பிரிக்ஸ் (Brics) உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினைச் சந்தித்தார்.
இதன்போது, உக்ரேன் மோதலுக்கு அமைதியான முறையில் தீர்வு காண அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க இந்தியா விருப்பம் கொண்டுள்ளதாக மோடி தெரிவித்தார்.
கடந்த மூன்று மாதங்களில் ரஷ்யாவிற்கு மேற்கொண்ட இரண்டு பயணங்களையும் நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, அவை எங்களின் நெருங்கிய ஒருங்கிணைப்பு மற்றும் ஆழமான நட்பை பிரதிபலிக்கின்றன என்றும் கூறினார்.
புட்டினைத் தவிர இந்தியப் பிரதமர், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கைச் சந்திப்பார் என்றும், மற்ற பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யா-உக்ரேன் போர் மற்றும் மத்திய கிழக்கு நெருக்கடி உள்ளிட்ட உலகளாவிய அமைதியின்மையை அடுத்து இந்த உச்சிமாநாடு நடைபெறுகிறது.
மூன்று நாள் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் 22 உயர்மட்ட நாடுகள் உட்பட 36 நாடுகளின் அதிகாரிகள் மற்றும் ஆறு சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
பன்முகத்தன்மையை வலுப்படுத்துதல், புதிய உறுப்பினர்களை ஒருங்கிணைத்தல் மற்றும் பிராந்திய சவால்களை எதிர்கொள்வது பற்றிய விவாதங்கள் தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்படவுள்ளன.
இந்த மாநாட்டுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தலைமை தாங்குகிறார்.
இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் உச்சிமாநாட்டின் போது, புட்டின் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உச்சிமாநாட்டின் இறுதி நாளில் துருக்கி மற்றும் ஈரானைச் சேர்ந்த தனது சகாக்களையும் புட்டின் சந்திக்கவுள்ளார்.
உச்சிமாநாட்டின் முடிவில் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் ஒரு கூட்டு பிரகடனத்தை ஒப்புக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக ரஷ்ய ஊடகமான ஸ்புட்னிக் தெரிவித்துள்ளது.