ரவி கருணாநாயக்கவால் ஐ.தே.க.வுக்கு பாதிப்பு?
ஐக்கிய தேசியக் கட்சியில் முக்கிய பதவிகளை வகிக்கும் நான்கு பேர் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமை கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவும் மத்திய வங்கி பிணைமுறி சர்ச்சையில் சிக்கியுள்ள ரவி கருணாநாயக்கவுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளமை வாக்களிப்பில் தாக்கத்தை செலுத்துமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னமான யானையோ தேர்தலில் முன்வைக்கப்படாமல் ரணில் போட்டியிட்டு தோல்வியடைந்த எரிவாயு சிலிண்டர் சின்னம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம், கட்சியின் செயலாளர் நாயகம் பாலித்த ரங்கே பண்டார மற்றும் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன ஆகியோர் இம்முறை போட்டியிடவில்லை.ஐக்கிய தேசியக் கட்சியில் முக்கிய பதவிகளை வகிக்கும் நான்கு பேர் ஒரே நேரத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடாதது ஐக்கிய தேசியக் கட்சியின் வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும்.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட புதிய ஜனநாயக முன்னணியில் இருந்து எரிவாயு சிலிண்டர் அடையாளத்துடன் கூடிய ஐ.தே.க பிரதிநிதிகள் உட்பட ரணிலுக்கு ஆதரவளித்தவர்கள் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது இடம்பெற்ற சர்ச்சைக்குரிய பிணைமுறி விவகாரம் காரணமாக அப்போது நிதியமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க பாரிய குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கி, பின்னர் அவர் நிதியமைச்சர் பதவியில் இருந்து விலக நேரிட்டது. பின்னர் அந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பொலிஸார் கைது செய்தனர்.
இதன்படி சிலிண்டர் சின்னம் நான்கரை இலட்சம் வாக்குகளைப் பெற்றால் ரவி கருணாநாயக்க சிலிண்டரின் தேசியப்பட்டியலைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு நிச்சயமாக வருவார். இப்போதும் அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பிணைமுறி மோசடி தொடர்பில் மீள விசாரணை செய்து சம்பந்தப்பட்ட அனைவரையும் தண்டிப்பதாக மக்களுக்கு வாக்குறுதியளித்துள்ளதால் மீண்டும் ரவி கருணாநாயக்கவுக்கு நெருக்கடி ஏற்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.