பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்காத பிரதான கட்சிகள்!
பொதுத் தேர்தலில் நான்கு பிரதான கட்சிகளிலும் பெண் வேட்பாளர்களுக்கு மிகவும் குறைவாகவே வாய்ப்புகள் வழங்கப்படடுள்ளமை வேட்பாளர் பட்டியல்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் தெரியவந்துள்ளது.
பொதுத் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில், பிரதானக் கட்சிகளான தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி, புதிய ஜனநாயக முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியன தமது தீவிர பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளன.
இந்த நிலையில், நாட்டில் கடந்த 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பாரிய அரசியல் புரட்சிகள் நாட்டு மக்கள் மத்தியில் கடுமையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியதன் விளைவாகதான் தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தை கைப்பற்றியதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், அந்த அரசியல் புரட்சிக்கு ஏற்ப தேசிய மக்கள் சக்தி மாத்திரமல்ல எந்தவொரு பிரதான அரசியல் கட்சியிலும் பெண் வேட்பாளர்களுக்கான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இந்த நான்கு கட்சிகளிலும் 1019 பேர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுகின்றனர். தேசிய பட்டியல் ஊடாக 29 பேர் தெரிவுசெய்யப்பட உள்ளனர்.
வேட்பாளர் பட்டியலில் 85 பேர் மாத்திரமே பெண் வேட்பாளர்களாக உள்ளனர். இது 8 வீதமான ஒதுக்கீடாகும். அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தப்பட்டசமாக ஒரு பெண் வேட்பாளரையாவது நிறுத்தியுள்ள கட்சியாக தேசிய மக்கள் சக்தி உள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி 13 மாவட்டங்களில் ஒரு பெண் வேட்பாளரை குறைந்தப்பட்சமாக நிறுத்தியுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி 11 மாட்டங்களிலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 5 மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் ஒரு பெண் வேட்பாளரை நிறுத்தியுள்ளது. இவற்றில் நான்கு மாவட்டங்களில் பெண் தலைமைகளும் உள்ளன. கொழும்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் தேசிய மக்கள் சக்தி போட்டியிடுகிறது.
இரத்தனபுரி மாவட்டத்தில் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் புதிய ஜனநாயக முன்னணி போட்டியிடுவதுடன், புத்தளத்தில் சட்டத்தரணி சமரி பிரியங்கா மற்றும் வன்னியில் அமரசேகர லியனாராச்சிகே துஷாரி தலைமையில் பொதுஜன பெரமுன போட்டியிடுகிறது.
அதிகபட்சமாக 32 பெண் வேட்பாளர்களுக்கு தேசிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் சக்தி 14 பேருக்கும் வாய்ப்புகளை வழங்கியுள்ளன. கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் 25 வீதமான பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட போதிலும், அந்த நடைமுறையை நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சியும் பின்பற்றவில்லை.
உள்ளூராட்சிமன்ற தேர்தல் சட்டத்தை போன்று பெண் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த நாடாளுமன்ற மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் சட்டங்களும் மாற்றியமைக்கப்பட வேண்டுமென சிவில் அமைப்புகளும், மக்களும் தொடர்ச்சியாக கோரிக்கைகளை விடுத்து வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.