வீதியில் கிடந்த தக்காளிக்கு இரவு முழுவதும் பொலிஸ் பாதுகாப்பு?
வீதியில் கொட்டப்பட்ட தக்காளிக்கு இரவு முழுவதும் பொலிஸ் அதிகாரிகள் காவல் காத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடந்த 15 -ம் திகதி அன்று, இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், கான்பூர் பகுதி அருகே 18 டன்கள் தக்காளிகளை ஏற்றிக்கொண்டு லொறி ஒன்று சாலையில் வந்துள்ளது.
அப்போது, மாடு ஒன்று குறுக்கே வந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லொறி நிலைதடுமாறி கீழே விழுந்தது. இதனால், லொறியில் இருந்த அனைத்து தக்காளிகளும் வீதியில் சிதறின.
மேலும், லொறியின் பின்னால் வந்த இருசக்கர வாகனத்தில் இருந்த பெண்ணும் காயமடைந்தார். தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர், சம்பவம் நடைபெற்றது இரவு நேரம் என்பதால் வீதியில் சிதறிய தக்காளியை சேகரிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் விடியும் வரை தக்காளியை பாதுகாக்க முடிவு செய்யப்பட்டது.
அதாவது, தக்காளி விலை கிலோவுக்கு ரூ.100 விற்கப்படும் நிலையில் திருடு போகும் நிலை உள்ளது. இதனால், இரவு முழுவதும் பொலிஸார் தக்காளிக்கு காவலாக நின்றிருக்கின்றனர். இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.